வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: 2010

Monday, July 5, 2010

என் 'மனசு'க்கு வாங்க..!

நண்பர்களே...

இன்று முதல் எனது இடுகைகள் எல்லாம் மனசு வலைத்தளத்தில் மட்டுமே பதிவு செய்கிறேன். தயை கூர்ந்து நண்பர்கள் அனைவரும் என் மனசுக்குள் வந்து (சு)வாசிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். என்னை பின் தொடரும் நண்பர்கள் அனைவரும் தயைகூர்ந்து சிரமம் பாராது என் மனசை பின் தொடரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.



'மனசு' எனக்கு மிகவும் பிடித்த பெயர். இதற்கான காரணம் எனது ஆரம்ப இடுகைகளில் இருக்கின்றது. இருந்தாலும் சொல்கிறேன். நான் கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களுடன் இணைந்து நடத்திய கையெழுத்துப் பிரதியின் பெயர் இது. எனக்கும் எழுதும் ஆவலையும் பத்திரிக்கை மீதான காதலையும் கொடுத்தது இந்தப் பெயர். எனவே கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள் மற்றும் சிறுகதைகள் எல்லாம் இனி என் மனதில் மட்டுமே.

இன்று எனது பந்தயம் என்ற சிறுகதையை பகிர்ந்துள்ளேன். படித்து ஓட்டும், பின்னூட்டமும் மறவாமல் பின் தொடரவும் உங்களை என் மனசுக்கு அழைக்கிறேன்.

உங்கள் நட்பு தொடரும் என்ற நம்பிக்கையில்......

என்றும் நேசங்களுடன்,

சே.குமார்.




Tuesday, June 29, 2010

வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!

என்ன எல்லாரும் நல்லாயிருக்கீங்களா...? பார்த்து பல நாளாச்சு..? எப்படியிருக்கீங்க..? ஊருக்குப் பொயிட்டு வந்து ரெண்டு நாள் ஆயாச்சு... வேலைக்குப் போனாலும் வேலை ஓடலைங்க... மனைவி, குழந்தைகளின் கஷ்டம் போனிலும்... மனக்கண்ணிலும்...

பிளாக்கில் எழுதவோ, உங்கள் எழுத்துக்களை படிக்கவோ நினைக்கும் மனநிலை எனக்குள் இன்னும் வரவில்லை. இருந்தும் ஒரு சிலரின் எழுத்துக்களை படித்து பின்னூட்டமிட்டேன். பலரை படிக்கவில்லை.

மன ஓட்டத்தை காரைக்குடியில் இருந்து அபுதாபிக்கு மாற்ற சில நாட்கள் ஆகலாம். நான் வரும்போது என்னிடம் அழுத மனைவியையும் என் கழுத்தைக் கட்டிக் கொண்டு கதறிய என் மகளும்... இன்று மாலை கூட அப்பா... வா...ப்பா என்று மழலையாய் போனில் அழைக்கும் என் ஒன்றரை வயது மகனின் குரலும் எனக்குள் தனிமையில் அழுகையை வெளிப்படுத்தினாலும் உங்கள் ஆக்கங்கள் என் மனபாரத்தை குறைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் என்னையே நினைத்து இருக்கும் மூன்று ஜீவன் களுக்கும் என் பேச்சு மட்டுமே ஆறுதல்...

அவர்களின் பாரம் கரையும் நேரத்தில் எனக்கு ஓராண்டு முடிந்து மீண்டும் விடுமுறை கிடைக்கும்.

ஓகே நண்பர்களே... நண்பர் நாடோடி இலக்கியன் தொடர்பதிவுக்கு அழத்திருக்கிறார். விரைவில் எழுதுகிறேன் நண்பரே... அப்புறம் இன்னொன்னு இப்ப எங்க புராஜெக்ட் அரசு அலுவலகத்தில்.

எனவே நான் சில நாட்களுக்கு அபுதாபியில் இருந்து 50கிமீ பயணித்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம். மாலை ஆறுமணிக்கு வரும்போது சோர்வும் கூட வருகிறது.

நான்கு வலையையும் ஒன்றாய் கொண்டு வரலாம் என்று நினைக்கிறேன். உங்கள் எண்ணத்தை எனக்கு பின்னூட்டமிடவும். தொடரும் நாட்களில் தொடரும் என் எழுத்து... நன்றிகள் பல...

மங்கையர் சிகரத்தில் தொடர்ந்து மூன்று கதைகள் வெளியாகியிருக்கின்றன. எனது வலையில் வெளியான சிறுகதைகளான மனசு, காதலி மனசைக் காதலி, காதல் ஆகியவை அவை.
மங்கையர் சிகரம் படிக்க தமிழ்சிகரத்திற்குள் சென்று லிங்கை கிளிக் செய்து படிக்கவும். உங்கள் படைப்புக்களையும் அவர்களுக்கு அனுப்பி தற்பொழுதுதான் காலாண்டில் அடியெடுத்து வைத்து தவழும் நிலையில் இருக்கும் அவர்களை கரம் பிடித்து தூக்கிவிடுங்கள்.

நட்புடன்
சே.குமார்.




Friday, May 7, 2010

காதலி மனசைக் காதலி

(போட்டோ உதவி : Google Search Engine)

கட்டுண்ட காதல் ஜோடிகள், குதூகலிக்கும் குடும்பங்கள், அலையோடு விளையாடும் இளசுகள் என அந்தி மயங்கும் வேளையில் களை கட்டியிருந்தது மெரினா கடற்கரை.

சுடிதாருக்குள் முகம் மறைத்து முத்த யுத்தம் நடத்தும் ஜோடிகளுக்கும் மணலில் மெத்தை அமைத்து விளையாடும் ஜோடிகளுக்கும் படகு மறைவில் மறைந்து தேடும் ஜோடிகளுக்கும் மத்தியில் கடல் அலையை ரசித்துக் கொண்டிருந்தனர் சாராவும் சங்கரும்.

ஒடி வரும் அலையையும் அதனை துரத்திவரும் அலையையும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ரசித்துக் கொண்டிருந்தாள் சாரா. கடல் காற்றில் அலையும் அவளின் காதோர கார்குழலை ரசித்துக் கொண்டிருந்தான் சங்கர்.

"ஏய அங்க பார்ரா... அந்த அலையை ஒண்ண ஒண்ணு விரட்டிக்கிட்டு வந்தாலும் பிடிபடாம கரைக்கு வருது பாரேன்"

"ம்..." என்ற ஒற்றை வரியில் பதில் அளித்தவனின் கை அவளது விரல்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தது.

ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தவள் மீண்டும் அலையை ரசிக்க ஆரம்பித்தாள். அருகே ஒரு குழந்தை அலை வரும் போது ஓடிவருவதும் பின்னர் தண்ணீருக்குள் செல்வதுமாக இருந்தது.

"சங்கர்... அந்த வாண்டைப் பாரு... அலையோட விளையாடுறதுல அதுக்கு எவ்வளவு சந்தோஷம்... அது சிரிக்கிறப்போ அழகா இருக்குல்ல"

"ம்... உனக்கும் அதுபோல பாப்பா வேணுமா..? நான் ரெடியா இருக்கேன்" என்றபடி கைகளை அவளது இடுப்பில் வைத்தான்.

கையை தட்டிவிட்டபடி " என்ன சார் இன்னைக்கு ரொமாண்டிக் மூடுல இருக்காப்புல இருக்கு. சாமி... எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்... பேசாம அலைய வேடிக்கை பாருங்க... சீக்கிரம் ரெண்டு வீட்டுலயும் சம்மதம் வாங்கப் பார்ப்போம். அப்புறம் பெத்துகிறதைப் பத்தி யோசிப்போம்." என்றாள் அவனை சீண்டும் விதமாக.

"ம்... நாலு வருஷமா இதே தான்... என்ன செய்ய... நமக்குன்னு வந்த காதல் இப்படி.. அவனவன் எங்கயோ போறான்..." வாய்க்குள் முனங்கினான்.

"என்ன சொன்னே... சத்தமா சொல்லு..."

"ஒண்ணுமில்லே..."

"இல்ல எதோ முனங்கினாய்... சும்மா சொல்லு..."

"கோவப்படக்கூடாது சரியா... அப்பதான் சொல்லுவேன்..."

"சரி... சொல்லு"

"இல்ல அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாரு... எத்தனை பேரு சுடிதாரை மூடிக்கிட்டு இதழ் பரிமாற்றம் செய்யிறாங்க... நீ ஒருதடவையாவது..."

"கொடுக்கலையா... உனக்கு முத்தம் கொடுக்கலையா அடப்பாவி நாக்கு அழுகிடாம..."

"ஆமா... கன்னத்துல கொடுக்கிறதெல்லாம் காதல் முத்தமா... பக்கத்து வீட்டுப் பாப்பா ஒரு நாளைக்கு எத்தனை முத்தம் கொடுக்கிறா தெரியுமா?"

"எனக்கு அது புடிக்கலை."

"ம்... அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்... அங்க பாரு அது ரெண்டையும் பார்த்த ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கு. நானும் அரைமணி நேரமா பார்க்கிறேன் ரெண்டும் வாய்க்குள்ள அப்படி என்ன தேடுதுகன்னு தெரியலை..."

"கருமம்..."

"சரி அதை விடு இந்தப்பக்கம் பாரு... மடியில் படுக்க வச்சு தொப்புள்ள எதையோ தேடுறான்... "

"அதுக்கென்ன இப்போ... படவா உதை படப்போறே... இதுக மாதிரி நடந்துக்கிட்டாதான் காதல்னா அது மாதிரி எவளையாவது பார்த்துக் காதலி எனக்கு அந்த மாதிரி எல்லாம் காதலிக்கப் பிடிக்காது..." என்றாள் கோபமாக.

"சரி... இப்ப எதுக்கு கோபம் சும்மாதானே சொன்னேன்."

"உள் மனசுல இருக்கிறதுதானே வெளியே வரும். உனக்கு இப்ப அந்த மூடு மட்டும்தான் இருக்கு..."

"ஐயோ கோபத்தைப் பாரு... எதுக்கெடுத்தாலும் கோபம்... கோபப்பட மாட்டேன்னு சொன்னதாலதான் சொன்னேன். இல்லன்னா சொல்லியிருக்க மாட்டேன்... ம்... நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு அடிக்கடி கோபப்படப் போறே..."

"என்னைய கட்டிக்க வேண்டாம்... கோபப்படாதவளா பார்த்து எவளையாவது கட்டிக்க... "

"நான் சொன்னேன்னா வேறவளை கட்டிக்கிறேன்னு... நீயா எதாவது எடுத்துப் பேசாதே... எப்பவும் எனக்கு நீதான்..." என்றபடி அவளை இழுத்து அணைத்தான்.

"ஒண்ணும் வேண்டாம்..." என்றபடி அவனை தள்ளிவிட்டுவிட்டு கொஞ்ச தூரம் தள்ளிப் போய் அமர்ந்தாள். அவளது முகம் கோபத்தில் சிவந்திருந்தது. சங்கரும் எழுந்து சென்று அவளருகே அமர்ந்தான்.

அவளது தோளில் கை வைத்து "ஏய் சாரும்மா... இப்ப எதுக்குடா இந்த கோபம்... ப்ளீஸ் சிரியேன்..." என்றான் அப்பாவியாக.

