அதிகாலையில் செல்போன் அடிக்க, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை மூடியபடி சவுண்ட் வந்த திசையில் கையை துழாவி செல்லை எடுத்து தூக்க கலக்கத்தோடு 'அலோ' என்றான் மதி.
''நான் அப்பா பேசறேம்பா'' என்றது மறுமுனை. பேச்சில் ஏதோ ஒரு இறுக்கம்.
''என்னப்பா... என்னாச்சு இந்த நேரத்துல போன் பண்றீங்க. ஏதாவது பிரச்சினையா...?''
''நம்ம அம்மா நம்மளை விட்டுட்டு பொயிட்டாடா...'' போனில் உடைந்தார் அப்பா.
''அ... அப்பா... எ... என்ன சொல்றீங்க... அம்மா...'' வாரிச்சுருட்டி எழுந்தவனுக்கு பேச வரவில்லை.
''எப்படிப்பா...'' அழுகை பீறிட்டது.
''எப்பவும் போல எங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு, டி.வி. பார்த்துட்டு தூங்கப்போனா... மூணு மணியிருக்கும் என்னை எழுப்பி நெஞ்சுல ஏதோ அடைக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னா... நாங்க என்ன ஏதுன்னு பார்க்கிறதுக்குள்ளாற...'' பேசமுடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது.
''அண்ணனுக்கு போன் பண்ணிட்டிங்களா...?''
''ம்... பண்ணிட்டேன்... உடனே கிளம்பி வர்றேன்னான்.... நீ... எப்படிப்பா... உன்னால வரமுடியுமா...?'' கேட்கும் போதே அப்பாவின் குரல் உடைந்தது.
''நான் தெரியலைப்பா... பேசிட்டுப் போன் பண்றேம்பா... ஆனா எங்க அம்மா முகத்தை பார்க்கணும் போல இருக்குப்பா...'' அழுகையோடு கூறியவன் அதுக்கு மேல் பேசமுடியாமல் போனை கட் செய்தான்.
''அம்மா... எனக்காக எத்தனையோ தியாகங்கள் செய்தாயே அம்மா...'' என்று அரற்றியவனுக்கு அழுகை வெடித்தது.
அவனது அழுகுரல் கேட்டு சக நண்பர்கள் எழுந்தார்கள். 'ஏய்... மதி என்னாச்சு...?' என்று பதறினர்.
''அம்மா... அம்மா...'' அதற்குமேல் அவனால் கூறமுடியாவிட்டாலும் அவர்கள் புரிந்து கொண்டனர். எழுந்து அவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டனர்.
''இப்ப நீ போகணுமில்லயா...''
''போகணும்... ஆனா...''
''விடிந்ததும் நம்ம சூப்பர்வைஸர்கிட்ட பேசுவோம். அவரு என்ன சொல்றாரோ அதுபடி செய்வோம்...''
''ம்...'' என்றவன் கண்கள் மட்டும் அருவியாக.
''சார் நம்ம மதியோட அம்மா இறந்துட்டாங்களாம். ராத்திரி 2 மணிக்கு போன் வந்தது...''
''என்னப்பா நீங்க... எனக்கு அப்பவே இன்பார்ம் பண்ணவேண்டியதுதானே...'' என்றவர் மணியின் கைகளை ஆதரவாக பற்றிக்கொள்ள, மதி உடைந்தான்.
''மதி ஊருக்குப் போகணுமின்னு விரும்பப்படுறான் சார்... கடைசியாக ஒரு தடவை அம்மாவை பார்க்கணுமின்னு ஆசைப்படுறான்... அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் சார்.''
''எப்படிப்பா... நம்ம கம்பெனியிஸ ஒரு வருடத்துக்கு ஒருமுறைதான் அனுமதி... அதுவும் மதி ஆறுமாசம் முன்னாலதான் ஊருக்குப் பொயிட்டு வந்தான். வளைகுடா நாடுகளோட சட்ட திட்டம்தான் உங்களுக்குத் தெரியுமேப்பா... அதுவும் அவன் பார்க்கிற சைட்டோட வேலையை ஒரு மாசத்துக்குள்ளாற முடிக்கணும்ன்னு எம்.டி. சொல்லியிருக்காரு.... ம்...''
''சார்... அவங்க அம்மா முகத்தை ஒரு தடவை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறான்... ஒரு வாரம் மட்டும் லீவு வாங்கிக் கொடுங்க சார்... ப்ளீஸ்...'' மதிக்காக நண்பர்கள் கெஞ்சினர்.
''சரிப்பா... பத்துமணிக்கு எம்.டி. ரூமுக்கு வாங்க... எல்லோரும் வராதீங்க. யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் மதிகூட வாங்க... பார்க்கலாம். எப்படியாவது பேசி லீவு வாங்கித்தர முயற்சிக்கிறேன்''
எம்.டி.யிடம் வெகு நேரம் பேச, துக்க விஷயம் என்பதால் எம்.டி.க்குள் இருக்கும் தாய்மை உணர்ச்சி ஒப்புக் கொண்டது.
