வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: காதல்

Friday, January 8, 2010

காதல்




"அம்மா நான் காலேசுக்குப் பொயிட்டு வாரேன்" என்றபடி தனது ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் அபூர்வா.

"சரிடி. பார்த்துப் போ"

"சரிம்மா... வாரேன்..."

தனது ஸ்கூட்டியை நேராக கம்பன் பூங்கா பக்கமாக ஓட்டினாள். அங்கே அவளுக்காக ராஜசேகர் காத்துக் கொண்டிருந்தான். அவள் வருவதற்குள் இவனைப் பற்றி ஒரு சிறிய அறிமுகம். அவளுடன் படிக்கும் அவள் அளவுக்கு வசதியில்லாதவன். எதோ ஒரு விதத்தில் அவளைக் கவர்ந்ததால் கடந்த ஒருவருடமாக அவளது காதலன்.

வேகமாக வந்தவள் அவன் அருகில் வண்டியை நிறுத்தினாள். "எப்ப வந்தே?"

"ஒரு பத்து நிமிடம் இருக்கும்"

"சரி... வா போகலாம்"

"நான் வண்டியை ஓட்டுறேன். "

"சரி... இந்தா புடி.."

அவன் வண்டியை எடுத்தது அவன் பின்னால் அவள் அமர்ந்து கொண்டாள். வண்டி கல்லூரி நோக்கி போகாமல் வேறு பாதையில் ஓடியது.

"டேய்... காலேசுக்குப் போகாம எங்கடா போற...?"

"சினிமாவுக்கு..."

"ஐய்ய்யய்யோ... இன்னைக்கு பிராக்டிக்கல் கிளாஸ் இருக்குடா..."

"தெரியும்.. ஆனா நாம இன்னைக்கு சினிமா போறோம்"

"வேணாண்டா... கிளாசுக்கு பொயிட்டு ஈவ்னிங் வேற எங்காச்சும் போகலாம்"

"நீ எங்கூட சினிமாவுக்கு மட்டும் வரமாட்டேங்கிறே ஏன்?"

"இல்லடா யாராச்சும் பார்த்துட்டு அப்பாகிட்ட சொல்லிட்டா"

"இப்புடி பப்ளிக்கா போகயில யாரும் பார்க்க மாட்டாங்களா?"

"இல்லடா அவங்கவங்க வேகமா போறதால யாரையும் அதிகம் பார்க்கமாட்டாங்க. ஆனா தியேட்டர் எல்லோரும் கூடுற இடம். அதனாலதான்..."

"அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப சினிமா போறோம். இல்லைன்னா நான் இறங்கிக்கிறேன். நீ காலேசுக்குப் போ"

"----------"

"என்னடி பதிலைக் காணோம்"

"சரி ஓட்டு... என்ன நடக்கணுமுன்னு இருக்கோ அது நடக்கட்டும்"

தியேட்டரில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவளை நிற்கவைத்துவிட்டு அவன் டிக்கெட் வாங்கிக் கொண்டு திரும்பினான்.

உள்ளே சென்று அமர்ந்ததும் "சொன்னா கேக்குறியா... எங்க அப்பா பிரண்ட் மாதிரி ஒருத்தர் என்னைய முறைச்சு முறைச்சு பார்த்தாரு. தெரியுமா?"

"அசடு... நீ அழகாயிருக்கேன்னு பாத்திருக்கலாம்.. இல்ல உன்னைய மாதிரி அவரு பொண்ணும் காதலிச்சு, இவரு ஒத்துக்காததால வீட்டை விட்டு ஓடியிருக்கலாம். அவரு உங்க அப்பா பிரண்ட மாதிரிதானே இருந்தார்... பிரண்ட் இல்லையே.."

"உனக்கென்ன ஆம்பளை... வீட்டுல கேட்டாலும் சமாளிச்சுருவே..."

"இவ்வளவு பயப்படுறவ அப்புறம் ஏன் லவ் பண்ணினே.."