"உனக்கு என்னோட மனசு புரியலை... அதான் இப்படியெல்லாம் பேசுறே... மத்தவங்க மாதிரி பொது இடத்துல கட்டிப்பிடிக்கணும்... முத்தம் கொடுக்கணும்... கண்ட இடத்துல கை வைக்க விடணும்ன்னு நினைக்கிறே... கட்டிப்பிடிக்கிற காதலெல்லாம் எவ்வளவு நாளைக்கு சொல்லு பார்ப்போம்.இந்த மாதிரி கிடைக்கிற சுகம் நல்ல சுகம்ன்னு நினைக்கிறியா..? இன்னைக்கு அவளோட இதழ் நல்லாயிருக்கும்... நாளைக்கே வேற ஒருத்தியோட இதழை தேடச் சொல்லும்...இதெல்லாம் மனசுங்கிற ஒண்ணு இல்லாத காதல்டா... நீ சொன்னியே ஸ்கூல் பொண்ணு... அதைப்பாரு எல்லை மீறிப்போயாச்சு... எவ்வளவு பேர் பார்க்கிறாங்க அதைப்பத்தி கவலைப்படாம அவனோட கை அவ உடம்புல எல்லா இடத்துலயும் பட்டாச்சு... இது அவளுக்கு சுகம்தான் ஆனா அவன் நாளைக்கு வேற ஒருத்திய கூட்டிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பான். அப்ப இது என்ன பண்ணும் எதாவது பத்திரிக்கையில வர்ற ஆலோசனை பக்கத்துல கதையா எழுதி கண்ணீர் விடும். எம்மனசுல நீ இருக்கே... நான் சாகிற வரைக்கும் நீ இருப்பே...இந்த உடல் சுகம் கல்யாணத்துக்குப் பின்னே கிடைச்சா சந்தோஷம்...இல்ல இதுக மாதிரித்தான் வேணுமின்னா ஐந்தறிவு ஜீவனா பிறந்திருக்கலாமே... எதுக்கு நமக்கு ஆறாவது அறிவு. நம்ம மெரினா பீச்சுக்கு ஆசியாவிலே இரண்டாவது பீச்சுங்கிற சிறப்பு இருக்கு... நம்ம அதை எங்கே பெருமையா நினைக்கிறோம்... இப்படி மணல்ல கட்டுண்டு கிடக்கிறதை பார்க்கிறதுக்காக நிறைய விடலைப்பசங்க வாராங்க... இதுக்குப் பேரு காதலா... மனசும் மனசும் காதலிச்சா அந்த காதல் கண்டிப்பா உடல் சுகம் தேடாது. இதுக காதல் எல்லாம் வெறும் உடம்பு சுகம் தேடுற காதல்தான்... என்னோட இதயத் துடிப்பே நீதான்.... உனக்குள்ள இப்படி ஒரு நினைப்பு இருக்குமுன்னு நான் நினைக்கவேயில்லை."பொரிந்து தள்ளியவள் அவனிடமிருந்து விலகி வேறு இடத்தில் அமர்ந்து கடலை வெறிக்க ஆரம்பித்தாள்.

"ஏய் சாரா... சும்மா உன்னை சீண்டிப்பார்த்தேன் அவ்வளவுதான்...உன்னைய மாதிரியே என் மனசு பூராவும் நீதான் இருக்கே... நீ... நீ மட்டும் தான் இருக்கே... ப்ளீஸ்ம்மா இங்க வா... இல்ல நான் போயிடுவேன்"

"போ... எனக்கு எத்தனையோ பஸ் இருக்கு..."

"ஒகே நான் போறேன்... பை... பை..."

"இந்த பை எனக்கா... நம்ம காதலுக்கா..?"

பதில் கூறாமல் நடந்தான். அவளும் அவனைக் கண்டு கொள்ளாது அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து கையில் கடலை பொட்டலத்துடன் வந்து அவளருகில் அமர்ந்தான்.

அவனை பார்த்தும் பார்க்காதது மாதிரி இருந்தாள் சாரா.

"ஏய்... சாரு... நீதான் எனக்கு உலகம்... நீ பேசலைன்னா எனக்கு எதுவும் ஓடாது... ப்ளீஸ்..."

"போறேன்னு போனே..?"

"கடலை வாங்கப் போனேன்..." என்றவனைப் பார்க்க பாவமாக இருந்தது. காதலின் முன் கோபம் பொய்த்துப் போக, "சாரிடா... ரொம்ப படுத்திட்டனோ..." என்ற சாராவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு "இல்லம்மா நான் அப்படி பேசியிருக்கக்கூடாது" என்றான் சங்கர்.

அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொள்ள அவன் எதிர்பாரா தருணத்தில் அவனது கன்னத்தில் இச் பதிக்க, அவர்களது கோபம் காற்றில் கரைந்தது.




Saturday, May 1, 2010

கொலை கொலையாம்...

(போட்டோ உபயம் :  Google Search Engine)

விடியும் முன்பே கிளம்பிய கண்ணாத்தாவின் அழுகை ஊரையே குலுக்கியது.

என்னாச்சு என்ற முனைப்பில் அவள் வீட்டிற்கு சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துவுக்கு முன்னாள் தலைவிரி கோலமாக அமர்ந்து 'சண்டாளன் என் செல்லத்தை கொன்னுபுட்டானே' என்று பெருங்குரல் எடுத்து கத்தினாள்.

'யார் செய்திருப்பார்கள் இந்த பாதகச் செயலை...?' என்று நினைத்தவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக 'இந்தப்பய நல்லாயிருப்பானா... சொத்துத் தகராறுல கொலை பண்ண துணிஞ்சிட்டானே.. அவன் குடும்பம் விளங்குமா...? ஐயோ.... என் செல்லமே..." என்று அரற்றினாள்.

எல்லாரும் கூடியிருக்கும்போது இந்த மாணிக்கம் பய வீட்டுல இருந்து யாரையும் காணோம். அவன் தான் பண்ணியிருக்கனும். அண்ணன் தம்பிக்குள்ள சொத்து தகராறு நடக்கிறது உண்மைதான். அதுக்காக ஒரு உயிரை எடுக்கிற தைரியம் அவனுக்கு எப்படி வந்திச்சு...

"யேய் தள்ளுங்கப்பா... ராசண்ணன் வர்றாரு." என்று ஒரு கைத்தடி கூட்டத்தை விலக்கிவிட, ராசண்ணன் என்று அழைக்கப்பட்ட அந்த ஐம்பது வயது மனிதர் காலையிலேயே குளித்து நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து மங்களகரமாக இருந்தார். அவர்தான் அந்த ஊருக்கு அம்பலம் (அதான் நாட்டாமை), அதுபோக நாலஞ்சு கிராமத்துக்கு நாட்டம்பலம் வேற... அவரு பேச்சுக்கு அந்த ஏரியாவே மதிப்புக் கொடுக்கும்.

வந்தவர் தலைவிரி கோலமாக இருந்த கண்ணாத்தாவிடம், "ஆத்தா... இதை யாரு செய்திருப்பான்னு நினைக்கிறே...?"

"பெரியய்யா..." என்று அழுகையை கூட்டினாள்.

"யேய்... கிறுக்கி... அதான் ஐயா கேக்குறாகள்ல... நடந்ததை சொல்லுறத விட்டுப்புட்டு ஒப்பாரி வைக்கிறே..?" அம்பலத்துக்குப் பின்னால் நின்று ஒன்று அம்பலம் பண்ணியது.

"வேற யாரு... அவன் தான் பெரியய்யா... சொத்து தகராறுல இப்படி பண்ணிட்டான்"

"வேம்பா... அந்தப்பய வீட்டுல இருக்கானான்னு பாத்துட்டு வா"

"ஐயா... போலீசுக்கு போகணுமா...?" என்றார் ஒருவர்.

"முதல்ல அவன் இருக்கானான்னு பார்ப்போம்... அவன்தான்னு அந்தப்புள்ள சொல்றத நம்பிக்கிட்டு நாம முடிவெடுக்க முடியாதுல்ல... எதுக்காக இது நடந்துச்சுன்னு தெரியலையில்ல..."

"ஆமா..."

"என் கண்ணுமணி... பொண்ணுமணி... கண்ணு நிறைஞ்ச வைரமணி... உன்னை காவு கொடுக்கவா பாத்துப்பார்த்து வளர்த்தேன்... ம்..ஆஆஆஆஆ...."

"இருத்தா... கொஞ்சம் அழுகையை நிப்பாட்டு..."

"ஐயா அவன் பொண்டாட்டி மட்டும்தான் இருக்கு.." என்றபடி வந்தான் வேம்பன்.

"அவளை கூப்பிடு"

"ஐயா... அவளை இங்க கூப்பிட்டு பேசுறது நல்லாயில்லை... ஏன்னா இவ சாகக் குடுத்துட்டு நிக்கிறா... அவ வந்தா அடிக்கக்கூட தயங்கமாட்டா... அதனால நாம நாலுபேரு அங்க போயி பேசலாம்."

"அதுவும் சரிதான்..."

***

"ந்திரா... இந்திரா..."

"வாங்க பெரியய்யா..."

"என்ன புள்ள ஒங்கொலுந்தன் பொண்டாட்டி முத்த வெட்டிப்புட்டாங்கன்னு ஊரையே கூட்டுது... நீ இங்க இருக்கே"

"இல்ல பெரியய்யா... அதுக்கும் எங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லை... அப்புறம் எப்படி..."

"சரி மாணிக்கம் எங்கே..?"

"விடியுமுன்னே எங்கயோ பொயிட்டாரு..."

"முத்த வெட்டுனது அவன் தான்னு அந்தப்புள்ள சொல்லுது... இவனும் ஆளு இல்லை...ம்.."

"அவரு செஞ்சிருக்க மாட்டாருய்யா"

"என்ன புருஷனுக்கு வக்காலத்தா... வேற யாரு இந்த மாதிரி செய்யப் போறா... போன் பண்ணினான்னா உடனே வரச்சொல்லு... என்ன...?"

"சரிங்க... பெரியய்யா..."

***

"எங்குடும்பத்து கொலைய அறுத்துப்புட்டானே... அவன் நல்லாயிருப்பானா... நாசமத்துப் போவான்... அவன் குடும்பம் நடுத்தெருவுல நிக்கணும்..."

"இதபாரு புள்ள... அவன் வீட்டுல இல்லை... எப்படியும் திரும்பித்தான் வரணும். அவன் வரும்போது விசாரிச்சு என்ன பைசல் பண்ணனுமோ பண்ணிக்கலாம் அப்படின்னு நான் நினைக்கிறேன். இல்ல போலீசுக்கு போறதுண்ணா சொல்லு... இப்பவே நான் போன் பண்ணி வரச்சொல்லுறேன். அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலையணும்... காசு செலவு பண்ணிக்கிட்டு திரியணும்... என்ன சொல்றே... சுமூகமா போறதுன்னா அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போம்... இல்ல கேசு குடுக்கிறதுன்னா அதுக்கான வேலையில இறங்குவோம்..."

"எங்ககிட்ட என்ன பெரியய்யா இருக்கு... கேசு போட்டு செலவழிக்க... நீங்களா பார்த்து எதாவது நல்ல முடிவா எடுங்க...வேற என்னத்தை நான் சொல்றது..."

"சரி... அவன் வரட்டும்... பேசிக்கலாம்..."

"ஏய் சுந்தரம் இங்க வாடா" என்று கண்ணாத்தா அழைத்ததும் இதுவரை ஓரமாக நின்றவன் "என்னம்மா" என்றபடி வந்தான்.

"இந்தா... அந்தப்பக்கம் பிடி வீட்டுக்குள்ள கொண்டு போயிடலாம்" என்றபடி தலையை அள்ளிக் கட்டிக்கொண்டு எழுந்தாள்.

அவளும் அவனுமாக தலை தனியாக கிடந்த கிடாயை வீட்டுக்குள் தூக்கிச் செல்ல,

'இனி ரெண்டுமாசத்துக்கு கண்ணாத்தா வீட்டுல உப்புக்கண்டம் மணக்கும்... நல்லா வெட்டியிருந்தாலாவது நமக்கு கொஞ்சம் தருவா... களவாணிப்பய கோபத்துல ஆட்டை வெட்டியிருக்கான் பாரு... ம்ம்ம்ம்ம்..." என்றபடி ஊர் கலைந்தது.

(திருமதி. மேனகாஸாதியா அவர்கள் க்ரைம் கதை எழுதச்சொன்னார்கள். அதனால் இந்த முயற்சி. நமக்கு இது மாதிரிதான் கதை எழுத வரும்.... ஹி... ஹி... ஹி..... தட்டிக்குடுக்கிறவங்க இங்க பின்னூட்டமிடுங்க... திட்ட நினைக்கிறவங்க திருமதி. மேனகாஸாதியா வலைப்பூவை தேடிப் போங்க - நன்றி.)




Sunday, April 18, 2010

நாணயம்



ந்த ஏரியாவில் தரமான பொருட்களை குறைவான விலைக்கு கொடுத்துப் பெயர் வாங்கிய மளிகைக் கடை அது.

கடை முதலாளி ராமநாதனுக்கு உடம்பு சரியில்லாததால் அவரது மகன் செல்வம் இரண்டு நாட்களாக கடைக்கு வந்து வியாபாரத்தைக் கவனிக்கிறான்.

"அண்ணே.... அண்ணேய்... மணி அண்ணே..."

"என்ன தம்பி..." கையில் பொட்டலத்தை மடித்தபடி உடம்பெங்கும் மளிகை சாமான்களால் ஏற்பட்ட அழுக்கோடு உள்ளிருந்து வந்தார் மணி.