ஒரு வாரம் விடுப்பு கொடுக்கப்பட்டு அவன் விரைவாக செல்லும் பொருட்டு விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.
நண்பர்கள் உதவியுடன் விமான நிலையம் வந்து விமானத்தில் ஏறினான். மனசு மட்டும் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தது.
மனசுக்குள் அம்மா தனக்காக பட்ட கஷ்டங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, கண்கள் கண்ணீரை வடித்தபடி இருந்தன. எப்படியும் நாலு மணிக்கு திருச்சி போயிடலாம். ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போயிடலாம் என்று நினைத்துக் கொண்டான். எப்படியும் கடைசியாக அம்மா முகத்தை பார்த்துடலாம் என்று நினைத்தபோது அழுகை வெடித்தது.
அப்போது 'விமானம் ஒருசில காரணங்களால் சென்னையில் இறக்கப்படும். அங்கிருந்து திருச்சி செல்லும் பயணிகள் வேறொரு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசௌகரியத்திற்கு மன்னிக்கவும், நன்றி.' என்ற அறிவிப்பு வெளியாக, 'அய்யோ... அம்மா...' என்று கத்திய மதியை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்.
சென்னையில் விமானம் இறக்கப்பட, திருச்சி செல்லும் பயணிகள் அனைவரும் ஒரு அறையில் தங்கவைக்கப்பட்டனர்.
அப்போதே மணி மூன்று ஆகியிருந்தது. அங்கிருந்த போன் மூலம் தனது அண்ணனை தொடர்பு கொண்டான்.
''அண்ணே...'' அழுகை முந்திக் கொண்டது.
''என்னப்பா... திருச்சி வந்துட்டியா...? உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்...''
''விமானத்துல ஏதோ பிரச்சினையாம் சென்னையில இறக்கிட்டாங்க அண்ணே.... வேற விமானத்துல திருச்சிக்கு அனுப்புறாங்களாம். ஒரு மணி நேரத்துல திருச்சி வந்துடுவேன். வீட்டுக்கு எப்படியும் ஏழு மணிக்குள்ள வந்துடுவேன்.
அம்மாவை தூக்கிட வேணாம்ணே...''
''சரிப்பா... கவலைப்படாம வா.'' அண்ணன் ஆறுதல் கூறினார்.
போனை வைத்தவன் விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் சென்று, ''எப்ப சார் திருச்சிக்கு அனுப்புவீங்க'' என்றான்.
''அஞ்சு மணியாகும்'' என்று சாதாரணமாக சொல்ல, ''அஞ்சு மணியா சார்... நான் எங்கம்மா இறந்ததுக்குப் போறேன் சார்...'' என்று கத்தினான்.
''நான் என்ன சார் பண்ணட்டும்... திருச்சியில இருந்து வந்துக்கிட்டு இருக்கிற விமானத்துலதான் அனுப்ப முடியும். எத்தனை மணிக்கு வருதோ வந்த உடனே அனுப்பிடுவோம்.'' என்றார்.
தனது ராசியை நொந்தபடி சோகமாய் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.
ஊரில்...
''என்ன மாணிக்கம்... மணி அஞ்சாயிடுச்சு இதுக்கு மேலயும் போட்டு வைக்கிறது நல்லா இல்ல... ஐஸ் வச்சிருந்தாலும் இனிமே தாங்காது. அதுவும் நாளைக்கு சனிக்கிழமை வேற... அதனால எவ்வளவு நேரம் ஆனாலும் இன்னைக்கே முடிச்சிடுறது நல்லது...'' என்றனர் ஊர்க்காரர்கள்.
''ஆதி... தம்பிக்கு போன் போட்டு எங்க வர்றான்னு கேளுப்பா...''
''எப்படிப்பா... அவன் கூப்பிட்டாத்தான் உண்டு... அவன்கிட்டதான் சிம்கார்டு இருக்காதே...'' என்றான்.
''சரி... ஆகவேண்டியதைப் பாருங்கப்பா... மதி வர்றபடி வரட்டும்... வந்தா நேர சுடுகாட்டுக்கு வரட்டும்...'' என்று சொல்ல, கடைசி யாத்திரைக்கு அம்மாவை தயார் செய்தார்கள்.
விமானம் திருச்சி வரும்போது மணி ஆறேகால். கையில் லக்கேஜ் எதுவும் இல்லாததால் வேகமாக வெளியேறி, போனில் அண்ணனை தொடர்பு கொண்டான்.
''அண்ணே... திருச்சி வந்துட்டேன். எப்படியும் ஒரு மணி நேரத்தில வந்துடுவேன்...''
