வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: நாணயம்

Sunday, April 18, 2010

நாணயம்



ந்த ஏரியாவில் தரமான பொருட்களை குறைவான விலைக்கு கொடுத்துப் பெயர் வாங்கிய மளிகைக் கடை அது.

கடை முதலாளி ராமநாதனுக்கு உடம்பு சரியில்லாததால் அவரது மகன் செல்வம் இரண்டு நாட்களாக கடைக்கு வந்து வியாபாரத்தைக் கவனிக்கிறான்.

"அண்ணே.... அண்ணேய்... மணி அண்ணே..."

"என்ன தம்பி..." கையில் பொட்டலத்தை மடித்தபடி உடம்பெங்கும் மளிகை சாமான்களால் ஏற்பட்ட அழுக்கோடு உள்ளிருந்து வந்தார் மணி.

"நம்ம கடையில எல்லா பொருளும் சுத்தமானதுதானே..?"

"ஆமா தம்பி... அதுல உங்களுக்கு என்ன சந்தேகம்..? அதனாலதான் நம்ம கடை வியாபாரத்தோட யாராலயும் போட்டி போட முடியலை..." பெருமையாய் சொன்னார்.

"ஆமா... அது சரிதான்... அதனாலதான் இன்னைக்கு கடை ஆரம்பிச்சவனெல்லாம் கோடீஸ்வரனாயிட்டான். ஆனா நாம அப்படியே இருக்கோம்.... இல்லையா?"

"என்ன தம்பி சொல்றீங்க..?"

"ஆமாண்ணே.... நமக்குப் பின்னால கடை வச்சவனெல்லாம் வீடு தோட்டம் தொறவுன்னு வசதியா செட்டிலாயிட்டான். நாம மட்டும் இன்னும் எந்த வசதியும் இல்லாம அதே பழைய காரை வீட்டுல இருக்கோம். அதனால..."

"அ... அதனால... என்ன... தம்பி..."

"நம்ம கடையில விக்கிற பொருளை நூறு சதவிகிதம் சுத்தமா கொடுக்காம கொஞ்சம் கலப்படம் பண்ணி வித்தா லாபம் பார்க்கலாமே...?"

"என்ன தம்பி சொல்றீங்க... வேண்டாம் தம்பி... அப்பா இந்த பெயரை எடுக்க ராப்பகலா எப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரு தெரியுமா...?

"அவரு சிரமப்பட்டு சொத்து சேக்கலையே... பேரை மட்டும்தானே சேர்த்து வச்சிருக்காரு... அதை வச்சி என்ன பண்றது. இனிமே தர்மம் நியாமுன்னு இருந்தா கடைசி வரைக்கும் சிரமப்பட வேண்டியதுதான். அதனால நான் ஒரு முடிவுக்கு வந்திட்டேன்..."

"எ... என்ன தம்பி முடிவு..."

"இனிமே மிளகுல மூணுல ஒரு பங்கு பப்பாளி விதையை கலக்குறோம்... சீனியில ரவையை கலக்குறோம்... அதே மாதிரி...." செல்வம் அடுக்கிக் கொண்டே போக....

இடைமறித்த மணி, "வேண்டாம் தம்பி... இது மக்கள் நம்ம மேல வச்சிருக்கிற நம்பிக்கைக்கு செய்யிற துரோகம்... அப்பாவுக்கு தெரிஞ்சா..."

"நிறுத்துங்க.... ஏதோ எங்க குடும்பத்துல் ஒருத்தரா பழகிட்டீங்கங்கிறதால உங்ககிட்ட இந்த விசயத்தைப் பத்தி பேசினேன். இல்லைன்னா நானே செஞ்சிருப்பேன்..."

"இல்ல தம்பி...."

"நான் சொல்றதை நீங்க செய்யிங்க... அதை விட்டுட்டு நியாயம் தர்மம் பேசாம... எங்களுக்கும் நியாயம் தர்மம் தெரியும்..." கோபமாய் பேச, பதில் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார் மணி.

"இனிமே இது தொடர்ந்து நடக்கணும்... அப்பாக்கிட்ட சொன்னீங்க நான் பொல்லாதவனாயிடுவேன்..." அவர் முதுகுக்குப் பின்னால் செல்வம் சொல்லிக் கொண்டிருந்தான்.