"நம்ம கடையில எல்லா பொருளும் சுத்தமானதுதானே..?"

"ஆமா தம்பி... அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்..? அதனாலதான் நம்ம கடை வியாபாரத்தோட யாராலயும் போட்டி போட முடியலை..." பெருமையாய் சொன்னார்.

"ஆமா... அது சரிதான்... அதனாலதான் இன்னைக்கு கடை ஆரம்பிச்சவனெல்லாம் கோடீஸ்வரனாயிட்டான். ஆனா நாம அப்படியே இருக்கோம்.... இல்லையா?"

"என்ன தம்பி சொல்றீங்க..?"

"ஆமாண்ணே.... நமக்குப் பின்னால கடை வச்சவனெல்லாம் வீடு தோட்டம் தொறவுன்னு வசதியா செட்டிலாயிட்டான். நாம மட்டும் இன்னும் எந்த வசதியும் இல்லாம அதே பழைய காரை வீட்டுல இருக்கோம். அதனால..."

"அ... அதனால... என்ன... தம்பி..."

"நம்ம கடையில விக்கிற பொருளை நூறு சதவிகிதம் சுத்தமா கொடுக்காம கொஞ்சம் கலப்படம் பண்ணி வித்தா லாபம் பார்க்கலாமே...?"

"என்ன தம்பி சொல்றீங்க... வேண்டாம் தம்பி... அப்பா இந்த பெயரை எடுக்க ராப்பகலா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரு தெரியுமா...?

"அவரு சிரமப்பட்டு சொத்து சேக்கலையே... பேரை மட்டும்தானே சேர்த்து வச்சிருக்காரு... அதை வச்சி என்ன பண்றது. இனிமே தர்மம் நியாமுன்னு இருந்தா கடைசி வரைக்கும் சிரமப்பட வேண்டியதுதான். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன்..."

"எ... என்ன தம்பி முடிவு..."

"இனிமே மிளகுல மூணுல ஒரு பங்கு பப்பாளி விதையை கலக்குறோம்... சீனியில ரவையை கலக்குறோம்... அதே மாதிரி...." செல்வம் அடுக்கிக் கொண்டே போக....

இடைமறித்த மணி, "வேண்டாம் தம்பி... இது மக்கள் நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கு செய்யிற துரோகம்... அப்பாவுக்கு தெரிஞ்சா..."

"நிறுத்துங்க.... ஏதோ எங்க குடும்பத்துல் ஒருத்தரா பழகிட்டீங்கங்கிறதால உங்ககிட்ட இந்த விசயத்தைப் பத்தி பேசினேன். இல்லைன்னா நானே செஞ்சிருப்பேன்..."

"இல்ல தம்பி...."

"நான் சொல்றதை நீங்க செய்யிங்க... அதை விட்டுட்டு நியாயம் தர்மம் பேசாம... எங்களுக்கும் நியாயம் தர்மம் தெரியும்..." கோபமாய் பேச, பதில் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார் மணி.

"இனிமே இது தொடர்ந்து நடக்கணும்... அப்பாக்கிட்ட சொன்னீங்க நான் பொல்லாதவனாயிடுவேன்..." அவர் முதுகுக்குப் பின்னால் செல்வம் சொல்லிக் கொண்டிருந்தான்.


சில நாட்களுக்குப் பிறகு.... ஒரு மதியவேளை...

"தம்பி அப்பா இல்லை..." என்றபடி வந்தார் அந்த தெருவில் வசிக்கும் ஆசிரியர் சுப்பையா.

"அப்பாவுக்கு உடம்பு முடியலை... அதனால நான்தான் பார்க்கிறேன்... ஏன் சார் சும்மாதானே... சாமான் எதுவும் வேணுமா...?"

"இல்ல தம்பி ஒரு விசயம்... அதை அப்பாகிட்ட..." என்று இழுத்தார்.

"என்ன சார் விசயம்... எங்கிட்ட சொல்லலாமுன்னா சொல்லுங்க நான் அப்பாகிட்ட சொல்லிடுறேன்..."

"நான் சொல்லப் போற விசயத்தைக் கேட்டு நீங்க தப்பா நினைக்கக்கூடாது. நம்ம கடையில இதுவரைக்கும் இந்த மாதிரி நடந்தது கிடையாது. ரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்கிய சாமானெல்லாம் சுத்தமா இல்லை... ஏதோ கலப்படம் பண்ணினது மாதிரி தெரியுது. நான் நம்ம கடையில் அதுமாதிரி செஞ்ச்சிருப்பீங்கன்னு சொல்லலை... ஆனா நீங்க மொத்தமா பொருள் வாங்கிற இடத்துல இந்த மாதிரி பண்ணியிருக்க வாய்ப்பிருக்கு இல்லையா....

"எங்க வீட்ல கூட சொன்னாங்க ராமண்ணன் கடையிலயும் கலப்படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னு... நான் சத்தம் போட்டேன்... உங்க அப்பா இந்த மாதிரி ஒருக்காலமும் செய்யமாட்டாரு... அவரு பேருல மட்டும் ராமன் இல்ல... குணத்துலயும் ராமன்தான். இதுவரைக்கும் இங்க பொருள் வாங்கின யாருமே நேர்ல வந்து சொல்ல மாட்டாங்க. ஏன்னா... அப்பா மேல அவ்வளவு மரியாதை.

"அவருக்கே தெரியாம நடக்க வாய்ப்பிருக்கு இல்லையா..? நீங்க பொருட்களை பார்த்து வாங்கணுங்கிறதாலதான் நான் நேர்ல வந்து சொல்றேன். இனிமே பார்த்து வாங்குங்க தம்பி... உங்களுக்கு கெட்ட பெயர் வந்துடாம பார்த்துக்கங்க... நான் வர்றேன்..."

"சரி... சா...சார்.... நான் பார்த்துக்கிறேன்..."

அவர் சென்றதும் செல்வத்திடம் மணி "தம்பி பாத்தீங்களா.... நம்ம அப்பா மேல உள்ள மரியாதையை... இதை சம்பாதிக்கத்தான் தம்பி நாளாகும்... பணம் எப்ப வேணுமின்னாலும் சம்பாதிக்கலாம். ஆனா நல்லவன்கிற பேரை சம்பாதிக்கிறதி அவ்வளவு சுலபமில்லை.

"அன்னைக்கு என்ன சொன்னீங்க... அடுத்தவன் வீடு வாசல்னு இருக்கான்னுதானே... தம்பி இந்தக் கடையில் சம்பாதித்த காசுலதான் அப்பா மூணு பொண்ணுங்களை படிக்கவச்சசு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காரு.... உங்களையும் நல்லா படிக்கவச்சிருக்காரு... அதெல்லாம் இந்த கடை வருமானம்தானே... இதையெல்லாம் அன்னைக்கே நான் சொல்லியிருப்பேன்... அப்ப நீங்க கேக்கிற மூடுல இல்லை...

"நம்ம கடையில வாங்குன சாமான் நல்லாயில்லையின்னதும் வேற கடைக்குப் போகாம நேர வந்து சொல்லிட்டுப் போறாரு பாருங்க... அதுதான் அப்பா மேல உள்ள மரியாதை... இதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்துல சம்பாதிக்க முடியாது தம்பி... இனிமே கலப்படம் பண்ண நினைக்காதீங்க... நாம எப்பவும் போல இருந்தா போதும்..." முடித்த போது அவரது கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.

"அண்ணே... என்னை மன்னிச்சிடுங்க.... பணமும் புகழும்தான் வாழ்க்கையின்னு நெனச்சுட்டேன்... ஆனா நாணயம்தான் பெரிய சொத்து... அது அப்பாகிட்ட இருக்குன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்... இனிமே கலப்படம் பண்ணனுமுன்னு மனசாலகூட நினைக்கமாட்டேன். இங்க நடந்தது அப்பாவுக்கு தெரிய வேண்டாம்..." என்றவன் மனதிற்குள் அப்பாவிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.




Sunday, March 28, 2010

அவனும்... அவளும்...

(ஒரு பக்க சிறு 'கதை' முயற்சி. முயற்சி திருவினையாக்குமா என்பது உங்களது மதிப்புமிக்க கருத்தில்தான் உள்ளது.)


செல்பேசி ஒலிக்கவும் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை வைத்துவிட்டு செல்பேசியை எடுத்துப் நம்பரைப் பார்த்தவன், "என்னடி இந்த நேரத்துல பண்ணுறே..?" என்றான்.

"சும்மாதாண்டா" என்றது எதிர்முனை பெண் குரல்.

"சும்மா பேச இதுவா நேரம்... நாளைக்கு எனக்கு செமினார் இருக்கு. அதுக்காக பிரிப்பேர் பண்ணிக்கிட்டு இருக்கேன். காலையில காலேஜ்ல பார்க்கலாம்..."

"நாளைக்கு உனக்கு செமினார் இல்லடா...."

"என்னடி சொல்றே... நீ என்னவோ பிஸிக்ஸ் புரபஸர் பாலுச்சாமி மாதிரி பேசுறே... உனக்கு ஹாஸ்டல்ல பொழுது போகலைங்கிறதுக்காக ராத்திரி ஒரு மணிக்கு போன் பண்ணி வெறுப்பேத்துறியா..?"

"உனக்கு நல்லது சொன்னா கேட்கமாட்டே... ராத்திரிப் பூராம் முழிச்சு பக்கம் பக்கமா எழுதிக்கிட்டு வா எனக்கென்ன..?"

"சரிடி... சொல்லித்தொலை... நாளைக்கு என்ன..?"

"நாளைக்கு பிகாம் பசங்க அவங்க புரபஸருக்கு எதிரா ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம். எல்லா ஸ்டூடண்டஸும் கலந்துக்கணுமாம். அதனால நாளைக்கு காலேஜ் இருக்காது"

"இத உனக்கு இந்த நேரத்துல யாருடி சொன்னா..?"

"என் ரூம்மெட் சித்ரா இருக்கால்ல அவளோட ஆளு இப்பத்தான் போன் பண்ணி சொன்னான். ராத்திரி பனிரெண்டு மணிக்கு முச்சந்தியில கூடி முடிவு பண்ணிணாங்களாம். யாருக்கும் தெரியக்கூடாதாம்"

"என்னடி எதேதோ சொல்லுறே...? உண்மைதானா... நம்ப முடியலையே...?"

"நம்புனா நம்பு... எனக்கென்ன... எங்க பிரண்ட்ஸ் எல்லாம் படத்துக்குப் போகலாமுன்னு முடிவு பண்ணியிருக்காளுங்க... நீயும் எங்கூட வந்தியனா எனக்கு சந்தோஷமா இருக்கும்... அதனாலதான் போன் பண்ணினேன். நம்பலைன்னா ராத்திரி பூராம் பிரிபேர் பண்ணிட்டு காலையில வீட்டுல கிடந்து தூங்கு... எனக்கென்ன... எல்லாரும் அவ அவ பாய் பிரண்டோட வருவாளுங்க... நா மட்டும் ஒத்தையா போறேன்..." எதிர்முனை கோபப்படுவது போல் பேச...

"சரி... சரி... நாளைக்கு ஸ்டிரைக்தானே... காலையில நான் உன்னைய உங்க ஹாஸ்டல்கிட்ட வந்து பிக்கப் பண்ணிக்கிறேன்... ஓகே..."

"நீ காலேசுக்கிட்டயே வா... எல்லாரும் அங்க அசம்பிள் ஆகித்தான் போறாளுங்க...."

"சரிடி... தாங்க்ஸ்டி"

"சரி படுத்து தூங்கு குட் நைட்"

"ஒகே... சீ யூ டுமாரோ..."

போனை வைத்தவன் புத்தகத்தை தூக்கிப் போட்டான். \அப்பா நாளைக்கு செமினார் இல்லைன்னா அடுத்து ரெண்டு நாள் லீவு, அப்புறம் திங்கள்கிழமை செகண்ட் டே ஆர்டர்தான் பிஸிக்ஸ் கிளாஸ் இல்ல. இனி புதன் கிழமைதான்...

நாளைக்குப் பூராம் நம்ம ஆளுகூட என்சாய்தான்' என்று நினைத்தபடி படுக்கையில் விழுந்தான்.

அதே நேரம்...

அந்த தனியார் பெண்கள் விடுதியில்...

போனை வைத்த ஹரிணியிடம், "ஏண்டி அவங்கிட்ட இப்படி ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டே... பாவன்டி அவன்... நாளைக்கு பாலுச்சாமி சார்கிட்ட மாட்டப் போறான்..."

"மாட்டட்டும்... முண்டம்... சாயந்தரம்தான் அவங்கிட்ட சேலஞ் பண்ணினேன் அதுக்குள்ள மறந்துடுச்சு... நாளைக்கு எங்கூட சுத்தலாங்கிற சந்தோஷத்துல இந்நேரம் தூக்கம் வராம புரண்டுக்கிட்டு கிடக்கும் கிடக்கட்டும்..." என்றபடி எழுந்து காலண்டரில் தேதியை கிழித்தாள்.

அதில் ஏப்ரல் 1, வெள்ளிக்கிழமை என்று இருந்தது.
 
-'பரியன் வயல்' சே.குமார்.





Sunday, March 14, 2010

மழலை இதயம்


"அப்பா..."

"என்னம்மா"

"நம்ம தாத்தா பெர்த்டே எப்போ?"

"அதெல்லாம் யாருக்குத் தெரியும்..."

"ப்ளீஸ்ப்பா... சொல்லுங்க... தாத்தா பெர்த்டே எப்போ?" அழுத்தமாக கேட்டாள் சுவாதி.

"நிஜமாலுமே எனக்குத் தெரியாதுடா... தாத்தாவுக்கே தெரியாதும்மா"

"பொய் சொல்லாதேப்பா... எம் பெர்த்டே, தம்பி பெர்த்டே, அம்மா பெர்த்டே எல்லாம் கரெக்டா, மறக்காம வச்சிருக்கீங்க... தாத்தா பெர்த்டே மட்டும் தெரியாதுன்னா எப்புடிப்பா..?"

மழலையாக கேட்டாலும் மனதை தைத்தது. இதற்கு மேல் தெரியாது என்றால் இன்னும் என்னவெல்லாம் கேட்பாளோ என்ற பயத்தில் ஏப்ரல் இருபதுதான் தாத்தா பிறந்தநாள் என்று சட்டென்று மனதில் உதித்த நாளைச் சொல்லி அவளை அணைத்துக் கொண்டான் சிவா.

"ஐய்யா... இன்னைக்கு ஏப்ரல் 17, 18... 19... 20... விரல் விட்டு எண்ணி இன்னம் திரி டேய்ஸ்தான் இருக்கு தாத்தா பெர்த்டேக்கு... அப்பா சூப்பரா கொண்டாடலாம் தாத்தா பெர்த்டேய... ம்..."

"ஒ.கே".

ஏப்ரல்-20 காலை.

"அப்பா... நான் காலையிலயே தாத்தாவுக்கு விஷ் பண்ணிட்டேன். நீங்களும் அம்மாவும்தான் பண்ணலை... ஈவினிங் கேக் வாங்கிக்கிட்டு வாங்க..."

மறக்காமல் ஞாபகம் வைத்திருக்கிறாளே... என்று நினைத்தபடி "சரி... இப்ப ஸ்கூலுக்கு கிளம்பு பஸ் வர்ற நேரமாச்சு..." என்று அவளை விரட்டினான் சிவா.

மாலை 6.30 மணி.

சிவா வரும்போது வாசலில் அவன் வரவுக்காக கன்னத்தில் கைவைத்தபடி காத்திருந்தாள் அவனது மகள்.

"ஹை... அப்பா வந்தாச்சு..." அவனைப் பார்த்ததும் கைதட்டி சிரித்தாள்.

அவன் அலுவலக கோப்புகள் அடங்கிய சூட்கேஸை மட்டுமே சுமந்து வருவது கண்டு அவளது முகத்தில் சிரிப்பு அலை குறையத் தொடங்கியது.

"அப்பா..."

"என்னம்மா..." களைப்பாய் கேட்டான்.

"வாங்கலையா..."

"என்னது..?"

"தாத்தா பெர்த்டே கேக்..."

"சாரிடா... அப்பா ஆபிஸ் வேலையில மறந்துட்டேன்..."

"பொய் சொல்றீங்க... வண்டி பெட்டியில இருக்குதானே..."

"இல்லடா... நிஜமாலுமே மறந்துட்டேன்..."

"போங்கப்பா... எங்க பெர்த்டேக்கு மட்டும் மறக்காம பெரிய்ய கேக் வாங்காருவிங்க... நாங்க கேக்காம எல்லாம் வாங்காருவீங்க... தாத்தாவுக்கு மட்டும் எதுவுமே வாங்க மாட்டீங்க... தாத்தா கண்ணாடி மாத்தணும்முன்னு கேட்டப்போ இருக்கதைப் போடுங்க போதும்... அப்புறம் பாக்கலாம்ன்னு சொன்னீங்க. தாத்தா எதாவது கேட்டா அம்மாவும் செய்யிறதில்லை. நாங்க தப்பு செய்தாலும் தாத்தாவைத்தான் திட்டுறாங்க... நமக்கு எதாவதுன்னா தாத்தா துடிச்சுப் போயிடுறாங்க... ஆனா நீங்க அவங்களை ஏப்பா வெறுக்கிறீங்க... " என்று மழலை மாறாத குரலில் பெரிய மனுசிபோல் அவள் பேசிக் கொண்டே போக...

சிவாவின் மனதுக்குள் அவளது வார்த்தைகள் சுருக்கென்று தைத்தது. 'இவளை நாம் வளர்ப்பது போல்தானே அவர் நம்மை மாரிலும் தோளிலும் போட்டு வளர்த்திருப்பார். நமக்காக எத்தனை கஷ்டப்பட்டிருப்பார். கால ஓட்டத்தில் நாம் இவளது குழந்தைக்கு தாத்தாவாகும் போது நாம செய்வதன் கூலிதானே கிடைக்கும். சிறியவளாக இருந்தாலும் எப்படி பேசுகிறாள். தவறு செய்துவிட்டோமே... அவளின் ஆசையை நிறைவேற்றுவது சாதாரண விஷயம்தானே... அவருக்கும் என்னை விட்டால் யார் துணை... இத்தனை நாளாக ஏன் இப்படி இருந்தேன். சை... படித்தும் முட்டாளாய் இருந்திருக்கிறேன். அவளுக்கு இருக்கும் இதயம்கூட எனக்கில்லாமல் போச்சே...' என்று மனதிற்குள் தனது செயலை நினைத்து வருந்தியவன், மகளின் அருகே அமர்ந்து அவளை கைகளை பிடித்துக் கொண்டு "சாரிடா... அப்பா ஆபிஸ் வேலையில மறந்துட்டேன். வா நாம கடைக்குப் போய் கேக் வாங்கி வரலாம்" என்றான்.
 
'பரியன் வயல்' சே.குமார்




Sunday, March 7, 2010

பிறவிக்குணம்

இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்யும் அடைமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. கசாலையில் சாணியும் மூத்திரமும் கலந்து உடலெங்கும் அழுக்கேறியிருந்த மாடுகள் வைக்கோலை வேண்டா வெறுப்பாக மென்று கொண்டிருந்தன. கோழிக்குஞ்சுகள் குளிருக்கு இதமாக தாயின் இறக்கைக்குள் தஞ்சம் அடைந்திருந்தன.மழை தூற ஆரம்பித்தபோது காணாமல் போன மின்சாரம் இரண்டு நாட்களாக எட்டிப்பார்க்கவில்லை. கருவ மரங்களுக்கு இடையே வரும் மின்சாரக் கம்பியில் எங்காவது மரம் விழுந்து கிடக்கலாம். மழை நின்றதும் போய்ப் பார்த்து சரி செய்தால்தான்... அதுவரைக்கும் மிம்சாரம் வர வாய்ப்பேயில்லை. அதுவரைக்கும் வீட்டிற்குள் மசமசவென்று எரியும் அரிக்கேன் விளக்குதான்.
'சே... இந்த மழை நசநசத்து பொழப்பைக் கெடுக்குது... வெளிய தெருவ போகமுடியுதா..?' புலம்பினாள் ராமாயி.
தொடர்ந்து மழை பெய்வதைப் பார்த்தால் இந்த வருஷம் விவசாயம் நல்லாயிருக்கும். இந்த மழைக்கே கண்மாய் நிறையக்கூடிய வாய்ப்பு இருக்கு... மழை ஆரம்பிக்கும் போதே இளந்தாரிப்பசங்க போய் பக்கத்து ஊருக்குப் போற குளக்காலை அடைத்து கண்மாய்க்கரையை வெட்டி திருப்பி விட்டாச்சு. அதனால கம்மாய்க்கு நீர் வரத்து அதிகம் இருக்கும்.
வானம் இடித்துக் கொண்டிருக்க, மழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ''ம்... அப்பவே அடிச்சிக்கிட்டேன்... வயல்ல முள்ளப் புடுங்கி கொழுஞ்சி பறிச்சிப் போடுங்கன்னு கேட்டாத்தானே... இந்த மனுசன் காதுல வாங்குனாத்தானே... வெள்ளையும் சொள்ளையுமா கிளம்பிப் போனா மட்டும் போதுமா... இந்த தண்ணியில எப்படி சுத்தம் பண்ண முடியும். அவனவன் மழை விட்டதும் ஏரக் கட்டப் போறான்.நாம முள்ளுப் புடுங்கலாம். எல்லாம் தலையெழுத்து... நாந்தான் லோலோன்னு கத்துறேன்..." கத்தலைத் தொடங்கினாள் ராமாயி.
"எதுக்கு இப்ப கத்துறே... பிடுங்கலாம்...ஈரத்துல புடுங்க நல்லா வரும் ஒருநா வேலை" என்று சொன்ன மாணிக்கம், 'எப்ப புடுங்கினாலும் நாந்தானே புடுங்கணும்... நீ வரப்போறியா..?' மனதிற்குள் கேட்டுக்கொண்டார்.
வயல் வரப்பு, ஆடு மாடு என்று ராமாயி ஒவ்வொன்றாக ஆரம்பிக்க, எதையும் கண்டு கொள்ளாமல் புகையிலையை எடுத்து கையில் தேய்த்து வாயில் அடக்கிக் கொண்டார்.
மழையோடு பால் கொண்டு போனவர்கள் திரும்பி விட்டனர் என்பது வீதியில் கேட்கும் பேச்சுக்குரலில் தெரிந்தது. "என்ன செல்லம்மா, கம்மாயில தண்ணி ஏறிடுச்சா..? வீட்டிற்குள் இருந்து புகையிலை குதப்பி வாயில் எச்சில் வழியாதவாறு கேட்டார் மாணிக்கம்.
"அந்த சனியனைத்தான் துப்பிட்டு பேசுறது" வெடித்தாள் ராமாயி.
"பெரிய முட்டு மறையிறமாதிரி இருக்கு மாமா இன்னும் சறுக்கை போகலை... குளக்கால்ல அவ்வளவா தண்ணி இல்லை..." அவரது கேள்விக்குப் பதிலாக வெளியில் இருந்து குரல் வந்தது. பெரிய முட்டு என்பது கண்மாய்க்குள் இருக்கும் ஒருசில மேடான பகுதிகளில் பெரியது. அந்தப் பகுதி தண்ணீருக்குள் அமுங்கினால் அந்த வருட நல்ல விளைச்சல் என்பது அவர்கள் வழிவழியாக வைத்திருக்கும் கணக்கு.
"எங்க ராசுப் பெரியப்பா வேற தொண்டைக்கும் நெஞ்சுக்கும் இழுத்துக்கிட்டு கிடக்குதாம்... இந்த அடைமழைக்கு போயிடுதோ என்னவோ..." புலம்பினாள் ராமாயி.
"அட ஏன் ரெண்டு நாளைக்கு முன்னாலதான் ராமு மச்சானைப் பார்த்தேன். அவரு நல்லாயிருக்காராம். கொஞ்ச நாள் இருந்துட்டுப் போகட்டுமே... பொயிட்டா பாக்கவா போறோம்..."
"யாரு கண்டா... இந்த மழையில போனா எப்புடி சாதி சனத்தை இழுத்துப் போறது..."
"உனக்கு நல்ல பேச்சே வராதா..?"



"மாணிக்கண்ணே..."
"என்ன ராமசாமி.. என்ன விசயம்?"
"கம்மாக்கரை உடைக்கிற மாதிரி இருக்குண்ணே... நம்ம சறுக்கைக்குப் பக்கத்துல கரை சரியில்லை... தண்ணி தளும்புது..." படபடப்பாக பேசினான் ராமசாமி.
"அடி ஆத்தாடி ராத்திரி உடைப்பு ஏற்பட்டா தண்ணியெல்லாம் போயி நம்ம தலையில கல்லு விழுந்துருமே...எல்லாருக்கும் குரல் கொடு நான் இந்தா வாரேன்." என்றபடி தோளில் துண்டைப் போட்டுக் கொணடு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு மழையில் இறங்கினார்.
"தலையில எதாவது எடுத்துப் போட்டுக்கிட்டு போங்க... போயி ஒரு ஓரமா நின்னுக்கிட்டு இளந்தாரிப்பயலுகளை வேலை ஏவிட்டு வாங்க. அதை விட்டுட்டு மழயில நனைஞ்சுக்கிட்டு மாங்கு மாங்குன்னு மண்ணை வெட்டிட்டு இங்க வந்து அது வலிக்குது இது வலிக்குதுன்னு கிடக்கப்புடாது சொல்லிப்புட்டேன்." முதுகுக்குப் பின்னால் கூவினாள் ராமாயி.
வீட்டிற்கு ஒருவர் பொதுக்காரியங்களுக்கு வரவேண்டும் என்பது ஊர்க்கட்டுப்பாடு. இருந்தவர்களெல்லாம் மண்வெட்டி, கூடை, சாக்கு சகிதமாக கிளம்பி வந்தனர். .
ராமசாமி காட்டிய இடத்தில் கரை உடைப்பதற்கான அறிகுறி தென்பட்டது. "ஏம்ப்பா... ரெண்டு இளவட்டம் போயி குளக்கால்ல போட்ட அணையை உடச்சு விட்டுட்டு கம்மாக்கரைய மண்மூடை போட்டு அடச்சுட்டு வாங்க"என்று மாணிக்கம் சொன்னதும் சில இளைஞர்கள் கிளம்பினர்.
மற்றவர்கள கரையை அடைப்பதற்கான ஆயத்தப் பணிகளில் இறங்கினர். கேலியும் கிண்டலுமாக பேச்சு மட்டும் குறையவில்லை. "பேச்சைக் குறைச்சுட்டு வேலையைப் பாருங்க... இருட்டுறதுக்குள்ள முடிக்கணும்"
"அப்பா... ரெண்டு பேரு மண்ணை வெட்டிக் கொடுங்க... ஆத்தா அதை சாக்குகள்ள நிரப்புங்க... தம்பி தூக்கி அடுக்குங்க..."
ஆளாளுக்கு வேலை பார்க்க மழையிலும் வேலை வேகமாக நடந்தது.
"என்ன எழவு சனியனோ தெரியலை... வருசா வருசம் கண்மாய் வெட்டுறமுன்னு இந்தக் கடைசியில இருந்து அந்தக் கடைசி வரைக்கும் ஒரே வழியா வழிச்சு... அதை அளந்து காசு பாக்குறாங்க... நல்லா வெட்டி கரையில அள்ளிப் போட்டு கரைய உயர்த்துனாத்தானே உடைக்காது... நாமளும் இந்த மழையில நனைஞ்சுக்கிட்டு மண்ணு வெட்ட வேண்டியதில்லையில்ல..."
"ஆமா வருசா வருசம் வழிச்சே கண்மாய் தாழ்ந்து வயல் உயர்ந்து போச்சு. இதுல நல்லா வெட்டவேற வேணுமாக்கும்... எதோ இன்னும் கண்மாய்கள் இருக்கிறதால ஒரு சில பேரு வழிச்சு சம்பாதிக்கிறாங்க..."
ஒரு வழியாக அடைத்துவிட்டு வீடு திரும்பினர். அனைவரும் சொட்டச் சொட்ட நனைந்திருந்தனர்.
மாணிக்கம் மழையில் நனைந்து வந்திருந்ததால் ஆத்திரமான ராமாயி "இப்புடி நனைஞ்சுட்டு வந்தா நாளைக்கு காய்ச்சல்ன்னு படுத்தா யார் பாக்குறது.ஆடு மாடுகதான் மனுசளை பாடாப்படுத்துதுகன்னா எல்லாந்தெரிஞ்ச இவுகளும் படுத்துறாக... போகயிலயே தலைதலையா அடிச்சுக்கிட்டேன்... ம்... கேக்கமாட்டாங்களே... எம் பேச்சைக் கேட்டிருந்த எ இந்த தலையெழுத்து..." என்று எதேதோ பேச, அவர் எதையும் கண்டு கொள்ளவில்லை.
ராமாயி வாய் முகூர்த்தமோ என்னவோ காலையில் எழ முடியவில்லை இருமல்... தும்மல்... காய்ச்சல் என்று எல்லாம் ஒன்றாய்...
அவரது நிலை கண்ட ராமாயி, "எனக்குன்னு வந்து வாய்க்கிதுக பாரு... நல்லா... வந்ததும் அப்படித்தான் இருக்கு... பெத்ததுகளும் அப்படித்தான் இருக்கு... இந்தா மழை விட்ட மாதிரி இருக்கு... மாடுகளை கொண்டு போய குளிப்பாட்டிட்டு கொள்ளைப்பக்கம் விட்டுட்டு வரலாம்... ரெண்டு நாளா கட்டுத்தொறையிலயே கிடக்குது... அதுகளும் காலாற பொயிட்டு வரும்... இவுகதான் சாஞ்சுட்டாகளே... ஊர் வேலை பாக்க ஆள் இருக்கும்... உள்ள வேலை பார்க்கத்தான் ஆள் இருக்காது... நான் என்ன சொன்னாலும் கேக்கிறதில்லைங்கிறது இன்னைக்கு நேத்தா இருக்கு,,, முப்பது வருசமா இதேதானே... யாராவது மடை எடுத்துக்கிச்சுன்னு சொல்லட்டும் காய்ச்சலாவது தலைவலியாவது மொத ஆளா நிப்பாக..."
அவள் பாட்டுக்கு கத்த, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை இறுக்க மூடிக் கொண்ட மாணிக்கம், 'இது பிறவிக்குணம்... சவக்காரம் போட்டுக் கழுவினாலும் மண்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் போகாது' என்று நினைத்துக் கொண்டார்.

-'பரியன்வயல்' சே.குமார்




Saturday, February 20, 2010

'ஆ'சிரியர்


போனில் அந்த செய்தியை கேட்டதும் என்னால் சீரணிக்க முடியவில்லை.

"டேய்... என்னடா சொல்லுறே.. நிஜமாத்தான் சொல்லுறியா..?" - பதறினேன்.

"ஆமாண்டா... சாரு இப்ப ஜெயில்ல இருக்காரு..."

"...." என்னால் பேச முடியவில்லை. அவனே தொடர்ந்தான்.

"பள்ளி நிர்வாகம் அவரு மேல நடவடிக்கை எடுக்கப் போறதா சொல்லுறாங்க."

"அவரு இந்த மாதிரி... எப்படிடா நம்புனாங்க... அவருக்காக யாருமே பேசலையாடா..?

"இல்ல மாப்ளே... சூழ்நிலை அவருக்கு பாதகமா அமைஞ்சிருச்சு... அதனால அவருக்காக பரிஞ்சு பேச யாருமே முன் வரலை."

"நீங்கள் எல்லோரும் என்னடா பண்றீங்க... புடுங்குறீங்களா... அவரை வெளிய கொண்டுவர முயற்சி செய்யாம..."

"இல்ல மாப்ளே... பாதிக்கப்பட்ட பொண்ணே போலீஸ்ல கேஸ் கொடுத்ததால ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு..."

"நிர்வாகத்திடம் பேசிப் பார்க்கலாமுல்ல..."

"இல்ல அவங்க யாரையும் உள்ள விட மாட்டேங்கிறாங்க."

"சரி வேற என்ன செய்யலாம்... சொல்லு"

"என்னத்தை மாப்ளே செய்யுறது. எல்லோரு மாதிரி நாமளும் இருக்க வேண்டியதுதான். உப்ப தின்னவன் தண்ணி குடிக்கத்தானே வேணும் மாப்ளே.."

"சீ... என்னடா பேசுறே... உப்பத் தின்னவன்தான் தண்ணி குடிக்கணும். அவரு ஏண்டா குடிக்கணும்."

"-----------"

"என்னடா பேச மாட்டேங்கிற... சரிடா நான் கிளம்பி வாரேன்..." என்றபடி போனை வைத்தேன்.

"சே... என்ன உலகம். யாருக்குமே துரோகம் நினைக்காத மனிதருக்காக போராட ஒருத்தர்கூட முன்வரலையே... அவருக்கிட்ட படிச்சு இன்னைக்கு எத்தனையோ பேர் நல்ல இடத்துல இருக்கோம். யாரையும் அடிக்காம அவர் பாடம் நடத்துற தன்மை... எல்லோருக்கும் உதவுற குணம்... அப்படிப்பட்டவரா இதுமாதிரி கீழ்தரமா நடக்கப் போறாரு..." மனசு வலித்தது.

அலுவலகம் சென்று இரண்டு நாள் விடுப்பு வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பினேன்.

"என்னடா... சொல்லாமக் கொல்லாம தீடீர்னு வந்து நிக்கிறே..."

"சும்மாதான் உங்களை பார்த்துட்டுப் போகலாமுன்னுதான்..."

"ஏண்டா பொய் சொல்லுறே... நாங்க வரச்சொன்னா ஏதோ உங்க பத்திரிக்கை ஆபிஸே உன்னாலதான் ஓடுற மாதிரி பேசுவே... இப்ப மட்டும் எப்படி எங்க மேல உனக்கு கரிசனம். எதாவது ஆபிஸ் வேலையா வந்திருப்ப..."

"இல்லம்மா... அவுக சாருக்காக வந்து இருக்கான்..." என்றபடி உள்ளே வந்தாள் தங்கை வனஜா.

"என்னடி சொல்லுறே..."

"ஆமாம்மா... கோவில்ல இருந்து வரும் போது ரமேஷ் அண்ணனைப் பார்த்தேன், சரவணன் வந்துட்டானான்னு கேட்டான். இன்னைக்கு எதுக்கு அவன் வாரான்னு நான் கேட்டப்ப அவன் தான் விசயத்தை சொன்னான்."

"என்னடா அதுக்காகவா வந்தே..?"

"ஆமாம்மா..."

"உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?"

"என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கு அவர் கடவுள் மாதிரி... அவரை வெளியில கொண்டு வந்து அவரு நல்லவருன்னு எல்லோருக்கும் நிரூபிப்பேன்." என்றபடி உள்ளே சென்றேன்.

மேஷை கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றேன்.

பத்திரிக்கையாளன் என்பதால் எனக்கு தலைமை ஆசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரிடம் பேசியதில் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாருக்கு பாதகமாக அமைந்து விட்டதாக வருத்தப்பட்டார். அவரு இதுவரைக்கும் நல்ல மனிதர்தான் ஆனால் இப்ப நடந்த விஷயம்... யாராலயும் சீரணிக்க முடியவில்லை. அவரு மேல நடவடிக்கை எடுத்தாத்தான் எங்க பள்ளியோட பேரை காப்பாத்த முடியும். சாரி தம்பி உங்களுக்கு என்னால உதவ முடியாததுக்கு வருத்தப்படுறேன் என்று முடித்துக் கொண்டார்.

இதற்கு மேல் அவரிடம் பேசி பயனில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பி காவல் நிலையம் சென்றோம்.

"கேட்டியா... அவரு தப்பு பண்ணியிருக்காரு...யாருமே உதவ மாட்டாங்க. நீ தேவை இல்லாம அலையுறே...?" என்று கத்தினான் ரமேஷ்.

" இங்க பாரு நீ வாரதுன்னா வா... இல்லயின்னா பேசாம போயிடு..." எரிந்து விழுந்தேன். அதற்கு மேல் அவன் ஒன்றும் பேசவில்லை.

நான் பத்திரிக்கைகாரன் என்றதும் சாரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. அவரது மாணவன் நான் என்றும் தனிப்பட்ட முறையில் பார்க்க வந்திருப்பதாக தெரிவித்ததும் அனுமதி கிட்டியது.

சிறைக்கு உள்ளே எனது குரு அமர்ந்திருந்தார். எனக்கு அழுகை வந்தது.

"சா...சார்..." நா தழதழுத்தது.

"சரவணா... எப்ப வந்தே..? வா... ரமேஷ்..."

"காலையிலதான் வந்தேன்..."

"வீட்டுக்குப் போனியா... அம்மா என்ன பண்ணுறா...?"

"இல்ல போகலை... என்னால நீங்க இல்லாத வீட்டுல அம்மாவை மட்டும் தனியா பார்க்க முடியாது."

