வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: உங்களைப் போல் நானும்..!

Tuesday, September 8, 2009

உங்களைப் போல் நானும்..!

லுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது...


''ம்... இப்பச் சொல்லு உனக்கு என்ன பிரச்சினை...'' என்று மறக்காமல் கேட்டாள் ரமா.

''வீ...வீட்ல கொஞ்சம் பிரச்சினை...''

''என்ன பிரச்சினை...''

''எனக்கு குழந்தை இல்லைங்கிறது உனக்குத் தெரியும்... அதுக்கு காரணம் என்னங்கிறது யாருக்கும் தெரியாது. அவரும் பிறக்கிறப்ப பிறக்கட்டும்ன்னு சொல்லிட்டாரு. அதனால இதை ஒரு பொருட்டாவே கருதலை... ஆனா இப்ப அவரு இதையே காரணம் காட்டி...'' பேச்சை தொடர முடியாமல் நிறுத்தினாள்....

''ம்... காரணம் காட்டி...''

''ரெண்டு நாளா தொடர்ந்து தண்ணியடிச்சுட்டு வர்றாரு...''

''என்னது தண்ணியடிக்கிறாரா... அவரு அப்படிப்பட்ட ஆள் இல்லையே...''

''ஆமாண்டி... என்னங்க இது புதுசான்னு கேட்டா... அதுக்கு என்ன சொல்றாரு தெரியுமா? குழந்தை இல்லைங்கிற கவலையால தண்ணியடிக்கிறதா அவரு சொல்றாருடி...''

''ஓஹோ... ஏண்டி டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணினீங்களா...?''

''பார்த்தோம்... ஆனா ரெண்டு பேர் மேலயும் எந்த பிராப்ளமும் இல்லை. குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்குன்னுதான் சொன்னாங்க...''

''அப்புறம் என்ன... உன் வீட்டுக்காரர் குடிச்சுட்டு வர்ற அளவுக்கு யார் மேலயும் குறையிருக்குன்னு சொல்லலையே... அப்புறம் எதுக்கு அவரு குடிக்கணும்...''

''அதான் தெரியலை... புல்லா வர்றாரு... பக்கத்துல போக முடியலை. நாத்தம் குடலைப் புடுங்குது... ஒரு தடவைக்கு மேல எதாவது சொன்னா ஏண்டி அட்வைஸ் பண்றியாடின்னு அடிக்கிறாரு...''சொல்லும் போதே அழுதாள் மீனா.

''ஏய்... அழதடி... இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டலைன்னா உன்னோட வாழ்க்கை அழிஞ்சு போயிடும்... ம்... முள்ளை முள்ளாலதான்டி எடுக்கணும்... அதனால...''''அதனால...''

ரமா சொன்னதைக் கேட்டு மீனா அதிர்ச்சியுற்றாலும் அதுதான் சரியெனப்பட்டது. கதவைத் தட்டப்படும் ஓசை கேட்டு கதவைத் திறந்தாள் மீனா.

''என்ன மீனா சாப்பிட்டுட்டியா...'' நாகுழற கேட்டபடி உள்ளே நுழைந்தான் அவளது கணவன் சுந்தர்.

''இல்லங்க... உங்களை மாதிரியே எனக்கும் குழந்தை இல்லைங்கிற கவலை இருக்கு... அது இன்னைக்கு அதிமாயிடுச்சு... அதனால நானும் சரக்கு வாங்கி வச்சிருக்கேன். இனிமேதான் சாப்பிடனும்... ஒரு ஆளா சாப்பிடுறதைவிட நீங்க வந்த உடனே சாப்பிட்டா கம்பெனி கிடைக்குமே அதுதான் உங்களுக்காக காத்திருக்கிறேன்...''

''என்னடி சொல்றே... நீ தண்ணியடிக்கப் போறியா...? பொம்... பொம்பளைங்க செய்யக்கூடாத வேலைடி அது...'' என்று தள்ளாட்டத்துடன் கத்தினான்.

''ஏன் செய்யக்கூடாது...சாப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்கிற பொண்ணுங்க பசங்களோட சேர்ந்து தண்ணியடிக்கிறதா பேப்பர்ல செய்தி வரலை. ஏங்க உங்களுக்கு துக்கமுன்னா நீங்க தண்ணியடிப்பீங்க. நாங்க மட்டும் துக்கத்தை மனசுக்குள்ளே பூட்டி வச்சுக்கனும்... நீங்க மட்டும் தண்ணியடிக்கலாம்... நாங்க அடிச்சா என்ன தப்பு... வாங்க அடிக்கலாம்...''

''வேணான்டி...''

''வாங்கங்க... தண்ணியடிக்கிறதுக்காகவே கோழி வாங்கி வறுத்து வச்சிருக்கேன்... வாங்க துக்கம் போக சேர்ந்து தண்ணியடிக்கலாம்...'' என்று இழுக்க...

''ப்ளார்...'' அவள் கன்னத்தில் அவன் கை இறங்கியது.

''அடிங்க... நல்லா அடிங்க... குழந்தை  இல்லைங்கிற கவலை உங்களைவிட எனக்குத்தாங்க அதிகம். குழந்தை பிறக்கிறதுக்கு எங்ககிட்ட எந்த குறையும் இல்லைன்னாலும் வெளியில மலடி பட்டம் வாங்குறது நாங்க தாங்க. நான் தெருவுல போகும்போது யாராவது என்னைப் பார்த்து என்னம்மா இன்னும் குழந்தையில்லையான்னு கேக்குறப்போ நான் செத்துப் பிழைக்கிறேங்க... நீங்க கூடாத சகவாசத்தைக் கூட்டிக்கிட்டு தண்ணியடிக்கிறீங்க... அதை தட்டிக்கேட்டா அதுக்கு குழந்தையில்லைங்கிறதை காரணமா சொல்றீங்க...

என்னைய அடிக்கத் தெரிஞ்ச உங்களால உங்க மனசை திருத்தமுடியலையே... வேண்டாங்க... நம்மகிட்ட குறையில்ல குழந்தை பிறக்குமுன்னுதான் டாக்டர் சொல்லியிருக்காங்க... வீணாவுல மத்தவங்களோட சேர்ந்து தண்ணியடிச்சு உடம்பை கெடுத்துக்கிறதோட வாழ்க்கையையும் அழிச்சுக்காதீங்க...'' கண்ணீர் மல்க கெஞ்சினாள்.

சுந்தருக்கு அப்போதுதான் உறைத்தது. 'சே... என்ன ஜென்மம் நான்... அடுத்தவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு... எனக்கு எங்க புத்தி போச்சு... அடுத்தவனைப் பத்தி பேசி என்ன பண்ண முடியும்...' என்று மனதிற்குள் நினைத்தவன் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த மனைவியை 'சாரிம்மா' என்று அணைத்துக்கொண்டான்.

சே.குமார், பரியன்வயல்

(இந்த சிறுகதை நான் சென்னையில் பத்திரிகை துறையில் இருந்தபோது எழுதி தமிழ்சிகரம்.காம் என்ற இணையத்தில் வெளிவந்தது.)
No comments: