வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: 2009

Saturday, December 19, 2009

புரிஞ்சு வாழணும்


ராமநாதனுக்கு மகளின் போக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. செல்லமாய் வளர்ந்த மகள்தான் ‎இருந்தாலும் திருமணத்திற்குப்பின் அவள் செய்கைகளால் அவருக்கு நிம்மதி குறைந்தது.‎

சம்பந்தி வீட்டார் தன் அளவுக்கு வசதி இல்லாதவர்களாக இருந்தாலும் தரமான குடும்பம். ‎மாப்பிள்ளைப் பையன் பிரபலமான கம்பெனியில் விற்பனைப்பிரிவு மேலாளர். நல்ல ‎சம்பளம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. இந்த காலத்தில் இப்படி ஒரு பையன் ‎கிடைப்பது என்பது அரிது. ‎

தன் மேல் உள்ள மரியாதையில் மருமகளை சம்பந்தி வீட்டார் எதுவும் சொல்வதில்லை ‎என்பதால் அவருக்கு கொஞ்சம் நிம்மதி. இருந்தாலும் தேவையில்லாமல் கணவனுடன் ‎சண்டையிட்டு நிம்மதியை கெடுத்துக் கொள்ளும் மகளுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்று ‎மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவரது அலைபேசி சிணுங்கியது.‎

‎"அலோ... ராமநாதன் ஹியர்..."‎

‎"அங்கிள் நான் ரவி..."‎

‎"என்ன மாப்ளே... நலமா... அப்பா அம்மா நலமா... திவ்யா எப்படி இருக்கா?"‎

‎"ம்... எல்லோரும் நலம் மாமா... நீங்களும் அத்தையும் நலமா?.. திவாகர் பேசினானா..?"‎

‎"நல்ல சுகம். திவா நேத்து பேசினான். சென்னையில அவனோட பிஸினஸ் நல்லா ‎போகுதாம். எங்களையும் சென்னைக்கே வரச்சொல்லி பாடாபடுத்துறான்."‎

‎"போக வேண்டியதுதானே மாமா..."‎

‎"அட போங்க மாப்ளே... நம்ம ஊரை விட்டுட்டு அங்க போயி... அதெல்லாம் நமக்கு சரியா ‎வராது. அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி மருமகளை சென்னைக்கு அனுப்பி ‎வைப்போம்."‎

‎"சரி மாமா... சீக்கிரம் நல்ல பொண்ணா பாருங்க."‎

‎"பார்ப்போம் மாப்ளே... வேற என்ன விசயம் மாப்பிள்ளை..."‎

‎"எப்பவும் உள்ளதுதான்..."‎

‎"என்ன திவ்யா... சண்டை போட்டுட்டு வந்துட்டாளா...?" ‎

‎"ம்..."‎

‎"சாரி மாப்ளே... நீங்க எதுவும் நினைக்காதீங்க... அவளுக்கு சரியான பாடம் கற்பித்தான் சரி ‎வருவா... "‎

‎"நீங்க எதுக்கு மாமா சாரி கேட்டுக்கிட்டு... இது என்ன புதுசா..?. கல்யாணமாகி இந்த ஒரு ‎வருசத்துல இது எழுவதாவது தடவைன்னு நினைக்கிறேன்...என்ன செய்யிறது. இன்னமும் ‎புரிஞ்சுக்க மாட்டேங்கிறாளேன்னுதான் வருத்தமா இருக்கு. மாமா நீங்க எதுவும் வேகமா பேச ‎வேணாம். கன்சீவா வேற இருக்கா... ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டும்."‎

‎"அவளுக்கு உங்க மனசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க தெரியலையே... மாப்ளே"‎

‎"திருந்திடுவா மாமா... சரி மாமா, பார்த்துக்கங்க... ஈவினிங் போன் பண்ணுறேன்..."‎

‎"சரி மாப்ளே..."‎

போனை வைத்தவர் மனைவியிடம் "உம் பொண்ணு வாறாளாம். மாப்ள போன் பண்ணுனார்" ‎

‎"நீங்க கொடுத்த செல்லம்தான் இப்ப அவ பண்ணுற செயல்களுக்கு காரணம். அவளை என்ன ‎செய்யிறதுன்னே தெரியலை..."‎

சம்பந்தி வீடு அதிக தூரமில்லை பக்கம்தான். ஆட்டோவில் வந்தால் அரை மணி ‎நேரத்திற்குள் வந்துவிடலாம் என்று நினைத்தபடி "இந்த தடவைதான் அவ சண்டை ‎போட்டுகிட்டு வர்றது கடைசியா இருக்கணும்" என்றபடி சேரில் அமர்ந்து தினசரியை ‎கையில் எடுத்துக் கொண்டு செல்பேசியில் யாருடனோ பேசினார்.‎

வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் ஓசை கேட்டதும் பேப்பரை வைக்காமல் கண்களை மட்டும் ‎வாசலுக்கு கொண்டு சென்றார். மகள்தான்... வரட்டும்... என்று நினைத்தபடி மீண்டும் ‎பேப்பரில் கவனம் செலுத்தினார்.‎

‎"அப்பா..."‎

கண்களை மெல்ல உயர்த்தி " அடடே... வா... திவ்விக்குட்டி... ஆமா மாப்ளே எங்கே? ‎வரலையா..?" என்றவர் "சரிம்மா உள்ள போ" என்றபடி மீண்டும் பேப்பரில் கவனம் செலுத்த ‎ஆரம்பித்தார்.‎

திவ்யாவிற்கு அப்பாவின் செயல் வருத்தம் அளித்தது. எப்பவும் அருகில் இழுத்து உச்சி ‎முகர்ந்து கன்னத்தில் முத்தமிடும் அப்பா முதல் முறையாக வித்தியாசப்படுகிறார். அவரின் ‎செயல் வருத்தத்தை அளித்தது. உள்ளே நுழைந்தது "அம்மா, அப்பாவுக்கு என்னாச்சு?" ‎என்றாள்.‎

‎"என்னடி வந்ததும் வராததுமா... அவருக்கென்ன நல்லாத்தான் இருக்காரு... யாரும் அவருக்கு ‎முடியலையின்னு சொன்னாங்களா..?"‎

‎"ஐயோ... அம்மா... எப்பவும் எனக்கு முத்தம் கொடுப்பாரு... இன்னைக்கு வான்னு ‎சொல்லிட்டு பேப்பர படிக்கிறாரு..."‎

‎"ப்பூ... இவ்வளவுதானா... நான் என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன். உனக்கு ‎கல்யாணமாகி ஒரு வருசமாச்சு. இன்னும் நீ சின்னப்பிள்ளையில்ல... தெரிஞ்சுக்க..."‎

‎"வந்தது ஆரம்பிக்காதம்மா..." என்றாள் கோபமாக.‎

‎"இங்க பாரு..." எதோ சொல்ல வந்தவளை கணவனின் குரல் தடுத்தது. ‎

‎"என்னங்க"‎

‎"நான் கடைத்தெரு பக்கம் பொயிட்டு வாரேன். எதுவும் வாங்கணுமா..? வந்த புள்ளைக்கிட்ட ‎வழவழன்னு பேசாம அதுக்கு சாப்பிட எதாவது கொடு..."‎

‎"ம்க்கும்... மகளை யாரும் ஒண்ணு சொல்லக்கூடாது. சரி வரும்போது நெஞ்செலும்பு ‎இருந்தா வாங்கியாங்க. திவ்யாவுக்கு சூப் வச்சுக் கொடுப்போம்."‎

‎"சரி... நம்ம ராமசாமி வந்தான்னா இருக்கச் சொல்லு." என்றபடி கிளம்பினார்.‎

ராமநாதன் போய் சிறிது நேரத்திற்கெல்லாம் ராமசாமி வந்தார். "வாங்கண்ணே..."‎

‎"என்னம்மா நல்லாயிருக்கியா... அடடே திவ்வி வந்திருக்கா... ஏம்மா மாப்பிள்ளை வரலை..."‎

‎"இல்ல அங்கிள்... அவருக்கு லீவு இல்லை" அழகாய் பொய் சொன்னாள்.‎

‎"எங்க உங்க அப்பன்"‎

‎"கடை வீதிக்கு போயிருக்காங்க"‎

‎"மக வந்திருக்குல்ல... மட்டன் வாங்க போயிருக்காங்க. இப்ப வந்துருவாங்க. நீங்க வந்தா ‎இருக்கச் சொல்லச் சொன்னாங்க... இருங்க வந்துடுவாங்க"‎

திண்ணையில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து திவ்யா கொடுத்த தண்ணீரை அருந்தியபடி, ‎‎"சொக்கனூர் பொயிட்டு வாரேன்" என்றார்.‎