"---------"

"என்ன சார் இது. உங்க மேல வீண் பழி சுமத்தி... என்ன சார் நடந்துச்சு..."

"----------"

"பேசுங்க சார்... அப்பதான் நான் உங்களை வெளியில கொண்டு வந்து நிரபராதியின்னு நிரூபிக்க முடியும்.."

விரக்தியாக சிரித்தவர், "சரவணா நான் உங்கிட்ட தனியா பேசணும்..." என்றார்.

என் பார்வையை புரிந்து கொண்ட ரமேஷ், "சரி மாப்ளே... வண்டிக்கிட்ட நிக்கிறேன். வாரேன் சார்" என்றபடி கிளம்பினான்.

"சரவணா... என்னை மன்னிச்சுடு... " என்று கம்பிகளுக்கு உள்ளிருந்து எனது கைகளைப் பற்றிக் கொண்டார்.

"சா...ர்..."

"ஆமா சரவணா... நல்லவனா இருந்த எனக்குள்ளே கடந்த சில வருடமா சில மாற்றங்கள். புதுசா வேலைக்கு வந்த விஜி கூட தொடர்பு ஆயிட்டது. யாருக்கும் தெரியாம எங்களுக்குள்ள எல்லாம் நடந்துக்கிட்டிருந்தது. தீடீர்னு அவ வேலை வேணாமுன்னு எழுதிக் கொடுத்துட்டு எங்கயோ பொயிட்டா. எங்கிட்ட எதுவும் சொல்லலை. எனக்கு இருந்த நல்ல பேரால எனக்கும் அவளுக்கும் இருந்த தொடர்பு வெளியில தெரியாமலே போச்சு. அவ போன பின்னால எனக்குள்ள காம உணர்வுகள் மேலோங்கி நிற்க ஆரம்பிச்சது. என்னால அதுல இருந்து மீள முடியலை. அதனால..."

"அதனால..." எனக்குள் கோபம் பீறிட்டது.

"ஏழாப்பு... எட்டாப்பு... கிளாஸ்ல பாடம் நடத்தும் போது பொம்பளைப் பிள்ளைங்களை தொடக்கூடாத இடத்துல எல்லாம் தொட்டு பாடம் எடுக்க ஆரம்பிச்சேன்..."

எனது பார்வை அவரிடம் இருந்து விலகி தரையை வெறிக்க ஆரம்பித்தது.

"அன்னைக்கு பள்ளி முடித்ததும் ஒருசில பேருக்கு மட்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் போயாச்சு... ஒருத்தி மட்டும் இருந்தா, அப்ப அவளோட இளமை எனனை..."

அதற்கு மேல் நிற்கப் பிடிக்காமல்... அவரையும் பார்க்கப் பிடிக்காமல் நடக்கலானேன்.

"சரவணா... நான்..."

அவரை சட்டை செய்யாமல் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினேன். எனக்குள் இருந்து சார் என்ற அந்த மிருகமும் வெளியேறி இருந்தது.

-'பரியன் வயல்' சே.குமார்




Saturday, February 13, 2010

மனசு


ந்த மனசு இருக்கே அது எதையாவது பிடிச்சா உடும்புப் பிடிதான் போங்க. காலையில எழும்போதே 'என்னவளே... அடி என்னவளே...' பாட்டு ஞாபகத்தில் வந்தால் அன்று முழுவதும் நம்மையும் அறியாமல் முணுமுணுக்கும் பாடலாக அதுதான் இருக்கும்.

அதுமாதிரிதாங்க இன்னைக்கு காலையில எழும்போதே பக்கத்து வீட்டு பரஞ்சோதி மாமா ஞாபகம் மனசுக்குள் மணியடித்துக் கொண்டிருந்தது.

எனக்கே ஆச்சர்யம். அவங்க வீட்டுக்கும் எங்க வீட்டுக்கும் சண்டை, பேசிக்கொள்வதில்லை. இருந்தும் அவர் ஞாபகம் மீண்டும் மீண்டும் மனசுக்குள்.

எங்காவது போகும்போது ரோட்டோரம் அழகான பொண்ணு போனாப் போதும், நம்ம அறியாமலே இந்த மனசு உடனே படம் பிடித்துக் கொள்ளும். வீட்டிற்கு வந்து உறங்கினாலும் அந்த முகத்தையே ஞாபகப்படுத்தி நம்மை ஒரு வழி பண்ணும். என்னதான் முயன்றாலும் மனதின் முன் நாம் தோற்றுவிடுவோம் என்பதே நிதர்சன உண்மை.

மனசு சம்பந்தமான கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது அம்மாவின் குரல். எழுந்து வெளியில் வந்தபோது அப்பா யாருடனோ பேசிக்கொண்டிருந்தார். மனசு எதிர் வீட்டு மாமாவை நினைவூட்ட எதேச்சையாக அவர் வீட்டுப் பக்கம் பார்த்தேன். சத்தியமா அவரைப் பார்க்கத்தாங்க நினைச்சேன். ஆனா அவரு மக நின்னா. பிளஸ் டூ படிக்கிறா. பல வருட சண்டையால அவ கிட்ட இதுவரை பேசியது கூட இல்லைங்க. என்னவோ நான் அவளை பார்க்கிறதா நினைச்சு உள்ள இருந்து வந்த பரஞ்சோதி மாமா 'அங்க என்னம்மா பண்றே..? கண்ட காலிப்பயலுக வேலியில ஓணானாட்டம் திரியிறானுங்க... உள்ள வா.' என்று சத்தம் போட்டார். எங்க வீட்டுப் பக்கம் நிக்கும் போதே காலிப் பயலாம். என்ன செய்ய, திட்டு வாங்கத்தான் மனசு அவர ஞாபகப்படுத்தியதோ என்னவோ. நல்லவேளை அப்பா காதுல விழலை என்று நினைத்த என் மனதுக்குள் பரஞ்சோதி மாமா மறைந்து அவர் மகள் உட்கார்ந்து கொண்டாள்.

காலேசுக்கு கிளம்பும்போது மறக்காமல் நான் எழுதிய முதல் கதையை எடுத்துக்கொண்டேன். என்னடா திடீர்னு கதை அது இதுன்னு போறானேன்னு நினைக்கிறிங்களா..?. இதுக்கும் மனசுதாங்க காரணம்.

போன வியாழக்கிழமை சவரிமுத்து ஐயா தமிழ் வகுப்பு எடுத்தப்ப யார் யாரு கதை, கவிதை எழுதுவிங்க என்று கேட்டார். பதிப்பேர் கையை தூக்க நான் உட்பட சிலர் கை தூக்கவில்லை. நமக்கு தெரியலைன்னா என்னங்க பண்ணமுடியும்.

அவரு எல்லாரையும் விட்டுட்டு என்னய பார்த்து 'என்ன சார், நமக்கு எதுவுமே வராது படிப்பையும் சேர்த்துத்தான் சொல்லுறேன். எதுக்குத்தான் வர்றோமோ. பாவம் பெத்தவங்க.' என்றார் நக்கலாக. வகுப்பே கொல் என்று சிரித்தது. குறிப்பா மல்லிகா சிரிப்பு மட்டும் தனியா கேட்டது. ரெண்டு நாளா இந்த மனசு வேற அவ சிரிச்சதையே ஞாபகப்படுத்தி கஷ்டப் படுத்திருச்சுங்க.

சை... எல்லாரு முன்னாலயும் அவமானப்படுத்திட்டாரே. அதுவும் மல்லிகா முன்னால வச்சு கேவலப்படுத்திட்டாரே... அவரே எல்லாரு முன்னாலயும் புகழனும் அதுக்கு ஒரே வழி கதை எழுதுறதுதான் என முடிவு செய்து ரெண்டு நாளா யோசிச்சு நேத்து காலையில கம்மாக்கரையில உட்கார்ந்து ஒரு கதை எழுதினேன். அதை இன்னைக்கு அவர்கிட்ட கொடுக்கணும்.

மாமாவையும் மாமா மகளையும் மறந்த மனசு சவரிமுத்து ஐயாவையும் மல்லிகாவையும் பற்றிக் கொண்டது.

நேராக தமிழ்த்துறைக்குச் சென்று ஐயாவிடம் கதையை நீட்டினேன். என்னப்பா இது..? என்று புருவம் உயர்த்தினார். 'கதை' என்றேன். ஓற்றைச் சொல்லில். என்னை ஏற இறங்க பார்த்தார். 'சரி படிச்சுட்டு கருத்தை சொல்லுறேன். மதியம் வந்து பாரு' என்றார்.

'உங்க கருத்தை நான் தனியா கேட்க விரும்பலை. நீங்க உங்க வகுப்புல எல்லாரு முன்னாலயும் சொல்லுங்க. கேவலப்படுத்துறப்ப மட்டும் தனியா வரச்சொல்லியா பண்ணினிங்க.' என்றேன்.

'ம்... தனியா சொல்றது உனக்கு நல்லதுன்னு பார்த்தேன். அப்புறம் உன் இஷ்டம்.' என்றார். 'பரவாயில்லை' என்று கிளம்பினேன்.

நம்ம கதைய படிச்சுட்டு ஐயா நல்ல கருத்தை வகுப்பில சொல்லட்டும் அப்புறம் பாரு மல்லிகாவை என்ன பண்ணுறேன்னு. அவளை வஞ்சம் தீர்ப்பதற்காகவே என் கதையின் நாயகி பேர மல்லிகான்னு வச்சேன்.

மதியம் முதல் பிரிவேளை தமிழ் ஐயா வந்தார். வந்தவர் பாடத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். எனது கதை பற்றி எதுவும் கூறவில்லை. மனசு சொல்லுவாரா மாட்டாரான்னு படபடன்னு அடிக்க ஆரம்பிச்சுடுச்சு. பாடத்துல எப்பவும் கவனம் போகாது. இன்னைக்கு சுத்தமா இல்ல. அடிக்கடி என்னய பார்ப்பதும் சிரிப்பதுமாக இருந்தார். அவரு மேல கடுப்புதான் வந்தது.

பத்து நிமிடம் இருக்கும் போது மெதுவாக ஆரம்பித்தார். 'தம்பி செல்வம், ஒரு கதை எழுதி எங்கிட்ட கொடுத்து படிச்சு கருத்துச் சொல்லச் சொன்னார். அதுவும் வகுப்புலதான் சொல்லணுமுன்னு கேட்டுக்கிட்டார் என்றதும் எல்லோரும் என்னய திரும்பிப் பார்த்தனர்.

மல்லிகா மட்டும் நக்கலாக சிரித்தாள். அவளுக்கு எப்பவுமே எல்லாத்திலும் தானே முதல் என்ற கர்வம் உண்டு. அவ நல்லா கதை, கவிதை எழுதுவா. கல்லூரியில வர்ற எல்லா கையெழுத்துப் பிரதியிலயும் எழுதுவா. அழகா வேற இருப்பாளா தேடி வந்து கதை வாங்குவாங்க. அதனால நாம கதை எழுதினா அவளுக்கு நக்கலாத்தான் தெரியும்.

ஐயா தொடர்ந்தார், 'முதல்ல கதை எழுதணுங்கிற அவரோட ஆர்வத்தை பாராட்டுறேன் என்றதும் நான் மத்தவங்களைப் பார்த்து நக்கலாக சிரித்தேன். 'ஏம்மா மல்லிகா... சமீபத்துல மூன்றாம் பிறை படம் போட்டானா..?' என்று வினவ, நம்ம கதைக்கும் இவரு கேக்குற கேள்விக்கும் என்ன சம்பனந்தம்? என்ற என் யோசனையை மல்லிகாவின் பதில் களைத்தது. 'ஆமா ஐயா... வியாழக்கிழமை கே டிவியில போட்டான்.

'ம். அதானே பார்த்தேன். யாரும் படம் பாக்கலைன்னா இந்த கதைய வாங்கி படிங்க. பேர் மாற்றத்தோட கதை அப்படியே மாற்ற்மில்லாம இருக்கு. ஆத்திரப்பட்டா மட்டும் போதாது தம்பி, சுயமா சிந்திச்சா கண்டிப்பா நல்ல கதை உங்களாலயும் எழுத முடியும்.' என்றார். உடனே வகுப்பு முழுவதும் கோரஸாக கத்தியது.

எனக்கு என்னவோ போலாகி விட்டது. சே... இந்த மனசு இப்படி கேவலப்பட வச்சுடுச்சே. கதை எழுதணுமுனு நினைச்சு உட்கார்ந்தப்ப, பார்த்த படத்தோட கதைய அப்படியே ஞாபகப்படுத்தி... சை... நன்றி கெட்ட மனசு. யார் முகத்திலும் முழிக்காமல் தலையை கவிழ்ந்து கொண்டேன்.