சில நாட்களுக்குப் பிறகு.... ஒரு மதியவேளை...

"தம்பி அப்பா இல்லை..." என்றபடி வந்தார் அந்த தெருவில் வசிக்கும் ஆசிரியர் சுப்பையா.

"அப்பாவுக்கு உடம்பு முடியலை... அதனால நான்தான் பார்க்கிறேன்... ஏன் சார் சும்மாதானே... சாமான் எதுவும் வேணுமா...?"

"இல்ல தம்பி ஒரு விசயம்... அதை அப்பாகிட்ட..." என்று இழுத்தார்.

"என்ன சார் விசயம்... எங்கிட்ட சொல்லலாமுன்னா சொல்லுங்க நான் அப்பாகிட்ட சொல்லிடுறேன்..."

"நான் சொல்லப் போற விசயத்தைக் கேட்டு நீங்க தப்பா நினைக்கக்கூடாது. நம்ம கடையில இதுவரைக்கும் இந்த மாதிரி நடந்தது கிடையாது. ரெண்டு நாளைக்கு முன்னாடி வாங்கிய சாமானெல்லாம் சுத்தமா இல்லை... ஏதோ கலப்படம் பண்ணினது மாதிரி தெரியுது. நான் நம்ம கடையில் அதுமாதிரி செஞ்ச்சிருப்பீங்கன்னு சொல்லலை... ஆனா நீங்க மொத்தமா பொருள் வாங்கிற இடத்துல இந்த மாதிரி பண்ணியிருக்க வாய்ப்பிருக்கு இல்லையா....

"எங்க வீட்ல கூட சொன்னாங்க ராமண்ணன் கடையிலயும் கலப்படம் பண்ண ஆரம்பிச்சுட்டாங்கன்னு... நான் சத்தம் போட்டேன்... உங்க அப்பா இந்த மாதிரி ஒருக்காலமும் செய்யமாட்டாரு... அவரு பேருல மட்டும் ராமன் இல்ல... குணத்துலயும் ராமன்தான். இதுவரைக்கும் இங்க பொருள் வாங்கின யாருமே நேர்ல வந்து சொல்ல மாட்டாங்க. ஏன்னா... அப்பா மேல அவ்வளவு மரியாதை.

"அவருக்கே தெரியாம நடக்க வாய்ப்பிருக்கு இல்லையா..? நீங்க பொருட்களை பார்த்து வாங்கணுங்கிறதாலதான் நான் நேர்ல வந்து சொல்றேன். இனிமே பார்த்து வாங்குங்க தம்பி... உங்களுக்கு கெட்ட பெயர் வந்துடாம பார்த்துக்கங்க... நான் வர்றேன்..."

"சரி... சா...சார்.... நான் பார்த்துக்கிறேன்..."

அவர் சென்றதும் செல்வத்திடம் மணி "தம்பி பாத்தீங்களா.... நம்ம அப்பா மேல உள்ள மரியாதையை... இதை சம்பாதிக்கத்தான் தம்பி நாளாகும்... பணம் எப்ப வேணுமின்னாலும் சம்பாதிக்கலாம். ஆனா நல்லவன்கிற பேரை சம்பாதிக்கிறதி அவ்வளவு சுலபமில்லை.

"அன்னைக்கு என்ன சொன்னீங்க... அடுத்தவன் வீடு வாசல்னு இருக்கான்னுதானே... தம்பி இந்தக் கடையில் சம்பாதித்த காசுலதான் அப்பா மூணு பொண்ணுங்களை படிக்கவச்சசு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்திருக்காரு.... உங்களையும் நல்லா படிக்கவச்சிருக்காரு... அதெல்லாம் இந்த கடை வருமானம்தானே... இதையெல்லாம் அன்னைக்கே நான் சொல்லியிருப்பேன்... அப்ப நீங்க கேக்கிற மூடுல இல்லை...