‎"என்ன விசயமுண்ணே... அவ்வளவு தூரம்?"‎

‎"அக்கா மக வீட்டுக்குத்தான்..."‎

‎"சும்மாதானே..."‎

‎"என்னத்தை சும்மா... இந்தா நம்ம புள்ளைங்களை கட்டிக் கொடுத்தோம். அதுக பாட்டுக்கு ‎இருக்குதுங்க. பிரச்சினையில்லாத சம்மந்தம். ராமு திவ்யாவை எப்படி வளர்த்தான்னு ‎ஊருக்கே தெரியும். நாங்கூட எம்மகளை அப்படி வளர்க்கலை. திவ்யா புகுந்த வீடு வசதியில ‎குறஞ்சவங்கன்னாலும் மனசால உயர்ந்தவங்கன்னு அவன் அடிக்கடி சொல்லுவான். அவ ‎இப்ப அவங்க கூட சந்தோஷமாக இருக்கிறது அவனுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு. ‎ஆனா அக்கா பொண்ணு வாழப்போன இடத்துல மாமியா, மாமனாரு, புருஷன் எல்லோரும் ‎கொடுமைக்காரங்க. தினமும் அடி உதைதான். பாவம் அந்த பச்சைப்புள்ள. அப்பாவும் இல்ல. ‎அம்மாகிட்ட சொல்லி அழுதுருக்கு. அக்கா எங்கிட்ட அழுதுச்சு. அதான் இன்னைக்கு போய் ‎வச்சுக்கிறதா இருந்தா அந்தப் புள்ளையை கண்கலங்காம வச்சுக்க. இல்ல அத்து ‎விட்டுடுன்னு சொல்லிட்டு வாரேன்."‎

‎"என்ன அங்கிள் இது அநியாயம்... யாருமே கேட்கலையா?"‎

‎"என்னம்மா பண்றது. நல்ல புருஷன் கிடைக்கணுமுன்னுதான் நாங்க ஆசைப்படுறோம். ‎ஆனா என்ன பண்றது ஒரு சில பேரோட தலையெழுத்து இப்படி. இது பரவாயில்லை ‎இன்னும் சில புள்ளைங்க நல்ல கணவன் அமைந்தும் தேவையில்லாம சண்டை போட்டு ‎வாழ்க்கையை கெடுத்துக்கிறாங்களே அத என்ன சொல்றது. வாழ்க்கையை புரிஞ்சு வாழ்ந்தா ‎சந்தோஷத்திற்கு குறை இருக்காது " என்றதும் திவ்யாவிற்கு சுளீர் என்றது.‎

‎"சரியாயிடுமா அண்ணே..."‎

‎"இனி எல்லாம் சரியாயிடும்முன்னு நினைக்கிறேன். இனியும் அவங்க திருந்தலையின்னா ‎அத்துக்கிட்டு வந்துட வேண்டியதுதான். அதோட தலை எழுத்து... என்ன பண்றது… மாத்தவா ‎முடியும்..." என்றவர், திவ்யாவிடம் "என்னம்மா திவ்வி, மாப்பிள்ளை ராத்திரிக்கு ‎வருவாரா?" என்று கேட்டார்.‎

‎"ஆ..ஆமா அங்கிள்..."‎

‎"இப்ப மாதிரி எப்பவும் சந்தோஷமாக இரும்மா... உங்கப்பன் என்ன கேட்டாலும் வாங்கிக் ‎கொடுப்பான். அவனுக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம்."‎

‎"சரி அங்கிள்"‎

ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். ‎

‎"ந்தா கறியும் நெஞ்செலும்பும் இருக்கு... உங்க அண்ணனுக்கும் சேர்த்து சமை... வாடா... ‎எப்ப வந்தே... " மனைவியிடம் கொடுத்தபடி நண்பனை வரவேற்றார் ராமநாதன்.‎

‎"இப்பதான் வந்தேன். சும்மா பேசிக்கிட்டிருந்தோம். மக வந்த உடனே கறி வாங்கப் ‎போயிட்டியா..."‎

‎"ஆமா... வாயிம் வயிறுமா இருக்க புள்ளை... மாப்பிள்ளை நல்லா பார்த்துக்கிட்டாலும் ‎எனக்கு அவ இன்னும் குழந்தைதாண்டா. அவளுக்கு நெஞ்செலும்பு சூப்புன்னா ரொம்ப ‎பிடிக்கும். அதான்... சரி அண்ணி பசங்க நலமா..?"‎

‎"எல்லோரும் நலம்."‎

‎"வாடா தோட்டத்துப் பக்கம் போயி பேசலாம்."‎

‎"என்னடா... வந்த காரியம் சக்ஸஸா..?"‎

‎"ம்ம்... அக்கா மக கதை ஒண்ண சொல்லி திவ்யாவுக்கு மறைமுகமா புரிய வச்சேன். இனி ‎பிரச்சினை இருக்காது. "‎

‎"உண்மையாவா சொல்லுறே..?"‎

‎"ம்... அவ திருந்தணுங்கிறதுக்காக அக்கா மாப்பிள்ளை மேல பழி போடும்படியாயிடுச்சு. ‎பரவாயில்லை. நம்ம புள்ளை நல்லாயிருக்கணும். நீ போன் பண்ணினதும் வய வேலைய ‎அப்படியே போட்டுட்டு வந்தேன். சாப்பிட்ட உடனே போகணும்."‎

‎"ரொம்ப நன்றிடா... எனக்கு எப்படி அவளுக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலை... அதான் ‎உங்கிட்ட கேட்டேன்."‎

‎"ம்.. நமக்குள்ள என்ன நன்றி... அது இதுன்னு..."‎

பழைய கதைகளை பேசிவிட்டு வீடு திரும்பிய போது திவ்யா அலைபேசியில் கணவனுடன் ‎சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். ராமநாதனின் கைகள் ராமசாமியின் கைகளை ‎பற்றிக்கொண்டது.‎

(குறிப்பு: வணக்கம். எனது சிறுகதையான 'வெள்ளாமை' தினத்தந்தி - ஞாயிறு மலரில் (20/12/2009) வெளிவந்துள்ளது. )

‎-சே.குமார்




Friday, December 11, 2009

சமையல்

(எனது வலைத்தளங்களான கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள், சிறுகதைகள், மனசு ஆகிய நான்கிலுமாக இது எனது 100 வது படைப்பு. தொடர்ந்து கருத்துகளை அனுப்பி என்னைக் கூர்தீட்டும் நண்பர்கள் கமலேஷ், சரவணக்குமார், பா.ராஜாராம், பூங்குன்றன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.)

அது ஒரு 'குக்'கிராமம். அந்த கிராமத்துல இருக்கிற எல்லா வீட்டுலயும் ஒரு சமையல்காரர் இருப்பாங்க. அது சமையல் மேஸ்திரியாகவோ, பந்தியில் நிற்பவராகவோ, எடுபிடியாகவோ இருக்கலாம். அதனால்தான் அது 'குக்'கிராமம்.

நமது கதையின் நாயகர் கருப்பையா மேஸ்திரி. சமையல்ல ராஜா,முகூர்த்த நாட்கள் வந்துட்டா பயங்கர பிசியாயிடுவாரு. அந்தளவுக்கு அவருக்கு தனி மரியாதை. ஒரு மகனும் மூணு பொண்ணுங்களும் அவரது வாரிசுகள். சமையல் வேலை செய்தே நல்லா படிக்க வைத்து, நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்தார்.

பேரன் பேத்தி எடுத்தாச்சு இன்னும் சமைக்க போகணுமாப்பா என்று வாரிசுகள் தடுத்தும் இது என்னோட பிறந்தது. என் கட்டை மண்ணுல போறவரைக்கும் இதுதான் என் வாழ்க்கை. நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும் என்று அவர்களின் அன்பு வேண்டுகோளை நிராகரித்து இந்த வயதிலும் சமையல் வேலைக்குப் போகிறார்.

'அம்மா, நீயாவது அவர்கிட்ட சொல்லேன். எங்களோட இருக்கலாமுல்ல.' என்று மகன் பலமுறை அம்மாவிடம் சொல்லியும், 'அவரு நான் சொல்லி எப்ப கேட்டிருக்காரு இப்ப கேட்க. அவரு போக்குலயே விடுங்க...' என்ற பதில்தான் கிடைத்தது.

அதனால் வேலை நிமித்தமாக வெளியிடங்களில் வசிக்கும் பிள்ளைகள் மாதம் ஒருமுறையவது வந்து பார்த்துச் செல்வார்கள். தினமும் போன் செய்வார்கள். பிள்ளைகளைப்பற்றி யாரிடமும் குறை சொல்லதில்லை. குறை சொல்லும் அளவுக்கு பிள்ளைகளும் வைத்துக் கொள்ளவில்லை.

கடந்த ஒரு வாரமாக ஒரு பெரிய இடத்துக் கல்யாணத்தில் சமைத்துவிட்டு காலையில் தான் வந்தார். ஒரு வாரமாக அடுப்பு அணலில் நின்றது அவரை ரொம்ப சோர்வாக காட்டியது.

மனைவி உமையாளுக்கு அவரை பார்த்ததும் பயமாகிவிட்டது. "என்னங்க உடம்புக்கு எதும் சரியில்லையா? என்ன பண்ணுது?" பதறினாள்.