'எல்லாருக்கும் ஓண்ணு சொல்லுறேன். யாருக்காகவும் எழுதாம நீங்களா முயலுங்கள். கண்டிப்பா உங்க திறமை வெளிப்படும். அப்புறம் நம்ம கல்லூரியில ஒரு சிறுகதைப் ப்ட்டறை நடக்கப் போகுது. நிறைய கல்லூரியில இருந்து பசங்க கலந்துக்க இருக்காங்க. அதுக்காக நம்ம கல்லூரியில கதை தேர்வு நடக்க இருக்கு. அது தொடர்பான சுற்றறிக்கை முதல்வர்கிட்ட இருக்கு. விரைவில் உங்களுக்கு வாசிக்கப்படும். நல்ல கதையா குடுங்க. நம்ம மல்லிகா பொருளாதார பசங்க நடத்துற மனசு பத்திரிக்கையில இந்த மாதம் எழுதியிருக்க ஜன்னலோர ரோஜா அருமையான கதை. அம்மா மல்லிகா, அதையே கொடு. கண்டிப்பா பட்டறைக்குப் பிறகு நடக்கப்போற கதை தேர்வுல முதல் கதையா வரும்.' என்று எனக்குள் கனன்ற கோபத்திற்கு எண்ணெய் வார்த்துச் சென்றார்.

மனசு முழுவதும் மல்லிகா ஆக்கிரமித்தாள். வேறு எதை நினைத்தாலும் மனசு அவளிடமே வந்து நின்றது. சே... வெட்கம்கெட்ட மனசே அவளை நினைப்பதை நிறுத்து என மனசோடு சண்டையிட்டேன். ஆனால் ஜெயித்தது என்னவோ மனசுதான்.

அடுத்த பிரிவேளையை கட் அடித்துவிட்டு ஊர் சுற்றி விட்டு வீட்டிற்கு வந்தால் அம்மா, 'ஏண்டா, வரும்போது அக்கா வீட்டுக்குப் போயி விதை நெல்லு மூட்டை தூக்கியாரச் சொன்னேனே. தூக்கியாரலயா..?' என்று கோபமாக கேட்க, காலையில் கிளம்பும் போது அம்மா சொன்னது இப்பதான் ஞாபகத்திற்கு வந்தது. எல்லாத்தையும் ஞாபகம் வைத்துக் கொள்ளும் மனசு இதை மட்டும் மறந்துவிட்டதே. என்ன மனசு இது என்று மனசை திட்டினேன்.

'அவருக்கு இதெல்லாம் எங்க ஞாபகம் இருக்கப் போகுது. பக்கத்து வீட்டுப் பக்கமுல்ல ஞாபகம் போகுது.' படுத்திருந்தபடி அப்பா சொல்ல, ஏனோ தெரியவில்லை பரஞ்சோதி மாமாவும் அவரது மகள் யாழினியும் மனசுக்குள் மணியடித்தனர்.

-சே.குமார்




Wednesday, February 3, 2010

குடும்ப விளக்கு



காலை எழுந்தது முதல் பணம் கேட்டு நச்சரிக்கும் கணவனுடன் சண்டையிட்டாலும் சமையல் வேலையில் மும்மரமாக இருந்தாள் மரகதம்.

"ஏண்டி, இப்ப பணம் தருவியா... இல்லயா..?"

"உனக்கு எதுக்குய்யா காசு... குடிக்கவும் சீட்டாடவுமா... சல்லிக்காசு எங்கிட்ட இல்ல... போய்யா..."

"நான் குடிப்பேன்... கும்மாளம் அடிப்பேன். உனக்கென்னடி... அது என்ன உங்க அப்பமுட்டு காசா... எம்மக சம்பாரிக்கிறது..."

"மக சம்பாரிக்கிறது... தூ... வெக்கமாயில்ல... பொம்பளப்புள்ள சம்பாத்தியத்துல தண்ணியடிக்க... நீ எல்லாம் ஒரு ஆம்பிள்ளை..."

"ஆமாண்டி... நா ஆம்பிள்ளாதான். அதனாலதான் மூணு புள்ளைய பெத்தேன்..."

"புருசன் குடிகாரனா இருந்தாலும் நாங்களும் சபலப்படுறதாலதான் நீங்க அப்பன். நாங்க முடியாதுன்னு சொன்னா... "

"ஏய்... இங்க பாரு... உன்னோட பேசிக்கிட்டு இருக்க நேரமில்லை... 100 ரூவா கொடு."

"முடியாதுய்யா... எம்மக வெளி நாட்டுல கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம். அதை குடிக்க நான் தரமாட்டேன். "

"என்னடி ரொம்ப பேசுற... தே... மகளே" என்றபடி அவளை ஒரு அரை அறைந்துவிட்டு "எவனவது கொடுப்பாண்டி... வந்து வச்சுக்கிறே..." என்றபடி கிளம்பினான்.

'நல்லவேளை சின்னவளுங்க ரெண்டு பேரும் காலேசுக்கு பொயிட்டாளுங்க. ம்... பெரியவ பாவம், படிக்காம வெளிநாட்டுல பொயி வீட்டு வேலை செய்து பணம் அனுப்பி இவளுகளை படிக்க வைக்கிறதோட குடும்பத்துக்கும் அவதான் இப்ப எல்லாமே... அவளுக்கும் காலாகாலத்துல கல்யாணத்தை முடிக்கனும்.ம்... குடிச்சே அழிக்கிற இந்த ஆளை நம்பி மூணு புள்ளைங்களையும் எப்படி கரையேத்தப் போறேன்... எல்லாம் மாரி செயல்...' வழியும் கண்ணீரைத் துடைத்தபடி வேலையை தொடர்ந்தாள்.

"மரகத அத்தை உங்களுக்கு போன் வந்திருக்கு." என்று வாசலில் நின்று கத்தினான் பக்கத்து வீட்டு பையன்.

"இந்தா வாறேம்பா..." என்றபடி அடுப்பை அணைத்துவிட்டு முகத்தை துடைத்துக் கொண்டு, 'தேவியத்தான் இருக்கும். வேற யாரு நமக்கு பண்ணப்போறா...' என்று மனசுக்குள் நினைத்தபடி பக்கத்து வீட்டை அடைந்தாள்.

"வாங்க மதினி. தேவிதான். இப்ப கூப்பிடுவா... ஆமா... என்ன காலையிலயே சண்டையா...?"

"அது எப்பவும் நடக்கிறதுதானே...ம்... நான் வாங்கி வந்த வரம் அப்படி. அப்புறம் என்ன சொல்ல... அடிபடுறதும்... மிதிபடுறதும்... என்னோட காலம் புரவும் தொடர்கதைதான்... "

போன் மணியடிக்க... "மதினி உங்களுக்காத்தான் இருக்கும் எடுங்க..."

"அலோ..."

"அம்மா... நான் தேவி பேசுறேன்... எப்படிம்மா இருக்க."

"ம்... நல்லா இருக்கேம்மா... நீ எப்படி இருக்கே..."

"எனக்கென்னம்மா... நல்லாயிருக்கேன்... அப்பா, தங்கச்சிங்க..?"

"ம்... நல்லா இருக்காங்க... எப்பம்மா வருவ?"

"என்னம்மா... வந்து என்ன பண்றது..? இன்னும் ரெண்டு, மூணு வருசம் ஆகட்டும்... நாம நல்லா வரணும்மா... அதுதான் எனக்கு முக்கியம். ஆமா... என்னம்மா குரல் ஒரு மாதிரி இருக்கு எதாவது பிரச்சினையா?"

"இ.. இல்லம்மா... அதெல்லாம் ஓண்ணுமில்ல..."

"பொய் சொல்லதம்மா... உன் குரலே காட்டுதே... அப்ப சண்டை போட்டாரா... அடிச்சாரா..? உண்மைய சொல்லுங்க..."

"அது எப்பவும் நடக்கிறதுதானே... அதவிடு... உனக்கும் கல்யாணம் பண்ணனும்... வயசாகுதுல்ல..."

"கல்யாணமா?" வெறுமையாக சிரித்தவள், "அம்மா... முதல்ல தங்கச்சிங்க படிக்கட்டும். அவளுகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டு நான் பண்ணிக்கிறேன். ''

"என்னம்மா... அவளுகளுக்கு இப்ப என்ன அவசரம்...?"

"அம்மா... எங்களுக்கு நல்ல தாயை கொடுத்த கடவுள் தகப்பனை தப்பா கொடுத்துட்டான். அதோட விட்டானா... மூணு பேரையும் பொம்பளைப்பிள்ளையா வேற படைச்சுட்டான்.என்ன விட்டா அவங்களுக்கு செய்ய யார் இருக்கா... ம்... சொல்லுங்க. அவளுகளுக்கு எல்லாம் நல்லபடியா முடியட்டும். என்னோட வாழ்க்கையைப் பற்றி அப்புறம் பார்க்கலாம்."

"ம்... நீ சொன்ன கேட்கவா போறே..."

"அம்மா... செலவுக்கு பணம் அனுப்பியிருக்கேன். அப்பா பணம் கேட்டா கொடு. என்னமோ பண்ணித் தொலையட்டும்.நீயாவது அடி வாங்காம இருப்பேயில்ல."

"பணம் கொடுத்தா மட்டும் மாறப் போறாரா... அது சாதிப்புத்தி சவக்காரம் போட்டு கழுவினாலும் போகாது. அதை விட்டுத்தள்ளளு"

"பணம் வந்ததும் முதல்ல் ஒரு செல்போன் வாங்கிக்க."

"நானா... செல்போன்... சரிதான்... அதையும் உங்கப்பன் தூக்கி வித்துப்புட்டு தண்ணியடுச்சுட்டு சீட்டாடிட்டு வந்துருவான். வீட்டுப் போனுக்குத்தான் கணேச மாமா இந்த மாசம் பணம் கட்டி வாங்கித்தாரேன்னு சொல்லி இருக்கு."

"சரிம்மா... உடம்பை பார்த்துக்கம்மா... நான் அப்புரம் பேசுறேன்..."

"சரிம்மா".

கடல் கடந்த தேசத்தில் கண்ணீரோடு போனை வைத்த தேவி, 'என்னை மன்னிச்சுடுங்கம்மா...அம்மா உம் பொண்ணு வீட்டு வேலை பாக்கலைம்மா. பல பேருக்கு வீட்டுக்காரியா இருக்காம்மா. ஏஜெண்டை நம்பி வந்து மோசம் பொயிட்டேம்மா. இங்க வந்து சேர்ந்ததும் டான்ஸ் கிளப்புல் வேலையின்னு சொன்னான். இப்ப தினமும் ஓருத்தனுக்கு முந்தி விரிக்க சொல்லுறான். எனக்கு தினம் தினம் முதலிரவுதாம்மா. என்னய மாதிரி நிறையப்பேர் உண்டு. எல்லோருமே மனசுக்குள்ள் வேதனையோட உங்ககிட்ட சிரிச்சுப் பேசுறோன். என்ன செய்ய எங்க நிலமை தெரிஞ்சா நீங்க தாங்கமாட்டிங்களே.அதான் இதுவரைக்கும் சொல்லலை. இனியும் சொல்ல மாட்டேன்... 'வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

"என்னடி தேவி... என்னாச்சு... குடும்ப நினைப்பா...? நமக்கெல்லாம் துக்கமும் கூடாது.. தூக்கமும் கூடாது. இன்னைக்கு எவனோ அவனை சந்தோஷப் படுத்தினாத்தான் ஊர்ல உள்ளவங்க வயிரு நிறையும்... வா... மாமா வந்துட்டான் போல... கதவு திறக்கிற சப்தம் கேட்கிது." என்று தோழி ஒருத்தி ஆறுதல் சொல்ல, முகத்தை துடைத்துக் கொண்டு கிளம்பினாள்.

-சே.குமார்

******




Friday, January 8, 2010

காதல்




"அம்மா நான் காலேசுக்குப் பொயிட்டு வாரேன்" என்றபடி தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் அபூர்வா.

"சரிடி. பார்த்துப் போ"

"சரிம்மா... வாரேன்..."