"நம்ம கடையில வாங்குன சாமான் நல்லாயில்லையின்னதும் வேற கடைக்குப் போகாம நேர வந்து சொல்லிட்டுப் போறாரு பாருங்க... அதுதான் அப்பா மேல உள்ள மரியாதை... இதை யாராலும் அவ்வளவு சீக்கிரத்துல சம்பாதிக்க முடியாது தம்பி... இனிமே கலப்படம் பண்ண நினைக்காதீங்க... நாம எப்பவும் போல இருந்தா போதும்..." முடித்த போது அவரது கன்னத்தில் கண்ணீர் இறங்கியது.

"அண்ணே... என்னை மன்னிச்சிடுங்க.... பணமும் புகழும்தான் வாழ்க்கையின்னு நெனச்சுட்டேன்... ஆனா நாணயம்தான் பெரிய சொத்து... அது அப்பாகிட்ட இருக்குன்னு இப்ப தெரிஞ்சுக்கிட்டேன்... இனிமே கலப்படம் பண்ணனுமுன்னு மனசாலகூட நினைக்கமாட்டேன். இங்க நடந்தது அப்பாவுக்கு தெரிய வேண்டாம்..." என்றவன் மனதிற்குள் அப்பாவிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.




12 comments:

Menaga Sathia said...

நாணயத்தில் சிறப்பை உணர்த்தும் அழகான கதை.பாராட்டுக்கள் சகோ!!

க்ரைம் கதை எழுதுங்களேன்...

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கு நன்றி அக்கா.

நா பாட்டுக்கு சிவனேன்னு எதோ எழுதுறேன். உங்களைப் போல ரொம்ப நல்லவங்க கொடுக்கிற ஊக்கத்துல மன உழறல்களை எழுதுகிறேன். என்னப்போயி க்ரைம் கதையெல்லாம்.... ம்... கோபம் இருந்தா கதை கடிச்சிருந்தா Mail ID தர்றேன். மெயில்ல திட்டுங்க. கோர்த்து விடப்பார்க்கிறீங்களே...

vanathy said...

கதை நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

'பரிவை' சே.குமார் said...

வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி வானதி.

Madumitha said...

எளிமையான கதை.
வலுவான கரு.
மிக நன்று.

முனைவர் இரா.குணசீலன் said...

நாணயமான கதை...
அருமை..

பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்..

மனிதர்களைச் சம்பாதிப்பதுதான் உண்மையான வாழ்க்கை!

'பரிவை' சே.குமார் said...

@மதுமிதா said...
//எளிமையான கதை.
வலுவான கரு.
மிக நன்று.//
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி மதுமிதா.

'பரிவை' சே.குமார் said...

@முனைவர். இரா.குணசீலன் said...
//நாணயமான கதை...
அருமை..

பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்..

மனிதர்களைச் சம்பாதிப்பதுதான் உண்மையான வாழ்க்கை!//
வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..! மனிதர்களை சம்பாதித்தால் போதும் மற்றது தானாக வரும்.

'பரிவை' சே.குமார் said...

மன்னியுங்கள் ஆனந்தி.
உங்கள் கருத்தை செலக்ட் பண்ணி பப்ளிஷ் பண்ணுமுன்னர் கை தவறுதலாக ரிஜக்ட் பட்டன் கிளிக் ஆகிவிட்டது.
உங்கள் கருத்துக்கு நன்றி.
நட்புக்கு நன்றி

Anonymous said...

unmiya chollanumna entha nanyam appdingra sothai thavira ethumey devai ellaina..

appa engalkku entha nanyam apdingra sotthai thavira ethum serthuvaikavillai..antha nanyathal endru nangal nallapadiayaga erukkomna.

verum varthiyaku engalai nambi kadan kuduthu (vatiudanthan) endru kadan adithu
nambikaioda valthukitu erukomna..

kasu periya visimaey ella..sona nerathila kadanium vatiium correcta kudutha nambuvanga...oruvati apdi erntha pathathu epothum nanyanama erukkanum athan mukiam..

Nandri alagana
unmiyana pagirvu.
v.v.s
complan surya

'பரிவை' சே.குமார் said...

உங்கள் கருத்து உண்மைதான் சூர்யா.

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

'பரிவை' சே.குமார் said...

தமிழ்10ல் இதுதான் முதல்முறை , வாக்களித்த 10 நண்பர்களுக்கும் நன்றி.