"அட வேலை பார்த்தது அப்படி தெரியுது. வேற ஒண்ணும் இல்லை. குளிச்சுட்டு ஒரு ஒறக்கம் போட்டா சரியாப் போயிடும்."

"சுடு தண்ணி வக்கிறேன்..."

"எதுக்கு... அடி போடி பைத்தியகாரிச்சி... கம்மாயில போயி விழுந்து குளிச்சா உடம்பு வலி கிடம்பு வலி எல்லாம் பறந்துடும். கொஞ்சம் வரக்காப்பி போட்டுத்தாரியா..?

"ம்... இருங்க போட்டுக்கிட்டு வாரேன்." என்றபடி கையை ஊன்றி எழுந்த உமையாளை பார்த்து "கிழவிக்கு வயசாயிடுச்சு... காபி தூளை போடுறதுக்குப் பதில் மிளகுத்தூளை போட்டுறாதே" என்றார் கிண்டலாக.

"ஆமா... இவரு ரொம்ப இளவட்டம்... என்னயவிட ரெண்டு வயசு கூட நினைப்புல இருக்கட்டும்." என்று அவரது முகத்தில் குத்திவிட்டு அடுப்படி நோக்கி சென்றாள்.

காபியை குடித்துக் கொண்டிருந்தபோது போன் அடித்தது. "ஏய்... போன எடு. பிள்ளைகளா இருக்கும்" என்றார்.

"அலோ யாரு...?" என்ற உமையாள் "இருக்காக... இந்தா குடுக்கிறேன்." என்றபடி "இந்தாங்க உங்களுக்குத்தான்" என்று அழைத்தாள்.

"அலோ... கருப்பையா பெசுறேன்..."

"......."

"அடடே.... தம்பியா... அப்படியா.... இப்பதான் வந்தேன். ஆமா... அப்பாகிட்ட சொல்லுங்க... சாயந்திரம் வர்றேன்... கண்டிப்பா ஆறு மணிக்கெல்லாம் வந்துடுறேன். என்ன தம்பி... நீங்க வண்டியெல்லாம் அனுப்ப வேண்டாம்... நான் நடந்தே வந்துருவேன்... ஆகட்டும் தம்பி..." என்றபடி போனை வைத்தார்.

"யாருங்க போனுல?"

"அட நம்ம சேவுகன் செட்டியாரு பையன். வீட்டுல ஏதோ ஒரு விஷேசமாம். அதுக்கு சமைக்கணுமுன்னு பேசுறதுக்காக வரச்சொன்னாராம்."

"பசங்க சொல்லுற மாதிரி சமைக்கப் போறதை விட்டுட்டு பேரப்பிள்ளைங்க கூட இருக்கலாமுல்ல."

"என்ன உனக்கு பேரப்பிள்ளைங்ககிட்ட போகணுமின்னா சொல்லு, இன்னக்கே பஸ் ஏத்திவிடுறேன். போயி இருந்துட்டு எப்ப வர பிரியப்படுறியோ அப்ப வா. அதை விட்டுட்டு என்னய இழுக்காதே."

"ம்க்கும்... கோபம் மட்டும் வந்துரும். என்னமோ செய்யுங்க சாமி.."

நம் பிடியில் காலம் இல்லை காலத்தின் பிடியில்தான் நாம். எனவே காலங்கள் நமக்காக நிற்பதில்லை. ஒருநாள் அவர் சமையலுக்கு சென்றிருந்த பொழுது உமையாள் இறந்து விட்டாள்.

அவரைப் போயி கூட்டி வந்தனர். ரொம்பவே உடைந்து விட்டார். அவர் அழுதது கல் நெஞ்சக்காரரையும் கலங்கச் செய்தது. ஒருபுறம் அடக்கம் செய்துவிட்டு வந்து சாப்பாடு போட அகத்திகீரை உள்பட சில காய்கள் வைத்து சமையல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சமையல் செய்பவரிடம் சென்று "நான் சமைக்கிறேன்" என்றதும், "என்ன மாமா இது? நீங்க சமைக்கிறதா... அத்த செத்துக் கிடக்கிறப்ப... பக்கத்துல இருக்காம...என்ன மாமா இதெல்லாம்..?"

"தம்பி இருக்கான் அவன் பார்த்துப்பான். உங்க அத்தைக்கு என் சாப்பாடுன்னா ரொம்ப..." உடைந்து அழுதார்.

"மாமா..."

"அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவ போறன்னைக்கு நா சமைக்கிறேன். என்னைய சமைக்க விடுங்க"

"என்ன கருப்பையா இது... சின்ன பிள்ளையாட்டம். அவங்க சமைக்கட்டும். நீ வா"

"இல்ல ராமையா... அவளுக்கு எஞ்சமையலுன்னா ரொம்ப பிடிக்கும். கடைசிய நான் சமைக்கிறேனே.." கெஞ்சினார்.

"அவ இருக்கும் போது சமைக்க போனது போதும்ன்னு சொல்லுவாப்பா... ஆனா நான் நிப்பாட்டலை. இன்னையோட நிப்பாட்டுறேன். இதுதான் என்னோட கடைசி சமையல்... கடைசி சமையல்... கிறுக்கு சிறுக்கி நான் உனக்காக சமைக்கிறதுதான் கடைசி..." புலம்பினார்.

"சரிப்பா... அவன் சமைக்கட்டும்... பிரேதத்தை மதியம்தானே எடுக்கப் போறோம். என்ன வர்ற சாதி சனம் ஒரு மாதிரி பேசும். ம்... இவனோட மனசு அதுகளுக்கு எங்கே தெரியப்போகுது."

கண்களில் நீரோடு கரண்டியை வாங்கிக் கொண்டார். உள்ளம் அழுததால் அவரது சமையலில் உப்பு கூடிப்போனது.



Saturday, December 5, 2009

சிறுகதைப் போட்டிக் கதை: பார்வைகள்

செம்மொழிப் பைந்தமிழ் மன்றம் - சிறுகதைப் போட்டிக் கதை

குறிப்பு : ஒரு இளைஞன்... ஒரு இளம்பெண்... ஒரு ரயில்/பஸ் பயணம்... காதல்.
(படித்து பின்னூட்டம் இடுங்கள். மறவாமல் வாக்கும் அளியுங்கள்.)

சிறுகதைப் போட்டி நடத்தும் வலைத்தளம்: http://simpleblabla.blogspot.com



அரசு விரைவுப் பேருந்து திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி இருட்டைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இரவு நேர பயணமாதலால் அதிக கூட்டமில்லை. சன்னல் அடைத்திருந்த போதும் மார்கழி மாதக் குளிர் பேருந்துக்குள் இருக்கத்தான் செய்தது. சேலைத்தலைப்பை இழுத்து மூடிக் கொண்டு சன்னலோரமாக அமர்ந்திருந்தேன்.

பேருந்துக்குள் ஆடியோ, வீடியோ இரண்டும் வேலை செய்யாததால் இருந்த பத்துப் பேரும் நிம்மதியாக இருந்தோம்.

பேருந்து ஓட்டுநர் நிறுத்தம் இல்லாத ஒரு இடத்தில் திடீரென பேருந்தை நிறுத்தினார். எதற்கு இங்கு நிறுத்துகிறார் என்று யோசிக்கும் போதே ஒரு இளைஞனும் யுவதியும் அவசர அவசரமாக ஏறினர். பேருந்து விளக்கில் அவர்களது முகம் சரிவரத் தெரியாவிட்டாலும் வீட்டை விட்டு ஓடிவந்த காதல் ஜோடி என்பது எனக்குப் புரிந்தது. அவர்கள் எனக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.


நடத்துனரிடம் இராமநாதபுரத்துக்கு பயணச்சீட்டு வாங்கினர். அந்தப் பெண் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவர்களை பின்னால் இருந்து பார்த்தபோது அவனுக்கு இருபது வயசுக்குள் இருக்கும். அவளுக்கு பதினெட்டு நிரம்பியிருக்க வாய்ப்பில்லை. 'இந்த வயதில் காதல். இதுகளாலே வாழ்க்கை போராட்டத்துல வெல்லமுடியுமா? .' அவர்களது பேச்சு எனது சிந்தனையை கலைத்தது.

"எனக்குப் பயமாயிருக்கு..." அந்த யுவதி தோளில் சாய்ந்தபடி விசும்பலினூடே பேசினாள்.

"அசடு நான் இருக்கேன். எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..." .

'ம்... இவனுக்கிட்ட என்ன இருக்கு... எப்படி பார்ததுப்பான்' எனக்கு கோபம் வந்தது.

"இல்ல.. சித்திக்கு தெரிஞ்சா..."

"தெரிஞ்சா என்ன பண்ணமுடியும்..? யார் வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..."

