வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: 'ஆ'சிரியர்

Saturday, February 20, 2010

'ஆ'சிரியர்


போனில் அந்த செய்தியை கேட்டதும் என்னால் சீரணிக்க முடியவில்லை.

"டேய்... என்னடா சொல்லுறே.. நிஜமாத்தான் சொல்லுறியா..?" - பதறினேன்.

"ஆமாண்டா... சாரு இப்ப ஜெயில்ல இருக்காரு..."

"...." என்னால் பேச முடியவில்லை. அவனே தொடர்ந்தான்.

"பள்ளி நிர்வாகம் அவரு மேல நடவடிக்கை எடுக்கப் போறதா சொல்லுறாங்க."

"அவரு இந்த மாதிரி... எப்படிடா நம்புனாங்க... அவருக்காக யாருமே பேசலையாடா..?

"இல்ல மாப்ளே... சூழ்நிலை அவருக்கு பாதகமா அமைஞ்சிருச்சு... அதனால அவருக்காக பரிஞ்சு பேச யாருமே முன் வரலை."

"நீங்கள் எல்லோரும் என்னடா பண்றீங்க... புடுங்குறீங்களா... அவரை வெளிய கொண்டுவர முயற்சி செய்யாம..."

"இல்ல மாப்ளே... பாதிக்கப்பட்ட பொண்ணே போலீஸ்ல கேஸ் கொடுத்ததால ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு..."

"நிர்வாகத்திடம் பேசிப் பார்க்கலாமுல்ல..."

"இல்ல அவங்க யாரையும் உள்ள விட மாட்டேங்கிறாங்க."

"சரி வேற என்ன செய்யலாம்... சொல்லு"

"என்னத்தை மாப்ளே செய்யுறது. எல்லோரு மாதிரி நாமளும் இருக்க வேண்டியதுதான். உப்ப தின்னவன் தண்ணி குடிக்கத்தானே வேணும் மாப்ளே.."

"சீ... என்னடா பேசுறே... உப்பத் தின்னவன்தான் தண்ணி குடிக்கணும். அவரு ஏண்டா குடிக்கணும்."

"-----------"

"என்னடா பேச மாட்டேங்கிற... சரிடா நான் கிளம்பி வாரேன்..." என்றபடி போனை வைத்தேன்.

"சே... என்ன உலகம். யாருக்குமே துரோகம் நினைக்காத மனிதருக்காக போராட ஒருத்தர்கூட முன்வரலையே... அவருக்கிட்ட படிச்சு இன்னைக்கு எத்தனையோ பேர் நல்ல இடத்துல இருக்கோம். யாரையும் அடிக்காம அவர் பாடம் நடத்துற தன்மை... எல்லோருக்கும் உதவுற குணம்... அப்படிப்பட்டவரா இதுமாதிரி கீழ்தரமா நடக்கப் போறாரு..." மனசு வலித்தது.

அலுவலகம் சென்று இரண்டு நாள் விடுப்பு வாங்கிக் கொண்டு ஊருக்கு கிளம்பினேன்.

"என்னடா... சொல்லாமக் கொல்லாம தீடீர்னு வந்து நிக்கிறே..."

"சும்மாதான் உங்களை பார்த்துட்டுப் போகலாமுன்னுதான்..."

"ஏண்டா பொய் சொல்லுறே... நாங்க வரச்சொன்னா ஏதோ உங்க பத்திரிக்கை ஆபிஸே உன்னாலதான் ஓடுற மாதிரி பேசுவே... இப்ப மட்டும் எப்படி எங்க மேல உனக்கு கரிசனம். எதாவது ஆபிஸ் வேலையா வந்திருப்ப..."

"இல்லம்மா... அவுக சாருக்காக வந்து இருக்கான்..." என்றபடி உள்ளே வந்தாள் தங்கை வனஜா.

"என்னடி சொல்லுறே..."

"ஆமாம்மா... கோவில்ல இருந்து வரும் போது ரமேஷ் அண்ணனைப் பார்த்தேன், சரவணன் வந்துட்டானான்னு கேட்டான். இன்னைக்கு எதுக்கு அவன் வாரான்னு நான் கேட்டப்ப அவன் தான் விசயத்தை சொன்னான்."

"என்னடா அதுக்காகவா வந்தே..?"

"ஆமாம்மா..."

"உங்க அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன நடக்கும் தெரியுமா?"

"என்ன நடந்தாலும் பரவாயில்லை. எனக்கு அவர் கடவுள் மாதிரி... அவரை வெளியில கொண்டு வந்து அவரு நல்லவருன்னு எல்லோருக்கும் நிரூபிப்பேன்." என்றபடி உள்ளே சென்றேன்.

மேஷை கூட்டிக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு சென்றேன்.