"அதுக்காக சினிமாவுக்கு வந்தாதான் லவ்வா...?"

"அப்புறம்... காதல் டேஸ்ஸை அனுபவிக்கனும் தெரியுமா?"

"நான் எதுவும் சொல்லலை... இப்ப ஒங்கூட சந்தோஷமா படம் பார்த்தாலும் ராத்திரி அப்பா வீட்டுக்கு வந்து எதுவும் கேட்காதவரை பயம்தான்" என்றபடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

படம் முடிந்து இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு கல்லூரி செல்ல மனமில்லாததால் அவனை அதே பூங்காவில் இறக்கிவிட்டு வீடு வந்தாள்.

"என்னடி சீக்கிரம் வந்துட்டே.."

"தலை வலிம்மா..." என்றபடி ரூமுக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

கதவு தட்டப்படும் ஓசைகேட்டு விழித்துப் பார்த்தாள். கடிகாரத்தில் மணி ஆறாகியிருந்தது.

'நல்ல தூங்கிட்டேன் போல' என்று நினைத்தபடி கதவைத் திறக்க, அம்மா காபியுடன் நின்று கொண்டிருந்தாள்.

"சாரிம்மா... நல்லா தூங்கிட்டேன்" என்றபடி காபி கப்பை வாங்கிக் கொண்டாள்.

"அதனால என்ன... இன்னைக்கு காலேசுல அறுவையான கிளாஸா..."

"அதெல்லாம் இல்லம்மா.."

"அப்ப படம் நல்லாயில்லையோ..."

"அ...." வார்த்தை வராமல் காபி கோப்பை ஆடியது.

"யாருடி அவன்..."

"யாரு... எந்த படம்" துணிச்சலை வரவழைத்துக் கொண்டு பேசினாள்.

"பளார்..." விழுந்த அறையில் காபி கோப்பை கீழே விழுந்து நொறுங்கியது..

"என்ன தைரியம் உனக்கு... உங்க அப்பா கொடுக்கிற செல்லம். வண்டி வாங்கிக் கொடுத்தா அதுல ஒருத்தனை ஏத்திக்கிட்டு சினிமாவுக்குப் போற... ம்... "

'எவளோ வந்து போட்டுக் கொடுத்துட்டா... எவளா இருக்கும்...'

"இன்னைக்கு சாந்தா தியேட்டர்ல பாத்ததா சொல்லுவா... நாளைக்கு யாழினி பீச்சுல பார்த்தேன்னு சொல்லுவா.. நீ படிக்கப் போறமாதிரி தெரியலை... உங்க அப்பன் வரட்டும் இன்னைக்கு உனக்கு இருக்குடி. படிச்சது போதும் உடனே ஒருத்தனை பார்க்கச் சொல்லி உன்னைய தள்ளிவிட சொல்லுறேன்..." என்றபடி அங்கிருந்து அகல, படாரென்று கதவை சாத்திவிட்டு 'எல்லாத்துக்கும் காரணம் அந்த எருமை... வரட்டும் நாளைக்கு...' என்று மனதிற்குள் திட்டியபடி கட்டிலில் தொப்பென்று அமர்ந்தாள்.

அவள் லைட்டக்கூட போடாமல் கட்டிலில் படுத்திருந்தாள். கன்னத்தில் அம்மா கொடுத்த அறையின் எரிச்சல் இன்னும் இருந்தது. அப்பா வந்தா கதவை திறக்கக்கூடாது என்று நினைத்துப் படுத்திருந்தவளை வெளியில் கேட்ட அப்பாவின் குரல் எழுந்து உட்கார வைத்தது.

"என்ன கண்ணகி.. இன்னைக்கு பாப்பா அதுக்குள்ளயும் தூங்கிட்டாளா?"

"----------"

"என்ன மேடம் உம்முனு இருக்கீங்க. கேட்டதுக்கு பதிலையே காணோம்"

"பாப்பாவா... அது என்ன காரியம் பண்ணிட்டு இருக்கு தெரியுமா?"