'அடேங்கப்பா... இவரு தமிழ் சினிமா கதாநாயகன் எத்தனை பேரு வந்தாலும் பறந்து பறந்து அடிச்சு விரட்டப் போறாரு. மூதேவி... இழுத்துக்கிட்டுப் போற பொண்ணுக்கு ஒருவேளை கஞ்சி ஊத்துமான்னு தெரியலை... இவரு பார்த்துப்பாராம்.' எனக்குள் கோபம் எரிமலையாய் கனன்றது.

"இல்லை... என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு..."

அவன் அந்த யுவதியோட நெத்தியில முத்தமிட்டு "எதையும் நினைக்காம அப்படியே தூங்கு. எதாயிருந்தாலும் நாளை பார்த்துக்கலாம்." என்றபடி அணைத்துக் கொண்டான்.

எனக்கு அதற்கு மேல் பொறுமையில்லை. தம்பி என்று அந்தப் பையனை அழைத்தேன். அவனும் என்ன என்பது போல் திரும்பினான்.

"உனக்கு வயசு என்ன?"

"என்னோட வயசு உங்களுக்கு எதுக்கு மேடம்...?"

"சொல்லுப்பா..."

"பத்தொன்பது... ஏன்?"

"இரு... அவசரப்படாதே...படிக்கிறியா..."

"இல்லை..."

"ம்ம்... இவ படிக்கிறாளா...?

"ஆமா..."

"இந்த வயசுல வாழ்க்கையின்னாலே என்னன்னே தெரியாது. அப்புறம் எப்படி?"

"நீங்க என்ன சொல்லுறீங்கன்னு புரியலை..."

"புரியலையா... அதான் இழுத்துக்கிட்டு ஓடுறியே... குடும்பச்சுமையின்னா என்னன்னு தெரியுமா..?"

"இழுத்துக்கிட்டு ஓடுறேனா... என்ன சொல்லுறீங்க..."

"என்னப்பா புரியாத மாதிரி நடிக்கிறே... உன்னோட ஆசை தீரும் வரைக்காவது அவளை... "

"மேடம்..." அவனது கத்தலில் பேருந்துக்குள் இருந்த அனைவரும் எங்கள் பக்கம் திரும்பினர்.

"உண்மைய சொன்னா கத்துறே..." நானும் பதிலுக்கு கத்தினேன். அந்தப் பெண் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

"எதுங்க உண்மை... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தா காதலர்களாத்தான் இருக்கணுமா...?"

"காதலர்களா இல்லைன்னா நீங்க ஏன் இந்த நேரத்துல ஓடிவந்து ஏறணும்... அப்பா அம்மாவை மறந்து இவளுகளும் அரிப்பெடுத்து ஓடியாந்துடுறாளுங்க..." கோபத்தில் யோசிக்காமல் வார்த்தையை விட்டேன். அந்தப் பெண் அழ் ஆரம்பித்தாள்.

"இப்ப அழு... ஆத்தா அப்பன் மொகத்துல கரியை பூசிட்ட்டு..."

"பேச்சை நிறுத்துங்க மேடம். அப்புறம் மரியாதை கெட்டுடும். இவ யாரு தெரியுமா என் தங்கை... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தாளே காதலிக்கிறாங்கன்னு ஏன் நினைக்கிறீங்கன்னு தெரியலை. நீங்க மட்டும் இல்லை நாட்டுல முக்கால்வாசி பேர் அப்படித்தான் நினைக்கிறீங்க. அது ஏன்னே தெரியலை. தனியா வண்டியில போறது அண்ணன் தங்கையாக இருந்தாலும் உங்க பார்வைக்கு தப்பாத்தான் தெரியுது. அதனாலதான் இன்னைக்கு பெரும்பாலான அண்ணன் தங்கைகள் சேர்ந்து எங்கயும் போறதில்லை." சிறிது நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான்.

"யாரையும் பர்ர்த்தவுடனே தப்பா எடை போடுறதை நிறுத்துங்க. எங்களுக்கு அம்மா இல்லை. அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சித்தி எங்களுக்கு நல்லவங்களா அமையலை. எவ்வளவு கொடுமை பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணிட்டாங்க. அப்பா எதுவும் கேட்கிறதில்லை. நான் படிக்கலை. ஆனா இவ நல்லா படிப்பா. இப்ப இவ படிப்ப கெடுத்து சித்தியோட சொந்தத்துல ஒரு குடிகாரனுக்கு கட்ட ஏற்பாடு நடக்குது. இவளை நல்லா படிக்க வைக்கணும். எங்க அம்மா செத்தப்புறம் எங்க அப்பா வேற கல்யாணம் பண்ணியதால மாமா வீட்டு உறவு அத்துப்போச்சு. இருந்தாலும் மாமா உதவுவருங்கிற நம்பிக்கை இருக்கு. அதனால அப்பா, சித்தி எல்லாம் பக்கத்து ஊருக்கு ஒரு விஷேசத்துக்கு போயிருக்கிறதால யாருக்கும் தெரியாம மாமா ஊருக்கு கிளம்பிட்டோம். "
அவனுக்கு கண்ணீர் வந்தது. அந்தப் பெண் தனது தாவணியால் துடைத்தாள்.

எலலோரும் என்னை புழுவைப்போல பார்த்தனர். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அந்தப் பையனின் கைகளை பிடித்துக் கொண்டு ' ஏனோ தெரியலை இந்த பார்வை நல்ல நோக்கததுல பார்க்கிறதை விட கெட்ட நோக்கத்துலதான் அதிகம் பார்க்குது. என்னை மன்னிச்சுடுப்பா... ' என்றேன்.



Friday, November 20, 2009

வேண்டும் மழலை..!

கிலாண்டேஸ்வரி அம்மன் ஆலயத்தில் எப்பொழுதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் இன்று ஆடி வெள்ளி வேறு கேட்கவா வேண்டும். ரமேஷும் அவனது மனைவி பிரபாவதியும் காரில் வந்து இறங்கியதும் கூட்டத்தைப் பார்த்து மலைத்தனர்.

"என்னங்க இன்னைக்கு இவ்வளவு கூட்டம் இருக்கு. "

"ஆடி வெள்ளியில... அதான்... வா நூறு ரூபா டிக்கெட்டுல போயிரலாம்"

"சரிங்க"

சாமி தரிசனம் முடித்து பிரசாதம் வாங்கிக் கொண்டு வந்து மண்டபத்தில் அமர்ந்தனர்.

அந்தக் கோவிலில் ஒரு அரசமரம் உண்டு. அந்த மரத்தைச் சுற்றி வந்து உண்டியலில் காணிக்கை செலுத்தி அங்கு கட்டியிருக்கும் துணியில் முடிச்சிட்டு வந்தால் குழந்தை பிற்க்கும் என்பது ஐதீகம். நடப்பதாகவும் பெண்களிடம் நம்பிக்கை. அதனால் எந்த நேரமும் நான்கைந்து பெண்கள் சுத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.

அதைப் பார்த்த பிரபா "என்ன்ங்க நானும் சுத்திட்டு வாரேன்" என்றாள்.

"சாமிய கும்பிட்டா போதும். இதுபோல மூட நம்பிக்கைகளுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக்கிட்டு..."

"அப்படி சொல்லாதீங்க... அது தெய்வத்தை அவமதிக்கிற மாதிரி... நம்பிக்கையாலதான இவ்வளவு பேர் சுத்துறாங்க. ப்ளீஸ்ங்க்..."

"அறிவியல் எவ்வளவோ வளர்ந்துடுச்சு... இன்னும் மரத்தைச் சுத்துறேன்... மண்ணைத் திங்கிறேன்னு... வா போகலாம்."

"ப்ளீஸூங்க நாலு வருஷமா குழந்தை இல்லாததால நம்ம அப்பா, அம்மா எவ்வளவு வருத்தப் படுறாங்க தெரியுமா... அவங்க ஆசைக்காகவாவது இதை சுத்துற நேரம் குழந்தை பிறக்கட்டும்"

"சரி போ... நான் கார்ல இருக்கேன்"

அவள் சுற்றிவிட்டு காருக்கு வந்தாள். கார் கிளம்பி வீட்டுக்கு வரும்வரை இருவருக்கும் இடையில் எந்த பேச்சும் இன்றி நீண்ட அமைதி நிலவியது. 'சார் கோவமா இருக்காரு போல' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

"தம்பி டாக்டர் அன்பு கிளினிக்ல இருந்து பேசுனாங்க. இன்னைக்கு அப்பாயிண்மெண்ட் வாங்கியிருந்தியாமே. டாக்டர் அவசர வேலையா சிதம்பரம் பொயிட்டாராம். நாளைக்கு சாயந்தரம் வரச்சொன்னாங்க. உன் செல்போனுக்கு கிடைக்கலைன்னுதான் இங்க அடிச்சாங்க."

"கோவிலுக்குள்ள இருந்ததால ஆப் பண்ணி வச்சிருந்தேம்ப்பா.




றுநாள் அலுவலகத்தில் இருந்து வந்ததும் இருவரும்  மருத்துவமனைக்கு கிளமபினார்கள்.

