(எனது வலைத்தளங்களான கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள், சிறுகதைகள், மனசு ஆகிய நான்கிலுமாக இது எனது 100 வது படைப்பு. தொடர்ந்து கருத்துகளை அனுப்பி என்னைக் கூர்தீட்டும் நண்பர்கள் கமலேஷ், சரவணக்குமார், பா.ராஜாராம், பூங்குன்றன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.)
அது ஒரு 'குக்'கிராமம். அந்த கிராமத்துல இருக்கிற எல்லா வீட்டுலயும் ஒரு சமையல்காரர் இருப்பாங்க. அது சமையல் மேஸ்திரியாகவோ, பந்தியில் நிற்பவராகவோ, எடுபிடியாகவோ இருக்கலாம். அதனால்தான் அது 'குக்'கிராமம்.
நமது கதையின் நாயகர் கருப்பையா மேஸ்திரி. சமையல்ல ராஜா,முகூர்த்த நாட்கள் வந்துட்டா பயங்கர பிசியாயிடுவாரு. அந்தளவுக்கு அவருக்கு தனி மரியாதை. ஒரு மகனும் மூணு பொண்ணுங்களும் அவரது வாரிசுகள். சமையல் வேலை செய்தே நல்லா படிக்க வைத்து, நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்தார்.
பேரன் பேத்தி எடுத்தாச்சு இன்னும் சமைக்க போகணுமாப்பா என்று வாரிசுகள் தடுத்தும் இது என்னோட பிறந்தது. என் கட்டை மண்ணுல போறவரைக்கும் இதுதான் என் வாழ்க்கை. நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும் என்று அவர்களின் அன்பு வேண்டுகோளை நிராகரித்து இந்த வயதிலும் சமையல் வேலைக்குப் போகிறார்.
'அம்மா, நீயாவது அவர்கிட்ட சொல்லேன். எங்களோட இருக்கலாமுல்ல.' என்று மகன் பலமுறை அம்மாவிடம் சொல்லியும், 'அவரு நான் சொல்லி எப்ப கேட்டிருக்காரு இப்ப கேட்க. அவரு போக்குலயே விடுங்க...' என்ற பதில்தான் கிடைத்தது.
அதனால் வேலை நிமித்தமாக வெளியிடங்களில் வசிக்கும் பிள்ளைகள் மாதம் ஒருமுறையவது வந்து பார்த்துச் செல்வார்கள். தினமும் போன் செய்வார்கள். பிள்ளைகளைப்பற்றி யாரிடமும் குறை சொல்லதில்லை. குறை சொல்லும் அளவுக்கு பிள்ளைகளும் வைத்துக் கொள்ளவில்லை.
கடந்த ஒரு வாரமாக ஒரு பெரிய இடத்துக் கல்யாணத்தில் சமைத்துவிட்டு காலையில் தான் வந்தார். ஒரு வாரமாக அடுப்பு அணலில் நின்றது அவரை ரொம்ப சோர்வாக காட்டியது.
மனைவி உமையாளுக்கு அவரை பார்த்ததும் பயமாகிவிட்டது. "என்னங்க உடம்புக்கு எதும் சரியில்லையா? என்ன பண்ணுது?" பதறினாள்.
"அட வேலை பார்த்தது அப்படி தெரியுது. வேற ஒண்ணும் இல்லை. குளிச்சுட்டு ஒரு ஒறக்கம் போட்டா சரியாப் போயிடும்."
"சுடு தண்ணி வக்கிறேன்..."
"எதுக்கு... அடி போடி பைத்தியகாரிச்சி... கம்மாயில போயி விழுந்து குளிச்சா உடம்பு வலி கிடம்பு வலி எல்லாம் பறந்துடும். கொஞ்சம் வரக்காப்பி போட்டுத்தாரியா..?
"ம்... இருங்க போட்டுக்கிட்டு வாரேன்." என்றபடி கையை ஊன்றி எழுந்த உமையாளை பார்த்து "கிழவிக்கு வயசாயிடுச்சு... காபி தூளை போடுறதுக்குப் பதில் மிளகுத்தூளை போட்டுறாதே" என்றார் கிண்டலாக.