தனது ஸ்கூட்டியை நேராக கம்பன் பூங்கா பக்கமாக ஓட்டினாள். அங்கே அவளுக்காக ராஜசேகர் காத்துக் கொண்டிருந்தான். அவள் வருவதற்குள் இவனைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். அவளுடன் படிக்கும் அவள் அளவுக்கு வசதியில்லாதவன். எதோ ஒரு விதத்தில் அவளைக் கவர்ந்ததால் கடந்த ஒருவருடமாக அவளது காதலன்.

வேகமாக வந்தவள் அவன் அருகில் வண்டியை நிறுத்தினாள். "எப்ப வந்தே?"

"ஒரு பத்து நிமிடம் இருக்கும்"

"சரி... வா போகலாம்"

"நான் வண்டியை ஓட்டுறேன். "

"சரி... இந்தா புடி.."

அவன் வண்டியை எடுத்தது அவன் பின்னால் அவள் அமர்ந்து கொண்டாள். வண்டி கல்லூரி நோக்கி போகாமல் வேறு பாதையில் ஓடியது.

"டேய்... காலேசுக்குப் போகாம எங்கடா போற...?"

"சினிமாவுக்கு..."

"ஐய்ய்யய்யோ... இன்னைக்கு பிராக்டிக்கல் கிளாஸ் இருக்குடா..."

"தெரியும்.. ஆனா நாம இன்னைக்கு சினிமா போறோம்"

"வேணாண்டா... கிளாசுக்கு பொயிட்டு ஈவ்னிங் வேற எங்காச்சும் போகலாம்"

"நீ எங்கூட சினிமாவுக்கு மட்டும் வரமாட்டேங்கிறே ஏன்?"

"இல்லடா யாராச்சும் பார்த்துட்டு அப்பாகிட்ட சொல்லிட்டா"

"இப்புடி பப்ளிக்கா போகயில யாரும் பார்க்க மாட்டாங்களா?"

"இல்லடா அவங்கவங்க வேகமா போறதால யாரையும் அதிகம் பார்க்கமாட்டாங்க. ஆனா தியேட்டர் எல்லோரும் கூடுற இடம். அதனாலதான்..."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப சினிமா போறோம். இல்லைன்னா நான் இறங்கிக்கிறேன். நீ காலேசுக்குப் போ"

"----------"

"என்னடி பதிலைக் காணோம்"

"சரி ஓட்டு... என்ன நடக்கணுமுன்னு இருக்கோ அது நடக்கட்டும்"

தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவளை நிற்கவைத்துவிட்டு அவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு திரும்பினான்.

உள்ளே சென்று அமர்ந்ததும் "சொன்னா கேக்குறியா... எங்க அப்பா பிரண்ட் மாதிரி ஒருத்தர் என்னைய முறைச்சு முறைச்சு பார்த்தாரு. தெரியுமா?"

"அசடு... நீ அழகாயிருக்கேன்னு பாத்திருக்கலாம்.. இல்ல உன்னைய மாதிரி அவரு பொண்ணும் காதலிச்சு, இவரு ஒத்துக்காததால வீட்டை விட்டு ஓடியிருக்கலாம். அவரு உங்க அப்பா பிரண்ட மாதிரிதானே இருந்தார்... பிரண்ட் இல்லையே.."

"உனக்கென்ன ஆம்பளை... வீட்டுல கேட்டாலும் சமாளிச்சுருவே..."

"இவ்வளவு பயப்படுறவ அப்புறம் ஏன் லவ் பண்ணினே.."

"அதுக்காக சினிமாவுக்கு வந்தாதான் லவ்வா...?"

"அப்புறம்... காதல் டேஸ்ஸை அனுபவிக்கனும் தெரியுமா?"

"நான் எதுவும் சொல்லலை... இப்ப ஒங்கூட சந்தோஷமா படம் பார்த்தாலும் ராத்திரி அப்பா வீட்டுக்கு வந்து எதுவும் கேட்காதவரை பயம்தான்" என்றபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

படம் முடிந்து இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கல்லூரி செல்ல மனமில்லாததால் அவனை அதே பூங்காவில் இறக்கிவிட்டு வீடு வந்தாள்.

"என்னடி சீக்கிரம் வந்துட்டே.."

"தலை வலிம்மா..." என்றபடி ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

கதவு தட்டப்படும் ஓசைகேட்டு விழித்துப் பார்த்தாள். கடிகாரத்தில் மணி ஆறாகியிருந்தது.

'நல்ல தூங்கிட்டேன் போல' என்று நினைத்தபடி கதவைத் திறக்க, அம்மா காபியுடன் நின்று கொண்டிருந்தாள்.

"சாரிம்மா... நல்லா தூங்கிட்டேன்" என்றபடி காபி கப்பை வாங்கிக் கொண்டாள்.

"அதனால என்ன... இன்னைக்கு காலேசுல அறுவையான கிளாஸா..."

"அதெல்லாம் இல்லம்மா.."

"அப்ப படம் நல்லாயில்லையோ..."

"அ...." வார்த்தை வராமல் காபி கோப்பை ஆடியது.

"யாருடி அவன்..."

"யாரு... எந்த படம்" துணிச்சலை வரவழைத்துக் கொண்டு பேசினாள்.

"பளார்..." விழுந்த அறையில் காபி கோப்பை கீழே விழுந்து நொறுங்கியது..

"என்ன தைரியம் உனக்கு... உங்க அப்பா கொடுக்கிற செல்லம். வண்டி வாங்கிக் கொடுத்தா அதுல ஒருத்தனை ஏத்திக்கிட்டு சினிமாவுக்குப் போற... ம்... "

'எவளோ வந்து போட்டுக் கொடுத்துட்டா... எவளா இருக்கும்...'

"இன்னைக்கு சாந்தா தியேட்டர்ல பாத்ததா சொல்லுவா... நாளைக்கு யாழினி பீச்சுல பார்த்தேன்னு சொல்லுவா.. நீ படிக்கப் போறமாதிரி தெரியலை... உங்க அப்பன் வரட்டும் இன்னைக்கு உனக்கு இருக்குடி. படிச்சது போதும் உடனே ஒருத்தனை பார்க்கச் சொல்லி உன்னைய தள்ளிவிட சொல்லுறேன்..." என்றபடி அங்கிருந்து அகல, படாரென்று கதவை சாத்திவிட்டு 'எல்லாத்துக்கும் காரணம் அந்த எருமை... வரட்டும் நாளைக்கு...' என்று மனதிற்குள் திட்டியபடி கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்.

அவள் லைட்டக்கூட போடாமல் கட்டிலில் படுத்திருந்தாள். கன்னத்தில் அம்மா கொடுத்த அறையின் எரிச்சல் இன்னும் இருந்தது. அப்பா வந்தா கதவை திறக்கக்கூடாது என்று நினைத்துப் படுத்திருந்தவளை வெளியில் கேட்ட அப்பாவின் குரல் எழுந்து உட்கார வைத்தது.

"என்ன கண்ணகி.. இன்னைக்கு பாப்பா அதுக்குள்ளயும் தூங்கிட்டாளா?"

"----------"

"என்ன மேடம் உம்முனு இருக்கீங்க. கேட்டதுக்கு பதிலையே காணோம்"

"பாப்பாவா... அது என்ன காரியம் பண்ணிட்டு இருக்கு தெரியுமா?"

"என்ன லவ் பண்றா அதானே..."

அருகிலிருந்து கேட்ட அம்மாவுக்கு எப்படியோ அறைக்குள் இருந்த அபூர்வாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.

"எ...எப்படி உங்களுக்கு..."

"எனக்கு இந்த விசயம் ஒரு மாதத்துக்கு முன்னாடியே தெரியும்."

"அப்ப எதுக்கு அந்த தெருப்பொறக்கி நாயை கண்டிக்காம இருக்கீங்க. யாராச்சும் ஒரு பையனை பார்த்து தள்ளிவிட்டுலாங்க."

"அவசரபடாதே... நீ அவளை சத்தம் போட்டியா?"

"ஆமா அடிச்சேன்"

"அடிச்சியா? என்னம்மா நீ அவகிட்ட இதமா எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறதைவிட்டுட்டு... "

"எப்படிங்க"

"இந்த காதலால நாம இழந்தது எவ்வளவுன்னு அவகிட்ட எடுத்துச் சொல்லியிருக்கலாமே..."

"போதுங்க. இந்த காதலால நாம பட்ட கஷ்டம்..."

"சரி...அதுக்காக அவ காதலை அழிக்கணுமா. நாம மட்டும் காதல் கல்யாணம் பண்ணிக்கலாம். அவ பண்ணிக்கக்கூடாதா...?"

அப்பா பேசியதை கேட்டதும் அபூர்வாவால் அறைக்குள் இருக்க முடியவில்லை. கதவை திறந்து கொண்டு அப்பா என்றபடி அவரிடம் ஓடி மடியில் முகம் புதைத்து விசும்பினாள்.

அவளை ஆதரவாக தடவியபடி "இங்க பாரும்மா, உன் காதலுக்கு அப்பா எப்பவும் எதிரியாகமாட்டேன். ஆனா, நானும் உன்னோட அம்மாவும் காதலிச்சப்ப ரெண்டு பேருக்குமே படிப்புல சாதிக்கணும்ங்கிற வெறி இருந்தது. அதனால எங்களுக்கு காதல் ரெண்டாம்பட்சமாத்தான் இருந்தது. வெளியில சுத்தினது இல்லை. காலேசுல பார்த்துக்கிறதுதான். படிப்பு முடிஞ்சதும் ரெண்டு பேரோட குடும்பத்துலயும் சொன்னோம் ஒத்துக்கலை. அப்புறம் நாங்க தனியா வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்ப நாங்க பட்ட கஷ்டம், அவமானம் கொஞ்சமில்லை. எனக்கு அப்பெல்லாம் உறுதுணையா நின்னவ உங்க அம்மாதான். அவளும் வேலைக்கு போனா. கஷ்டப்பட்டு இன்னைக்கு நல்ல நிலமையில இருக்கோம். ஆனா மனசுல இன்னும் ஒரு உறுத்தல் இருக்கத்தம்மா செய்யுது. அது எங்க சுயநலத்தால ரெண்டு குடும்பத்தை ஏமாத்திட்டோம். படிச்சு நமக்கு உதவியா இருப்பாங்கன்ற நம்பிக்கையில படிக்க வச்ச எங்களைப் பெத்தவங்களைத்தாம்மா சொல்லுறேன். அண்ணன்,தங்கை, அம்மா, அப்பாங்கிற குடும்ப உறவை இழந்தோம். அதை இன்னைக்கு வரைக்கும் திரும்ப பெறவே முடியலை." பேச்சை நிறுத்தியவரின் கண்ணில் இருந்து கண்ணீர் இறங்கியது.

அப்பா முதல்முறை அழுவதைப்பார்த்த அபூர்வாவுக்கு மேலும் அழுகை வந்தது.

அழுகையினூடே அப்பாவின் கண்ணீரை துடைத்தபடி "சரி விடுங்க" என்றாள் அம்மா.

"காதலுச்சு கல்யாணம் பண்ணுனவங்க காதலுக்கு எதிரியாக இருக்காங்கன்னா ஏன் தெரியுமா? சமுதாயத்துல அவங்கபட்ட அவமானங்கள், கஷ்டங்களை தங்களோட சந்ததியும் பெறக்கூடாதுன்னுதான். நீ அந்த பையனை காதலி வேண்டாம்ன்னு சொல்லலை. ஆனா பார்க், சினிமா, பீச்சுன்னு சுத்தாம ஒரு வரைமுறைக்குள் இருக்கட்டும். முதல்ல நல்லா படிங்க. நாளைக்கு தனியா நின்னு போராடுற மாதிரி வாழ்க்கை அமைஞ்சா வாழத்தெரியணும். படிப்பு முடிஞ்சதும் அந்த பையனோட விட்டுல பேசி நான் கல்யாணம் பண்ணிவைக்கிறேன். அந்த பையங்கிட்ட சொல்லி காதலை காலேசுக்குள்ள மட்டும் வச்சுக்கங்க."

"ம்....அப்பா நாளையில இருந்து நான் உங்ககூட கார்ல வந்துடுறேன்.."

"என்னம்மா... என் மகளைப் பற்றி எனக்குத் தெரியும். நீ எப்பவும் போல வண்டியில போ.. இப்ப போயி நிம்மதியா தூங்கு"

'நாளைக்கு அவங்கிட்ட சொல்லணும். அவன் ஒத்துக்கலையின்னா காதலுக்கு குட்பை சொல்லணும்' நினைத்தபடி அறைக்குள் சென்றவளுக்கு அம்மா கொடுத்த அறை வலிக்கவில்லை.

-சே.குமார்