அவர்கள் இருவரையும் தனித்தனியே செக்கப் செய்த டாக்டர், "ரெண்டு பேருக்குமே எந்த குறையும் இல்லை. குழந்தை பிறப்பதற்கான வாய்ப்புகள் நல்லா இருக்கு. ரெண்டு பேருக்கும் சில மாத்திரைகள்

எழுதித்தாரேன். வாங்கி சாப்பிடுங்க. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கிறப்ப ரிலாக்ஸா இருங்க. வேற ஒண்ணும் வேண்டாம். சீக்கிரம் உங்களுக்கு குழந்தை உருவாகும்.' என்று கூறினார்.

"நன்றி டாக்டர். நாங்க வர்றோம்"

காரில் வரும்போது "என்னங்க திடீர்ன்னு டாக்டர்கிட்ட..." மெதுவாக கேட்டாள்.

"இல்ல பிரபா, ரெண்டு நாளைக்கு முன்னாடி உங்க அப்பா வந்தப்ப குழந்தை இல்லங்கிறதுக்காக ரொம்ப வருத்தப்பட்டார். உங்க அத்தை ரெண்டு பேருக்கு குழந்தை இல்லையாம். அதுமாதிரி உனக்கும் ஆயிடுமோன்னு புலம்பினாரு. அப்ப எங்ககிட்ட எந்த குறையும் இல்லை சீக்கிரமே குழந்தை பிறக்கும் வீணாவுல மனசைப் போட்டு அலட்டிக்காதிங்கன்னு சொல்லியனுப்பினேன். இருந்தாலும் அவங்ககிட்ட புரூப் பண்ணனுமில்ல அதான் இந்த செக்கப்."

"..........."

"என்ன பேச்சைக் காணோம்..."

"ஒண்ணுமில்லேங்க..."

"அசடு... எதுக்கு இப்ப அழுகை... எல்லாம் நல்லா நடககும்."

ருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரை சாப்பிட்டாலும் பிரபா அரசமரத்தை வாராவாரம் சுற்றுவதை நிறுத்தவில்லை.
நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. ஒருநாள் காலை எழுந்தவள் தலை சுற்றுவது மாதிரி இருக்குங்க என்றாள். சற்று நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினாள்.

அப்பா அம்மா இருவரும் நெருங்கிய சொந்தகார வீட்டுக் கல்யாணத்துக்கு போயிருக்கிறார்கள். வீட்டில் யாரும் இல்லை. பயந்தவன் அவளை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் சென்றான்.

அவளை செக்கப் செய்த டாக்டர், அவள் கர்ப்பம் தரித்து இருப்பதாக தெரிவித்தார்.

இருவருக்கும் சந்தோஷம். டாக்டர் கொடுத்த மாத்திரையால்தான் இது சாத்தியம் என்று அவனும் அரசமரத்தை சுற்றியது வீண்போகவில்லை என்று அவளும் மனதிற்குள் நினைத்துக் கொண்டனர்.

அவர்கள் வாழ்வில் விளக்கேற்றியது அறிவியலா... ஆன்மீகமா...? எதுவாக இருந்தாலும் வீட்டில் மழலை சப்தம் கேட்டால் அந்த மகிழ்ச்சிக்கு ஈடாக எதுவுமில்லைதானே..!

-சே.குமார்




Saturday, October 31, 2009

வெள்ளாமை



கன்னையனுக்கு இப்போதெல்லாம் கண் சரிவரத் தெரியவில்லை என்பது நன்றாக புலப்பட்டது. வரப்பில் நடந்து செல்லும்போது தூரத்தில் வருபவர்களைக்கூட துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ளும் அவரால் தற்போது அப்படி கண்டு கொள்ள முடியவில்லை.

மனைவி பஞ்சவர்ணத்திடம் சொன்னபோது 'வயசாயிடுச்சுல்ல இனி எல்லாம் வரும். இந்த அறுப்பு முடிஞ்சதும் கண் ஆபரேசன் பண்ணலாம்' என்றாள்.

அவள் சொல்லுவதிலும் அர்த்தம் இருந்தது. ஆபரேசன்னு போன கண்டிப்பா காசு வேணும். அறுப்பு முடிஞ்சா கைல நெல்லைப் பில்ல போட்ட காசு இருக்கும். இன்னும் ரெண்டு மாசம்தானே ஓட்டிரலாம் என்று முடிவு செய்து வயல் வேலையில் கவனம் செலுத்தினார்.

உதவி செய்ய ஆள் இருந்தாலும் இப்போதே செய்யலாம். அந்த கொடுப்பினைதான் இல்லாமப் போச்சே... மனசு வருந்துவது அவரது முகச்சுருக்கத்தில் தெரிந்தது.

இரண்டு மகள்களுடன் ஆஸ்திக்கு ஒரு மகனைப் பெற்ற அவருக்கு கண்ணை உடனே சரிபண்ண முடியாமல் போனது தூரதிஷ்டமே.

மகள்கள் இருவரும் திருமணத்திற்குப்பின் கணவன்மார்கள் வேலை செய்யும் ஊர்களுக்கு சென்று விட்டதால் எப்போதாவதுதான் பிறந்தகம் வருவார்கள்.

மகனை கஷ்டப்பட்டு படிக்கவைத்து கடன் வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பினார். திருமணம் வரை அப்பா அம்மாவை சுற்றியவன் இன்று பொண்டாட்டி சுற்றத்தை சுற்றுகிறான். போன் பண்ணிக்கூட பேசுவதில்லை. தொப்புள்கொடி உறவு அறுந்து போனதாகவே அவருக்குப்பட்டது.

மகள்களிடம் பணம் கேட்டால் கிடைக்கும். ஆனால் தன்மானம் அவரைத் தடுத்தது. பெரியவள் என்னோடு வந்து விடுங்கள் என்று பலமுறை அழைத்தும், உங்களைப் படிக்கவைக்க கல்யாணம் பண்ணிக்கொடுக்க என எல்லாவற்றிக்கும் உதவியது இந்த நிலம் தான் அதை விட்டுட்டு எப்படிம்மா. அதுபோக சம்மந்தி மனசு வருந்துறமாதிரி ஆகக்கூடாது இல்லியா, அதனால அவங்கள நல்லாப் பாரு அது போதும் என்று தட்டிக்களித்தார்.

நாளாக நாளாக கண் மங்கலாவது அதிகரிக்க, நாளெல்லாம் வயலில் உழைத்து விட்டு வரும் அவரால் கண்ணுக்குப் பார்க்க டவுனுக்குப்போக உடம்பு இடம் தரவில்லை. அறுப்பு முடியட்டும் என மனசை தேற்றிக் கொண்டார்.

உறவினர் ஒருவரின் சாவுக்கு சென்றபோது மகனின் மாமனாரை சந்திக்கும்படி ஆகிவிட்டது. பேசாமல் போகக்கூடாது என்பதால் 'என்ன சம்பந்தி சௌக்கியமா..?' என்று ஒரு வார்த்தை கேட்டார்.

'சௌக்கியம் சம்பந்தி, என்ன வீட்டுப்பக்கமே வர மாட்டேங்கிறிங்க..?' என கேட்க, 'வயல் வேலையே சரியாய் இருக்கு. அறுப்பு முடிஞ்சிட்ட வரலாம். வயசு வேற ஆயிட்டதா கண்ணு வேற சரியாய் தெரியலை. அதான் தூரத்துல எங்கயும் போறதில்ல. அதுபோக வயல் வேலைக்கு முன்ன மாதிரி ஆள் கிடைக்கிறது குதிரைக்கொம்பா இருக்கு. நாமளும் சேந்து வேலை பார்த்தாதானே வேலை நடக்குது அதான்...' என்றபடி பெருமூச்சு ஒன்றை விட்டார்.

'ம்ம்ம்... நேத்துக்கூட மாப்பிள்ளை பேசினார். உங்களை விசாரித்தார். நான் என்ன சொல்லமுடியும் எனக்கு பல வேலை, நாம பக்கத்து ஊராய் இருந்தாலும் சந்திக்க முடியிதா... இல்லையே. எப்பவாச்சும் இப்படி பார்த்தால்தான் உண்டு. என்னைய வரச் சொல்லி மாப்பிள்ளையும், மகளும்
ஒரே தொந்தரவு. அடுத்த மாசம் போகலாமுன்னு பார்க்கிறேன்... ' என்றவர் அலைபேசி ஒலிக்கவே, 'ஹலோ' என்று ஆரம்பித்தவர் சம்பந்தியை மறந்து வண்டியில் ஏறினார்.

சற்று நேரம் நின்றவர், 'ம்... நான் வயக்காட்டுல கஷ்டப்பட்டு படிக்கவைத்து கடனை வாங்கி வெளிநாட்டுக்கு அனுப்பினா மாமனார் குடும்பத்துக்கு உழைக்கிறான். ம்ம்ம்.. நல்லா இருக்கட்டும்.' என்று முணுமுணுத்தபடி நடக்கலானார்.