''சரிப்பா... நேர சுடுகாட்டுக்கு வந்துடு''
''சுடுகாட்டுக்கா...''
''ஆமா... எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு... இப்ப தூக்கப் போறேம்... உனக்காக அங்க காத்திருக்கிறோம்... வேகமாக வந்துடு''
''ச...சரிண்ணே...''
விரைவாக வெளியேறி வாடகைக் காரில் பேரம் பேசாமல் ஏறிக்கொண்டான். டிரைவரிடம் ''எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு வேகமாக போங்க...'' என்றவன் கண்களை மூடியபடி அழுகையை அடக்கிக் கொண்டான்.
''என்ன ஆதி... மதி எங்க வர்றானாம்... நேரம் ஆயிக்கிட்டே இருக்கு... மேகம் வேற ஒரு மாதிரி இருட்டிக்கிட்டு வருது. மழை வந்துட்டா சிரமமாயிடும்பா... குழிக்குள்ளாற தண்ணி நின்னுக்கிச்சுன்னா... என்ன பண்றது. லைட் எதுவும் இல்ல... இருட்டுல காரியம் பண்ண முடியாதுப்பா... என்ன மாணிக்கம் ஆகவேண்டியதை பார்க்கலாமா...''
''இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்... அவங்க அம்மா முகத்தைப் பார்க்கிறதுக்காக அவன் துபாயில இருந்து வர்றான் சித்தப்பா...'' என்று மகனுக்காக கெஞ்சினார் மாணிக்கம்.
அப்போது ஒரு சில துளிகள் தூறல் விழுக, ''மாணிக்கம் தூறல் வேற வந்துடுச்சு... பெரிய மழையாயிட்டா சிக்கலப்பா...''
''சரி ஆகவேண்டியதை பார்க்கலாம்'' சம்மதித்தார் மாணிக்கம்.
சுடுகாட்டில் செய்ய வேண்டிய காரியங்கள் முடிந்து மனைவியை குழிக்குள் இறக்கும் போதாவது மதி வந்திடமாட்டானா என்று அவர் மனம் தவித்தது. அவர் கண்முன்னால் அவர் மனைவி குழிக்குள் இறக்கப்பட, அதை காண முடியாதவராய் கண்களை மூடியபடி, கதறியபடி மண் அள்ளிப்போட்டார்.
அவரைத் தொடர்ந்து பெரியவன் அழுதபடி மண் அள்ளிப்போட மற்றவர்களும் மண் அள்ளிப்போட்டு விட்டு வெட்டியானிடம் நல்லா மூடிடப்பா என்று சொன்னார் ஒருவர்.
காரை ரோட்டில் நிறுத்தச் சொல்லி, டிரைவரிடம் சற்று நேரம் காத்திருக்கும்படி கூறிவிட்டு இருட்டில் ஒற்றையடிப்பாதையில் ஒடியவன்...
எதிரே அனைவரும் திரும்பி வருவது கண்டு ''அம்மா...'' என்று அந்தப் பிரதேசமே அதிரும்படி கத்தினான்.
---- பரியன்வயல் சே.குமார்
(இந்த சிறுகதை நான் சென்னையில் பத்திரிகை துறையில் இருந்தபோது எழுதி தமிழ்சிகரம்.காம் என்ற இணையத்தில் வெளிவந்தது.)
8 comments:
realy the people in gulf country they can feel it. we don't know this stroy or real. ur correct. its makes us to cry
in mrng u made me to cry
நன்றி சசி.
நன்றி மதார்.
Hi shruvish,
Congrats!
Your story titled 'சிறுகதைகள்: கடைசி வரை காணாமல்...' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 25th November 2009 10:20:02 PM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/144127
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
நன்றி தமிழிஷ் மற்றும் தமிழிஷ் வாசக நண்பர்களே..!
வார்த்தையே வரலீங்க... ஒரு நிமிஷம் தொண்டக்குழி அடச்சுருச்சு..
துக்கம் தொண்டையை அடைக்கிறது.
தயவு செய்து பின் குறிப்பிட்டு "இதயம் பலஹீனமனவர்கள் இதை படிக்கவேண்டாம்" என்று குறிப்பிடுக.
அன்புடன்,
மதி...
the same incident happened in my life on my brother's death. the only difference is I went to my native from chennai only.
i can't express my feelings here, but your story did it.
Thanks & Regards
R. Parthasarathy
அன்பின் குமார்
இதுதான் விதி என்பது - நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும். ம்ம்ம்ம்ம் - கதை சென்ற விதம் - நடை - அனைத்துமே இயல்பானவை. உரையாடல்களும் அருமை
நல்வாழ்த்துகள் குமார்
நட்புடன் சீனா
Post a Comment