"என்ன லவ் பண்றா அதானே..."

அருகிலிருந்து கேட்ட அம்மாவுக்கு எப்படியோ அறைக்குள் இருந்த அபூர்வாவுக்கு தூக்கிவாரிப் போட்டது.

"எ...எப்படி உங்களுக்கு..."

"எனக்கு இந்த விசயம் ஒரு மாதத்துக்கு முன்னாடியே தெரியும்."

"அப்ப எதுக்கு அந்த தெருப்பொறக்கி நாயை கண்டிக்காம இருக்கீங்க. யாராச்சும் ஒரு பையனை பார்த்து தள்ளிவிட்டுலாங்க."

"அவசரபடாதே... நீ அவளை சத்தம் போட்டியா?"

"ஆமா அடிச்சேன்"

"அடிச்சியா? என்னம்மா நீ அவகிட்ட இதமா எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறதைவிட்டுட்டு... "

"எப்படிங்க"

"இந்த காதலால நாம இழந்தது எவ்வளவுன்னு அவகிட்ட எடுத்துச் சொல்லியிருக்கலாமே..."

"போதுங்க. இந்த காதலால நாம பட்ட கஷ்டம்..."

"சரி...அதுக்காக அவ காதலை அழிக்கணுமா. நாம மட்டும் காதல் கல்யாணம் பண்ணிக்கலாம். அவ பண்ணிக்கக்கூடாதா...?"

அப்பா பேசியதை கேட்டதும் அபூர்வாவால் அறைக்குள் இருக்க முடியவில்லை. கதவை திறந்து கொண்டு அப்பா என்றபடி அவரிடம் ஓடி மடியில் முகம் புதைத்து விசும்பினாள்.

அவளை ஆதரவாக தடவியபடி "இங்க பாரும்மா, உன் காதலுக்கு அப்பா எப்பவும் எதிரியாகமாட்டேன். ஆனா, நானும் உன்னோட அம்மாவும் காதலிச்சப்ப ரெண்டு பேருக்குமே படிப்புல சாதிக்கணும்ங்கிற வெறி இருந்தது. அதனால எங்களுக்கு காதல் ரெண்டாம்பட்சமாத்தான் இருந்தது. வெளியில சுத்தினது இல்லை. காலேசுல பார்த்துக்கிறதுதான். படிப்பு முடிஞ்சதும் ரெண்டு பேரோட குடும்பத்துலயும் சொன்னோம் ஒத்துக்கலை. அப்புறம் நாங்க தனியா வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டோம். அப்ப நாங்க பட்ட கஷ்டம், அவமானம் கொஞ்சமில்லை. எனக்கு அப்பெல்லாம் உறுதுணையா நின்னவ உங்க அம்மாதான். அவளும் வேலைக்கு போனா. கஷ்டப்பட்டு இன்னைக்கு நல்ல நிலமையில இருக்கோம். ஆனா மனசுல இன்னும் ஒரு உறுத்தல் இருக்கத்தம்மா செய்யுது. அது எங்க சுயநலத்தால ரெண்டு குடும்பத்தை ஏமாத்திட்டோம். படிச்சு நமக்கு உதவியா இருப்பாங்கன்ற நம்பிக்கையில படிக்க வச்ச எங்களைப் பெத்தவங்களைத்தாம்மா சொல்லுறேன். அண்ணன்,தங்கை, அம்மா, அப்பாங்கிற குடும்ப உறவை இழந்தோம். அதை இன்னைக்கு வரைக்கும் திரும்ப பெறவே முடியலை." பேச்சை நிறுத்தியவரின் கண்ணில் இருந்து கண்ணீர் இறங்கியது.

அப்பா முதல்முறை அழுவதைப்பார்த்த அபூர்வாவுக்கு மேலும் அழுகை வந்தது.