இதை பஞ்சவர்ணத்திடம் சொன்னால் அவ்வளவுதான் கத்தி ஊரைக் கூட்டிருவா. அவளுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்துக்கொண்டார்.

'ஏங்க பக்கத்துலதானே தம்பி மாமனார் வீடு ஒரு எட்டு போயி போன் நம்பரை வாங்கியாந்திருந்தால் உங்க கண்ணு ஆபரேசனுக்கு பணம் அனுப்ப சொல்லி இருக்கலாமே. ' என்றவளிடம்,

'அட எதுக்கு அவனை தொந்தரவு பண்ணச் சொல்லுறே. வெளிநாட்டுல குடும்பம் வச்சு இருக்கிறதுன்னா எவ்வளவு கஷ்டம். நம்ம கஷ்டம் நம்மளோட, அவன வேற சங்கடப்படுத்தனுமா... அறுப்பு முடியட்டும் நெல்லைப் போட்டுட்டு ஆபரேசன் பண்ணலாம்.' என்று மனைவியின்
பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்,

'பிள்ளைகளை நல்ல நிலைமைக்கு கொண்டுவர எவ்வளவோ இழந்துட்டோம். கண் பார்வை போச்சேன்னு வருத்தப்பட்டு என்ன ஆகப்போகுது. பார்த்துப்பார்த்து நீர் பாய்ச்சியும் பொய்த்துப் போற விவசாயம் மாதிரியில்ல ஆயிருச்சு பையனுக்கு செஞ்ச வெள்ளாமை... ம்ம்ம்.. என்ன செய்ய விதியோட விளையாட்டுக்கு யார இருந்த என்ன..' என்று நினைத்தவரின் மனசுக்குள் எதோ அழுத்துவது போல இருக்க ஒளியிழந்து வரும் கண்ணுக்குள் இருந்து தெறித்து விழுந்தது கண்ணீர்.

-சே.குமார்




Thursday, September 24, 2009

கோபம்

''எதற்கெடுத்தாலும் கோபப்படுறதை முதல்ல நிப்பாட்டுங்க...'' என்றபடி அவன் தேடித்தேடி கடைசியில் கோபமடைய வைத்த நகவெட்டியை நீட்டியபடி சொன்னாள் சீதா.


''வச்ச இடத்துல இருந்தா நான் ஏன் கோபப்படப் போறேன்''

''ம்... நம்ம குழந்தைங்க சின்ன வயசுங்க. விளையாட்டுத்தனமாக எடுத்து எங்கயாவது போட்டுடுங்க... பொறுமையா தேடிப்பார்த்தா கிடைக்கப் போகுது. இல்லைன்னா அதுகளை கூப்பிட்டு அனுசரணையா கேட்டா சொல்லப் போறாங்க...  அதவிட்டுட்டு வீடே ரெண்டாப் போற மாதியா கத்துறீங்க. உங்க அம்மா சொல்ற மாதி உங்களுக்கு மூக்கு மேல தாங்க கோபம் வருது. சரி... சரி... நகத்தை வெட்டிட்டு குளிச்சுட்டு வாங்க சூடா தோசை வார்த்துத் தாரேன்...''

''ம்... நகத்தை வெட்டிட்டு ஷேவ் பண்ணிட்டுத்தான் குளிக்கப்போறேன். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமைதானே... ஆபிஸ்க்குப் போற மாதி பறக்குறே...'' என்றான் மீண்டும் கோபமாக.

''இப்பத்தானே சொன்னேன் அதுக்குள்ள எதுக்கு டென்ஷன். உங்களுக்கு லீவு தாங்க. ஆனா எனக்கு எல்லா நாளுமே ஒண்ணுதான். அதுவும் ஞாயிற்றுக்கிழமைதான் எனக்கு வேலை ஜாஸ்தி... தெரியுமில்ல... கொஞ்சம் சீக்கிரம் வாங்க''

''ம்... வர்றேன்...வர்றேன்...''

லுவலகத்தில் அவரவர் அரக்கப்பறக்க வேலை செய்து கொண்டிருந்தனர்.




''மிஸ்டர் சம்பத்... உங்களை எம்.டி. வரச் சொன்னார்'' என்றபடி வந்தார் எம்.டி.யை பார்த்துவிட்டு வந்த நாராயணன்.

''ம்... எதுக்கு...?''

''எனக்கென்னங்க தெரியும்... போய் பாருங்க...''

''மே ஐ கம் இன் சார்?''

''எஸ். கம் இன்''

உள்ளே நுழைய...

''வாங்க... சம்பத் உட்காருங்க...'' எம்.டி.

''தாங்க்யூ சார்'' என்றபடி அமர்ந்தான்.

''அந்த பான் கம்பெனிக்கு அனுப்ப வேண்டிய கொட்டேஷன் எல்லாம் ரெடி பண்ணிட்டிங்களா...?''

''பண்ணிட்டேன் சார்...''

''ஓ.கே. அதை நம்ம பன்னீர்கிட்ட கொடுத்து ஒருதடவை சரிபார்த்துட்டு எங்கிட்ட தரச்சொல்லுங்க...''

''ஓ.கே. சார்...''

''அப்புறம் ஒரு விஷயம்.... நேத்து பியூன்கிட்ட ரொம்ப கோபமா நடந்துக்கிட்டீங்களாமே...''

''ஆமா சார்... அவன் நடந்துக்கிட்ட விதம் அப்படி... காபி வாங்கிட்டு வந்து டேபிள் மேல வைக்கிறப்ப கொட்டிட்டான் சார். அப்ப எனக்கு வந்த கோபத்துல அவனை அறையணும் போல இருந்தது சார். ஆபிசாச்சேன்னு திட்டுனதோட நிறுத்திட்டேன்.''

''என்ன சம்பத்... வேணுமின்னா அவரு அப்படி செய்தாரு... ஏதோ கை தவறிடுச்சு... அவருக்கு உங்க உங்க அப்பா வயசிருக்கும் அவரைப் போயி அவன் இவன்னு விளித்துப் பேசுறது நல்லா இல்ல... பர்ஸ்ட் கன்ட்ரோல் யுவர் செல்ப்... கோபத்தை குறைங்க. நானும் உங்க வயசுல உங்களை மாதித்தான் கோபப்பட்டேன்... அதனால நான் எத்தனையோ இழந்தேன்.
அதுக்கப்புறமா எதுக்கு கோப்படுறோம்ன்னு தனிமையில யோசிச்சேன். அப்புறம் என்னை நானே மாத்திக்கிட்டேன்... இன்னைக்கு நான் இந்த இடத்துல இருக்கேன்னா அதுக்கு என்னை நானே மாத்திக்கிட்டது கூட ஒரு காரணம்... இப்ப நான் என்னோட அணுகுமுறையையே மாத்திக்கிட்டேன்.''

சந்துருவுக்கு மனசுக்குள் எவன் எவன் மீதோ கோபம் வந்தது. ஏன் தனக்கு முன்னால் லெக்சர் அடிக்கும் எம்.டி. மீது கூட கோபம் வந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டு ''சாரி சார்... இனிமே இது மாதிரி நடக்காது சார்'' என்றான்.

''தட்ஸ் குட். அப்புறம் ஒரு விஷயம். இதை உங்க மனதைப் புண்படுத்தனும்ன்னு நெனச்சி சொல்லலை. உங்க கோபம் குறையணும்ன்னு தான் சொல்றேன். போன வாரம் நீங்க ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணி கொடுத்தீங்கல்ல ஞாபகம் இருக்கா... அதுல ரெண்டு மூணு இடத்துல மிஸ்டேக் இருந்தது... அதை உங்ககிட்ட கேக்காம நானே கரெக்ட் பண்ணி அனுப்பிட்டேன்...''

''சார்... என்னை கூப்பிட்டு சொல்லியிருக்கலாமே... கரெக்ட் பண்ணித் தந்திருப்பேனே. அது என்னோட தவறுதானே...''

''என்ன... உங்களை கூப்பிட்டு டோஸ் விடலையேன்னு கேக்குறீங்களா...? நான் கோபப்பட்டிருந்தா என்ன நடக்கும். அடுத்த தடவை நீங்க செய்யிற வேலையில அதிக சிரத்தை எடுக்கிறேன்னு தப்பு பண்ணிடுவீங்க... ஒரு தடவை தப்பு வர்றது சகஜம் தானே... உங்க வேலையில இதுவரைக்கும் தப்பே வந்தது கிடையாது. உங்க வேலையில நீங்க காட்டுற சிரத்தைய பார்த்து நான் நிறையத்தடவை பிரமிச்சிருக்கேன். நீங்க முதல் தடவை தப்பு பண்ணிருக்கீங்க. உங்க மனசில் ஏதாவது குழப்பம் இருந்திருக்கலாம். அதனால அதை நான் பெரிசா எடுத்துக்கலை''

சம்பத்துக்கு எங்கோ சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. மனைவி, நண்பர்கள் என எல்லோரும் சொல்லியும் உறைக்காத ஏதோ ஒன்று உறைத்தது.