"ஆமா... இவரு ரொம்ப இளவட்டம்... என்னயவிட ரெண்டு வயசு கூட நினைப்புல இருக்கட்டும்." என்று அவரது முகத்தில் குத்திவிட்டு அடுப்படி நோக்கி சென்றாள்.
காபியை குடித்துக் கொண்டிருந்தபோது போன் அடித்தது. "ஏய்... போன எடு. பிள்ளைகளா இருக்கும்" என்றார்.
"அலோ யாரு...?" என்ற உமையாள் "இருக்காக... இந்தா குடுக்கிறேன்." என்றபடி "இந்தாங்க உங்களுக்குத்தான்" என்று அழைத்தாள்.
"அலோ... கருப்பையா பெசுறேன்..."
"......."
"அடடே.... தம்பியா... அப்படியா.... இப்பதான் வந்தேன். ஆமா... அப்பாகிட்ட சொல்லுங்க... சாயந்திரம் வர்றேன்... கண்டிப்பா ஆறு மணிக்கெல்லாம் வந்துடுறேன். என்ன தம்பி... நீங்க வண்டியெல்லாம் அனுப்ப வேண்டாம்... நான் நடந்தே வந்துருவேன்... ஆகட்டும் தம்பி..." என்றபடி போனை வைத்தார்.
"யாருங்க போனுல?"
"அட நம்ம சேவுகன் செட்டியாரு பையன். வீட்டுல ஏதோ ஒரு விஷேசமாம். அதுக்கு சமைக்கணுமுன்னு பேசுறதுக்காக வரச்சொன்னாராம்."
"பசங்க சொல்லுற மாதிரி சமைக்கப் போறதை விட்டுட்டு பேரப்பிள்ளைங்க கூட இருக்கலாமுல்ல."
"என்ன உனக்கு பேரப்பிள்ளைங்ககிட்ட போகணுமின்னா சொல்லு, இன்னக்கே பஸ் ஏத்திவிடுறேன். போயி இருந்துட்டு எப்ப வர பிரியப்படுறியோ அப்ப வா. அதை விட்டுட்டு என்னய இழுக்காதே."
"ம்க்கும்... கோபம் மட்டும் வந்துரும். என்னமோ செய்யுங்க சாமி.."
நம் பிடியில் காலம் இல்லை காலத்தின் பிடியில்தான் நாம். எனவே காலங்கள் நமக்காக நிற்பதில்லை. ஒருநாள் அவர் சமையலுக்கு சென்றிருந்த பொழுது உமையாள் இறந்து விட்டாள்.
அவரைப் போயி கூட்டி வந்தனர். ரொம்பவே உடைந்து விட்டார். அவர் அழுதது கல் நெஞ்சக்காரரையும் கலங்கச் செய்தது. ஒருபுறம் அடக்கம் செய்துவிட்டு வந்து சாப்பாடு போட அகத்திகீரை உள்பட சில காய்கள் வைத்து சமையல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.
என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சமையல் செய்பவரிடம் சென்று "நான் சமைக்கிறேன்" என்றதும், "என்ன மாமா இது? நீங்க சமைக்கிறதா... அத்த செத்துக் கிடக்கிறப்ப... பக்கத்துல இருக்காம...என்ன மாமா இதெல்லாம்..?"
"தம்பி இருக்கான் அவன் பார்த்துப்பான். உங்க அத்தைக்கு என் சாப்பாடுன்னா ரொம்ப..." உடைந்து அழுதார்.
"மாமா..."
"அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவ போறன்னைக்கு நா சமைக்கிறேன். என்னைய சமைக்க விடுங்க"
"என்ன கருப்பையா இது... சின்ன பிள்ளையாட்டம். அவங்க சமைக்கட்டும். நீ வா"
"இல்ல ராமையா... அவளுக்கு எஞ்சமையலுன்னா ரொம்ப பிடிக்கும். கடைசிய நான் சமைக்கிறேனே.." கெஞ்சினார்.