பத்திரிக்கையாளன் என்பதால் எனக்கு தலைமை ஆசிரியரை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவரிடம் பேசியதில் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சாருக்கு பாதகமாக அமைந்து விட்டதாக வருத்தப்பட்டார். அவரு இதுவரைக்கும் நல்ல மனிதர்தான் ஆனால் இப்ப நடந்த விஷயம்... யாராலயும் சீரணிக்க முடியவில்லை. அவரு மேல நடவடிக்கை எடுத்தாத்தான் எங்க பள்ளியோட பேரை காப்பாத்த முடியும். சாரி தம்பி உங்களுக்கு என்னால உதவ முடியாததுக்கு வருத்தப்படுறேன் என்று முடித்துக் கொண்டார்.

இதற்கு மேல் அவரிடம் பேசி பயனில்லை என்பதால் அங்கிருந்து கிளம்பி காவல் நிலையம் சென்றோம்.

"கேட்டியா... அவரு தப்பு பண்ணியிருக்காரு...யாருமே உதவ மாட்டாங்க. நீ தேவை இல்லாம அலையுறே...?" என்று கத்தினான் ரமேஷ்.

" இங்க பாரு நீ வாரதுன்னா வா... இல்லயின்னா பேசாம போயிடு..." எரிந்து விழுந்தேன். அதற்கு மேல் அவன் ஒன்றும் பேசவில்லை.

நான் பத்திரிக்கைகாரன் என்றதும் சாரை பார்க்க அனுமதி கிடைக்கவில்லை. அவரது மாணவன் நான் என்றும் தனிப்பட்ட முறையில் பார்க்க வந்திருப்பதாக தெரிவித்ததும் அனுமதி கிட்டியது.

சிறைக்கு உள்ளே எனது குரு அமர்ந்திருந்தார். எனக்கு அழுகை வந்தது.

"சா...சார்..." நா தழதழுத்தது.

"சரவணா... எப்ப வந்தே..? வா... ரமேஷ்..."

"காலையிலதான் வந்தேன்..."

"வீட்டுக்குப் போனியா... அம்மா என்ன பண்ணுறா...?"

"இல்ல போகலை... என்னால நீங்க இல்லாத வீட்டுல அம்மாவை மட்டும் தனியா பார்க்க முடியாது."

"---------"

"என்ன சார் இது. உங்க மேல வீண் பழி சுமத்தி... என்ன சார் நடந்துச்சு..."

"----------"

"பேசுங்க சார்... அப்பதான் நான் உங்களை வெளியில கொண்டு வந்து நிரபராதியின்னு நிரூபிக்க முடியும்.."

விரக்தியாக சிரித்தவர், "சரவணா நான் உங்கிட்ட தனியா பேசணும்..." என்றார்.

என் பார்வையை புரிந்து கொண்ட ரமேஷ், "சரி மாப்ளே... வண்டிக்கிட்ட நிக்கிறேன். வாரேன் சார்" என்றபடி கிளம்பினான்.

"சரவணா... என்னை மன்னிச்சுடு... " என்று கம்பிகளுக்கு உள்ளிருந்து எனது கைகளைப் பற்றிக் கொண்டார்.

"சா...ர்..."

"ஆமா சரவணா... நல்லவனா இருந்த எனக்குள்ளே கடந்த சில வருடமா சில மாற்றங்கள். புதுசா வேலைக்கு வந்த விஜி கூட தொடர்பு ஆயிட்டது. யாருக்கும் தெரியாம எங்களுக்குள்ள எல்லாம் நடந்துக்கிட்டிருந்தது. தீடீர்னு அவ வேலை வேணாமுன்னு எழுதிக் கொடுத்துட்டு எங்கயோ பொயிட்டா. எங்கிட்ட எதுவும் சொல்லலை. எனக்கு இருந்த நல்ல பேரால எனக்கும் அவளுக்கும் இருந்த தொடர்பு வெளியில தெரியாமலே போச்சு. அவ போன பின்னால எனக்குள்ள காம உணர்வுகள் மேலோங்கி நிற்க ஆரம்பிச்சது. என்னால அதுல இருந்து மீள முடியலை. அதனால..."

"அதனால..." எனக்குள் கோபம் பீறிட்டது.

"ஏழாப்பு... எட்டாப்பு... கிளாஸ்ல பாடம் நடத்தும் போது பொம்பளைப் பிள்ளைங்களை தொடக்கூடாத இடத்துல எல்லாம் தொட்டு பாடம் எடுக்க ஆரம்பிச்சேன்..."

எனது பார்வை அவரிடம் இருந்து விலகி தரையை வெறிக்க ஆரம்பித்தது.