எம்.டி.யிடம் விடை பெற்று வெளியே வந்தவன் எதிர்ப்பட்ட பியூனிடம் 'ஸாரி' என்று கையைப் பிடித்துக்கொள்ள மற்றவர்கள் வியப்பாய் பார்த்தனர்.

-சே.குமார்
பரியன் வயல்.




(இந்த சிறுகதை நான் சென்னையில் பத்திரிகை துறையில் இருந்தபோது எழுதி தமிழ்சிகரம்.காம் என்ற இணையத்தில் வெளிவந்தது.)



Tuesday, September 8, 2009

உங்களைப் போல் நானும்..!

லுவலகம் முடிந்து வீட்டிற்கு செல்லும் போது...


''ம்... இப்பச் சொல்லு உனக்கு என்ன பிரச்சினை...'' என்று மறக்காமல் கேட்டாள் ரமா.

''வீ...வீட்ல கொஞ்சம் பிரச்சினை...''

''என்ன பிரச்சினை...''

''எனக்கு குழந்தை இல்லைங்கிறது உனக்குத் தெரியும்... அதுக்கு காரணம் என்னங்கிறது யாருக்கும் தெரியாது. அவரும் பிறக்கிறப்ப பிறக்கட்டும்ன்னு சொல்லிட்டாரு. அதனால இதை ஒரு பொருட்டாவே கருதலை... ஆனா இப்ப அவரு இதையே காரணம் காட்டி...'' பேச்சை தொடர முடியாமல் நிறுத்தினாள்....

''ம்... காரணம் காட்டி...''

''ரெண்டு நாளா தொடர்ந்து தண்ணியடிச்சுட்டு வர்றாரு...''

''என்னது தண்ணியடிக்கிறாரா... அவரு அப்படிப்பட்ட ஆள் இல்லையே...''

''ஆமாண்டி... என்னங்க இது புதுசான்னு கேட்டா... அதுக்கு என்ன சொல்றாரு தெரியுமா? குழந்தை இல்லைங்கிற கவலையால தண்ணியடிக்கிறதா அவரு சொல்றாருடி...''

''ஓஹோ... ஏண்டி டாக்டர்கிட்ட கன்சல்ட் பண்ணினீங்களா...?''

''பார்த்தோம்... ஆனா ரெண்டு பேர் மேலயும் எந்த பிராப்ளமும் இல்லை. குழந்தை பிறக்க வாய்ப்பு இருக்குன்னுதான் சொன்னாங்க...''

''அப்புறம் என்ன... உன் வீட்டுக்காரர் குடிச்சுட்டு வர்ற அளவுக்கு யார் மேலயும் குறையிருக்குன்னு சொல்லலையே... அப்புறம் எதுக்கு அவரு குடிக்கணும்...''

''அதான் தெரியலை... புல்லா வர்றாரு... பக்கத்துல போக முடியலை. நாத்தம் குடலைப் புடுங்குது... ஒரு தடவைக்கு மேல எதாவது சொன்னா ஏண்டி அட்வைஸ் பண்றியாடின்னு அடிக்கிறாரு...''சொல்லும் போதே அழுதாள் மீனா.

''ஏய்... அழதடி... இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டலைன்னா உன்னோட வாழ்க்கை அழிஞ்சு போயிடும்... ம்... முள்ளை முள்ளாலதான்டி எடுக்கணும்... அதனால...''



''அதனால...''

ரமா சொன்னதைக் கேட்டு மீனா அதிர்ச்சியுற்றாலும் அதுதான் சரியெனப்பட்டது. கதவைத் தட்டப்படும் ஓசை கேட்டு கதவைத் திறந்தாள் மீனா.

''என்ன மீனா சாப்பிட்டுட்டியா...'' நாகுழற கேட்டபடி உள்ளே நுழைந்தான் அவளது கணவன் சுந்தர்.

''இல்லங்க... உங்களை மாதிரியே எனக்கும் குழந்தை இல்லைங்கிற கவலை இருக்கு... அது இன்னைக்கு அதிமாயிடுச்சு... அதனால நானும் சரக்கு வாங்கி வச்சிருக்கேன். இனிமேதான் சாப்பிடனும்... ஒரு ஆளா சாப்பிடுறதைவிட நீங்க வந்த உடனே சாப்பிட்டா கம்பெனி கிடைக்குமே அதுதான் உங்களுக்காக காத்திருக்கிறேன்...''

''என்னடி சொல்றே... நீ தண்ணியடிக்கப் போறியா...? பொம்... பொம்பளைங்க செய்யக்கூடாத வேலைடி அது...'' என்று தள்ளாட்டத்துடன் கத்தினான்.

''ஏன் செய்யக்கூடாது...சாப்ட்வேர் கம்பெனியில வேலை பார்க்கிற பொண்ணுங்க பசங்களோட சேர்ந்து தண்ணியடிக்கிறதா பேப்பர்ல செய்தி வரலை. ஏங்க உங்களுக்கு துக்கமுன்னா நீங்க தண்ணியடிப்பீங்க. நாங்க மட்டும் துக்கத்தை மனசுக்குள்ளே பூட்டி வச்சுக்கனும்... நீங்க மட்டும் தண்ணியடிக்கலாம்... நாங்க அடிச்சா என்ன தப்பு... வாங்க அடிக்கலாம்...''

''வேணான்டி...''

''வாங்கங்க... தண்ணியடிக்கிறதுக்காகவே கோழி வாங்கி வறுத்து வச்சிருக்கேன்... வாங்க துக்கம் போக சேர்ந்து தண்ணியடிக்கலாம்...'' என்று இழுக்க...

''ப்ளார்...'' அவள் கன்னத்தில் அவன் கை இறங்கியது.

''அடிங்க... நல்லா அடிங்க... குழந்தை  இல்லைங்கிற கவலை உங்களைவிட எனக்குத்தாங்க அதிகம். குழந்தை பிறக்கிறதுக்கு எங்ககிட்ட எந்த குறையும் இல்லைன்னாலும் வெளியில மலடி பட்டம் வாங்குறது நாங்க தாங்க. நான் தெருவுல போகும்போது யாராவது என்னைப் பார்த்து என்னம்மா இன்னும் குழந்தையில்லையான்னு கேக்குறப்போ நான் செத்துப் பிழைக்கிறேங்க... நீங்க கூடாத சகவாசத்தைக் கூட்டிக்கிட்டு தண்ணியடிக்கிறீங்க... அதை தட்டிக்கேட்டா அதுக்கு குழந்தையில்லைங்கிறதை காரணமா சொல்றீங்க...

என்னைய அடிக்கத் தெரிஞ்ச உங்களால உங்க மனசை திருத்தமுடியலையே... வேண்டாங்க... நம்மகிட்ட குறையில்ல குழந்தை பிறக்குமுன்னுதான் டாக்டர் சொல்லியிருக்காங்க... வீணாவுல மத்தவங்களோட சேர்ந்து தண்ணியடிச்சு உடம்பை கெடுத்துக்கிறதோட வாழ்க்கையையும் அழிச்சுக்காதீங்க...'' கண்ணீர் மல்க கெஞ்சினாள்.

சுந்தருக்கு அப்போதுதான் உறைத்தது. 'சே... என்ன ஜென்மம் நான்... அடுத்தவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு... எனக்கு எங்க புத்தி போச்சு... அடுத்தவனைப் பத்தி பேசி என்ன பண்ண முடியும்...' என்று மனதிற்குள் நினைத்தவன் கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்த மனைவியை 'சாரிம்மா' என்று அணைத்துக்கொண்டான்.

சே.குமார், பரியன்வயல்

(இந்த சிறுகதை நான் சென்னையில் பத்திரிகை துறையில் இருந்தபோது எழுதி தமிழ்சிகரம்.காம் என்ற இணையத்தில் வெளிவந்தது.)




Thursday, August 27, 2009

கடைசி வரை காணாமல்...



திகாலையில் செல்போன் அடிக்க, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை மூடியபடி சவுண்ட் வந்த திசையில் கையை துழாவி செல்லை எடுத்து தூக்க கலக்கத்தோடு 'அலோ' என்றான் மதி.

''நான் அப்பா பேசறேம்பா'' என்றது மறுமுனை. பேச்சில் ஏதோ ஒரு இறுக்கம்.

''என்னப்பா... என்னாச்சு இந்த நேரத்துல போன் பண்றீங்க. ஏதாவது பிரச்சினையா...?''

''நம்ம அம்மா நம்மளை விட்டுட்டு பொயிட்டாடா...'' போனில் உடைந்தார் அப்பா.

''அ... அப்பா... எ... என்ன சொல்றீங்க... அம்மா...'' வாரிச்சுருட்டி எழுந்தவனுக்கு பேச வரவில்லை.

''எப்படிப்பா...'' அழுகை பீறிட்டது.