"அவ இருக்கும் போது சமைக்க போனது போதும்ன்னு சொல்லுவாப்பா... ஆனா நான் நிப்பாட்டலை. இன்னையோட நிப்பாட்டுறேன். இதுதான் என்னோட கடைசி சமையல்... கடைசி சமையல்... கிறுக்கு சிறுக்கி நான் உனக்காக சமைக்கிறதுதான் கடைசி..." புலம்பினார்.
"சரிப்பா... அவன் சமைக்கட்டும்... பிரேதத்தை மதியம்தானே எடுக்கப் போறோம். என்ன வர்ற சாதி சனம் ஒரு மாதிரி பேசும். ம்... இவனோட மனசு அதுகளுக்கு எங்கே தெரியப்போகுது."
கண்களில் நீரோடு கரண்டியை வாங்கிக் கொண்டார். உள்ளம் அழுததால் அவரது சமையலில் உப்பு கூடிப்போனது.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
சதம் அடிச்சதுக்கு முதலில் எங்க வாழ்த்து(க்)களைப் பிடிங்க.
கரண்டியை அப்பூறம் பிடிக்கலாம்.
அருமையான கதை. ஆனால் .....
சொல்றதா வேணமான்னு இருக்கு.
பொதுவா சாவு நடந்த வீட்டில் அன்றைக்கு யாரும் அடுப்புப் பத்தவைக்க மாட்டாங்க.
அன்னிக்குச் சாப்பாடு சம்பந்தி வீட்டுக்காரர் ஏற்பாடு செய்வாங்க.
இதையே அவர் மனைவியின் கருமத்துக்கு செஞ்சுருந்தார்ன்னா.....
போகட்டும் விடுங்க.
குக் கிராமக் குக்கின் கதை அருமை.
நண்பரே... எங்க ஏரியாவுல சாவு நடந்த வீட்ல அடக்கம் பண்ணுறவரைக்கும் பங்காளிகள், சம்பந்தப்புரம் எல்லோரும் சாப்பிட மாட்டாங்க. அடக்கம் பண்ணிட்டு வந்த பிறகு எல்லோருக்கும் சாப்பாடு போடுவாங்க. அதை வைத்து எழுதியதுதான் இந்த கதை. முதல் முறை என் வலைக்குள் நீங்கள், உங்கள் உரிமையுடன் கூடிய உண்மையான கருத்துக்கு நன்றி.
அடிக்கடி வாங்க. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..!
உங்கள் கருத்துப்படி மாற்ற முயற்சிக்கிறேன். நாளை பார்த்து பின்னூட்டமிடவும்.
சிறுகதை படித்து சற்று நேரம் கண்கலங்கி விட்டது ஸார்.அருமை.
100க்கு வாழ்த்துக்கள்
100 வதுக்கும் வாழ்த்துக்கள்
நன்றி பூங்குன்றன். தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
நன்றி கரிசல்காரன்.
என் வலைக்குள் முதல்முறை நீங்கள்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி..!
அடிக்கடி வாங்க.
நண்பா,
முதல்முறை என் வலைக்குள் நீங்கள். அதற்கு நன்றி.
முடியாது என்பது எதுவும் இல்லை நண்பா. உங்கள் திறமையை உங்களால் மட்டுமே உணரவும் உயர்த்தவும் முடியும்.
மற்றவர்கள் பாராட்டு என்பது திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம்.
நண்பர்கள் பாராட்ட பாராட்ட இன்னும் நல்லா பண்ணனும் என்ற உத்வேகம் வரும்.
உங்கள் தொடர்கதையை (சரிதானே) சில நாட்களுக்கு முன் படித்த ஞாபகம். இருப்பினும் மீண்டும் படித்து கண்டிப்பாக பின்னூட்டம் இடுகிறேன்.
நட்புக்கு நன்றி..!
Kalanga vachiteenga :(
முதல்முறை என் வலைக்குள் நீங்கள். அதற்கு நன்றி.
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி..!
அடிக்கடி வாங்க.
Post a Comment