"அன்னைக்கு பள்ளி முடித்ததும் ஒருசில பேருக்கு மட்டும் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். எல்லோரும் போயாச்சு... ஒருத்தி மட்டும் இருந்தா, அப்ப அவளோட இளமை எனனை..."

அதற்கு மேல் நிற்கப் பிடிக்காமல்... அவரையும் பார்க்கப் பிடிக்காமல் நடக்கலானேன்.

"சரவணா... நான்..."

அவரை சட்டை செய்யாமல் காவல் நிலையத்தை விட்டு வெளியேறினேன். எனக்குள் இருந்து சார் என்ற அந்த மிருகமும் வெளியேறி இருந்தது.

-'பரியன் வயல்' சே.குமார்
20 comments:

புலவன் புலிகேசி said...

நச் சிறுகதை நண்பா...உண்மையில் இவர்கள் ஆ"சிறியர்கள்" தான்...

thenammailakshmanan said...

இப்படியும் சில சிறுபுத்திக்காரார்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் குமார் என்ன செய்ய

மீன்துள்ளியான் said...

அண்ணே , என்ன பண்றது சில பேரோட நிலைமை அப்படி ஆயிடுது .. அதுக்கு ஏற்றமாதிரி "COUNSELLING " கொடுத்தா எல்லாம் சரி ஆயிடும்

பேநா மூடி said...

நல்ல கதை தல

புலவன் புலிகேசி said...

இந்தப் பதிவத்தான் இன்னைக்கு காலைல டரியல்ல எழுதிருக்கேன் தல...

சே.குமார் said...

ஆம் நண்பா. நீங்கள் சொல்வதுதான் உண்மை. இதுபோல் எத்தனை நிகழ்வுகள். அவற்றின் அடிப்படையே இக்கதையின் அடிப்படை நண்பர் புலவன்.

சே.குமார் said...

ஆம் சகோதரி தேனம்மை.

சே.குமார் said...

நீங்க சொல்வது சரிதான் மீன்துள்ளியான் அவர்களே..!

சே.குமார் said...

என்ன பேநா மூடி கதை நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு நம்மளையும் 'தல' ஆக்கிட்டீங்க.

சே.குமார் said...

புலிகேசி, உங்கள் டரியல் இப்ப பார்த்தேன்... எனது பதிவு பற்றி எழுதியது குறித்து மிக்க மகிழ்ச்சி புலிகேசி... உங்களைப் போன்ற நண்பர்கள் மனதில் நான் இடம் பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி. ஆமா நீங்களுமா தல போடனும்... அது சரி.

திவ்யாஹரி said...

"நச்" சிறுகதை நண்பா..புலவரின் டரியலில் இடம் பெற்றதற்கு வாழ்த்துக்கள்..

சே.குமார் said...

வாழ்த்துக்கு நன்றி சகோதரி திவ்யாஹரி.

தியாவின் பேனா said...

அருமை

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

SUREஷ் (பழனியிலிருந்து) said...

வலைச்சரம் மூலமாக வந்தேன்,

ஏன் இப்படிப் பட்ட கற்பனைகள்?

சே.குமார் said...

உங்கள் வருகைக்கும் உங்களது எண்ணத்திற்கும் நன்றி.

உங்கள் கேள்வி நல்லாயிருக்கவில்லை என்கிறதா இல்லை நல்லா இருக்கிறது என்கிறதா எனக்குப் புரியவில்லை.

சற்று தாங்கள் விளக்கமாக பின்னூட்டமிட்டால் நல்லா இருக்கும்.

Madurai Saravanan said...

நல்ல கருத்துள்ளக் கதை. கதை சொல்லிய விதம் அருமை. மதிக்கப்பட வேண்டியவர்கள் மிதிக்கப் படுவதற்க்கு இதுவும் காரணம். வாழ்த்துக்கள்

கண்மணி/kanmani said...

சாமியார்கள் ,பாதிரியார்கள் லிஸ்ட்டில் ஆ'சிறியர்' களும் சேர்ந்து வெகு காலமாயிட்டுது.

cheena (சீனா) said...

அன்பின் குமார்

மனிதனின் மனதில் சாத்தான் புகுந்தால் இப்படித்தான் - குண நலன்கள் தலை கீழாக மாறும் . என்ன செய்வது .... சார் என்ற மனிதன் இறுதி வரியில் மிருகமாகி விட்டானே .......

நல்ல கதை குமார்
நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா

பி.கு : ஏற்கனவே ஒரு இடுகையில் மறு மொழி இடும் பொழுது, மின்னஞ்சல் முகவரி கேடிருந்தேன் - வர வில்லை. இப்பொழுதாவது அனுப்ப இயலுமா
என் முகவரி cheenakay@gmail.com

சே.குமார் said...

வாங்க சீனா சார்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.