அழுகையினூடே அப்பாவின் கண்ணீரை துடைத்தபடி "சரி விடுங்க" என்றாள் அம்மா.

"காதலுச்சு கல்யாணம் பண்ணுனவங்க காதலுக்கு எதிரியாக இருக்காங்கன்னா ஏன் தெரியுமா? சமுதாயத்துல அவங்கபட்ட அவமானங்கள், கஷ்டங்களை தங்களோட சந்ததியும் பெறக்கூடாதுன்னுதான். நீ அந்த பையனை காதலி வேண்டாம்ன்னு சொல்லலை. ஆனா பார்க், சினிமா, பீச்சுன்னு சுத்தாம ஒரு வரைமுறைக்குள் இருக்கட்டும். முதல்ல நல்லா படிங்க. நாளைக்கு தனியா நின்னு போராடுற மாதிரி வாழ்க்கை அமைஞ்சா வாழத்தெரியணும். படிப்பு முடிஞ்சதும் அந்த பையனோட விட்டுல பேசி நான் கல்யாணம் பண்ணிவைக்கிறேன். அந்த பையங்கிட்ட சொல்லி காதலை காலேசுக்குள்ள மட்டும் வச்சுக்கங்க."

"ம்....அப்பா நாளையில இருந்து நான் உங்ககூட கார்ல வந்துடுறேன்.."

"என்னம்மா... என் மகளைப் பற்றி எனக்குத் தெரியும். நீ எப்பவும் போல வண்டியில போ.. இப்ப போயி நிம்மதியா தூங்கு"

'நாளைக்கு அவங்கிட்ட சொல்லணும். அவன் ஒத்துக்கலையின்னா காதலுக்கு குட்பை சொல்லணும்' நினைத்தபடி அறைக்குள் சென்றவளுக்கு அம்மா கொடுத்த அறை வலிக்கவில்லை.

-சே.குமார்




14 comments:

வலசு - வேலணை said...

நல்ல எழுதி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கும் முதல் வருகைக்கும் நன்றி வேலனை வலசு.

அடிக்கடி வாங்க.

புதியவன் said...

நல்ல கதை தொடரவும்...
நீங்கள் எத்தனை ப்ளோகுகுகள் வைத்திருக்கிறீர்கள்

புதியவன் said...

நெறைய கதைகள் எழுதவும். நன்றி
உங்களிடம் எத்தனை வலை பதிவு இருக்கிறது?

'பரிவை' சே.குமார் said...

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புதிய நண்பர் புதியவனே..!

ஹைக்கூ கவிதைகளுக்கு கிறுக்கல்கள் (Http://shru2004.blogspot.com)

நீண்ட கவிதைகளுக்கு நெடுங்கவிதைகள் (Http://skvishal09.blogspot.com)

சிறுகதைகளுக்கு சிறுகதைகள் (Http://nithi83.blogspot.com)

நினைத்ததை எழுதுவதற்கு மனசு (Http://vayalaan.blogspot.com)

அடிக்கடி வாருங்கள் புதியவன்.

thiyaa said...

உங்களின் வலைப்பூக்கள் எல்லாம் அருமை

'பரிவை' சே.குமார் said...

உங்கள் கவிதையின் முன்னால் என் கவிதைகள் சாதாரணம் தியா.
என்னை கவர்ந்த வலை நண்பர்களில் நீங்களும் ஒருவர். என்னை பாராட்டியதற்கு மிக்க நன்றி.

Thenammai Lakshmanan said...

மிக அருமையான பகிர்வு குமார் பொங்கல் வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேனம்மை. தாங்கள் சிவகங்கை சீமையா?

துபாய் ராஜா said...

அருமையான கதை. வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி துபாய் ராஜா.

thiyaa said...

அருமையான பகிர்வு

'பரிவை' சே.குமார் said...

நன்றி தியா.

Mathi said...

கவிதையை போல எழுத்து நடை...

பாராட்டுக்கள்...

அன்புடன்,
மதி...