''எப்பவும் போல எங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு, டி.வி. பார்த்துட்டு தூங்கப்போனா... மூணு மணியிருக்கும் என்னை எழுப்பி நெஞ்சுல ஏதோ அடைக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னா... நாங்க என்ன ஏதுன்னு பார்க்கிறதுக்குள்ளாற...''  பேசமுடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது.

''அண்ணனுக்கு போன் பண்ணிட்டிங்களா...?''

''ம்... பண்ணிட்டேன்... உடனே கிளம்பி வர்றேன்னான்.... நீ... எப்படிப்பா... உன்னால வரமுடியுமா...?''  கேட்கும் போதே அப்பாவின் குரல் உடைந்தது.

''நான் தெரியலைப்பா... பேசிட்டுப் போன் பண்றேம்பா... ஆனா எங்க அம்மா முகத்தை பார்க்கணும் போல இருக்குப்பா...'' அழுகையோடு கூறியவன் அதுக்கு மேல் பேசமுடியாமல் போனை கட் செய்தான்.

''அம்மா... எனக்காக எத்தனையோ தியாகங்கள் செய்தாயே அம்மா...'' என்று அரற்றியவனுக்கு அழுகை வெடித்தது.

அவனது அழுகுரல் கேட்டு சக நண்பர்கள் எழுந்தார்கள். 'ஏய்... மதி என்னாச்சு...?' என்று பதறினர்.

''அம்மா... அம்மா...'' அதற்குமேல் அவனால் கூறமுடியாவிட்டாலும் அவர்கள் புரிந்து கொண்டனர். எழுந்து அவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டனர்.

''இப்ப நீ போகணுமில்லயா...''

''போகணும்... ஆனா...''

''விடிந்ததும் நம்ம சூப்பர்வைஸர்கிட்ட பேசுவோம். அவரு என்ன சொல்றாரோ அதுபடி செய்வோம்...''

''ம்...'' என்றவன் கண்கள் மட்டும் அருவியாக.

''சார் நம்ம மதியோட அம்மா இறந்துட்டாங்களாம். ராத்திரி 2 மணிக்கு போன் வந்தது...''

''என்னப்பா நீங்க... எனக்கு அப்பவே இன்பார்ம் பண்ணவேண்டியதுதானே...'' என்றவர் மணியின் கைகளை ஆதரவாக பற்றிக்கொள்ள, மதி உடைந்தான்.

''மதி ஊருக்குப் போகணுமின்னு விரும்பப்படுறான் சார்... கடைசியாக ஒரு தடவை அம்மாவை பார்க்கணுமின்னு ஆசைப்படுறான்... அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் சார்.''

''எப்படிப்பா... நம்ம கம்பெனியிஸ ஒரு வருடத்துக்கு ஒருமுறைதான் அனுமதி... அதுவும் மதி ஆறுமாசம் முன்னாலதான் ஊருக்குப் பொயிட்டு வந்தான். வளைகுடா நாடுகளோட சட்ட திட்டம்தான் உங்களுக்குத் தெரியுமேப்பா...  அதுவும் அவன் பார்க்கிற சைட்டோட வேலையை ஒரு மாசத்துக்குள்ளாற முடிக்கணும்ன்னு எம்.டி. சொல்லியிருக்காரு.... ம்...''

''சார்... அவங்க அம்மா முகத்தை ஒரு தடவை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறான்... ஒரு வாரம் மட்டும் லீவு வாங்கிக் கொடுங்க சார்... ப்ளீஸ்...'' மதிக்காக நண்பர்கள் கெஞ்சினர்.

''சரிப்பா... பத்துமணிக்கு எம்.டி. ரூமுக்கு வாங்க... எல்லோரும் வராதீங்க. யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் மதிகூட வாங்க... பார்க்கலாம். எப்படியாவது பேசி லீவு வாங்கித்தர முயற்சிக்கிறேன்''

எம்.டி.யிடம் வெகு நேரம் பேச, துக்க விஷயம் என்பதால் எம்.டி.க்குள் இருக்கும் தாய்மை உணர்ச்சி ஒப்புக் கொண்டது.

ஒரு வாரம் விடுப்பு கொடுக்கப்பட்டு அவன் விரைவாக செல்லும் பொருட்டு விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.

நண்பர்கள் உதவியுடன் விமான நிலையம் வந்து விமானத்தில் ஏறினான். மனசு மட்டும் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தது.

மனசுக்குள் அம்மா தனக்காக பட்ட கஷ்டங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, கண்கள் கண்ணீரை வடித்தபடி இருந்தன. எப்படியும் நாலு மணிக்கு திருச்சி போயிடலாம். ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்குப் போயிடலாம் என்று நினைத்துக் கொண்டான். எப்படியும் கடைசியாக அம்மா முகத்தை பார்த்துடலாம் என்று நினைத்தபோது அழுகை வெடித்தது.

அப்போது 'விமானம் ஒருசில காரணங்களால் சென்னையில் இறக்கப்படும். அங்கிருந்து திருச்சி செல்லும் பயணிகள் வேறொரு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசௌகரியத்திற்கு மன்னிக்கவும்,  நன்றி.' என்ற அறிவிப்பு வெளியாக, 'அய்யோ... அம்மா...' என்று கத்திய மதியை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்.

சென்னையில் விமானம் இறக்கப்பட, திருச்சி செல்லும் பயணிகள் அனைவரும் ஒரு அறையில் தங்கவைக்கப்பட்டனர்.

அப்போதே மணி மூன்று ஆகியிருந்தது. அங்கிருந்த போன் மூலம் தனது அண்ணனை தொடர்பு கொண்டான்.

''அண்ணே...'' அழுகை முந்திக் கொண்டது.

''என்னப்பா... திருச்சி வந்துட்டியா...? உன்னைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருக்கோம்...''

''விமானத்துல ஏதோ பிரச்சினையாம் சென்னையில இறக்கிட்டாங்க அண்ணே.... வேற விமானத்துல திருச்சிக்கு அனுப்புறாங்களாம். ஒரு மணி நேரத்துல திருச்சி வந்துடுவேன். வீட்டுக்கு எப்படியும் ஏழு மணிக்குள்ள வந்துடுவேன்.

அம்மாவை தூக்கிட வேணாம்ணே...''

''சரிப்பா... கவலைப்படாம வா.'' அண்ணன் ஆறுதல் கூறினார்.

போனை வைத்தவன் விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் சென்று, ''எப்ப சார் திருச்சிக்கு அனுப்புவீங்க'' என்றான்.

''அஞ்சு மணியாகும்'' என்று சாதாரணமாக சொல்ல, ''அஞ்சு மணியா சார்... நான் எங்கம்மா இறந்ததுக்குப் போறேன் சார்...'' என்று கத்தினான்.

''நான் என்ன சார் பண்ணட்டும்... திருச்சியில இருந்து வந்துக்கிட்டு இருக்கிற விமானத்துலதான் அனுப்ப முடியும்.  எத்தனை மணிக்கு வருதோ வந்த உடனே அனுப்பிடுவோம்.'' என்றார்.

தனது ராசியை நொந்தபடி சோகமாய் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.

ஊரில்...

''என்ன மாணிக்கம்... மணி அஞ்சாயிடுச்சு இதுக்கு மேலயும் போட்டு வைக்கிறது நல்லா இல்ல... ஐஸ் வச்சிருந்தாலும் இனிமே தாங்காது. அதுவும் நாளைக்கு சனிக்கிழமை வேற... அதனால எவ்வளவு நேரம் ஆனாலும் இன்னைக்கே முடிச்சிடுறது நல்லது...'' என்றனர் ஊர்க்காரர்கள்.

''ஆதி... தம்பிக்கு போன் போட்டு எங்க வர்றான்னு கேளுப்பா...''

''எப்படிப்பா... அவன் கூப்பிட்டாத்தான் உண்டு... அவன்கிட்டதான் சிம்கார்டு இருக்காதே...'' என்றான்.

''சரி... ஆகவேண்டியதைப் பாருங்கப்பா... மதி வர்றபடி வரட்டும்... வந்தா நேர சுடுகாட்டுக்கு வரட்டும்...'' என்று சொல்ல, கடைசி யாத்திரைக்கு அம்மாவை தயார் செய்தார்கள்.

விமானம் திருச்சி வரும்போது மணி ஆறேகால். கையில் லக்கேஜ் எதுவும் இல்லாததால் வேகமாக வெளியேறி, போனில் அண்ணனை தொடர்பு கொண்டான்.

''அண்ணே... திருச்சி வந்துட்டேன். எப்படியும் ஒரு மணி நேரத்தில வந்துடுவேன்...''

''சரிப்பா... நேர சுடுகாட்டுக்கு வந்துடு''

''சுடுகாட்டுக்கா...''

''ஆமா... எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு... இப்ப தூக்கப் போறேம்... உனக்காக அங்க காத்திருக்கிறோம்...  வேகமாக வந்துடு''

''ச...சரிண்ணே...''

விரைவாக வெளியேறி வாடகைக் காரில் பேரம் பேசாமல் ஏறிக்கொண்டான். டிரைவரிடம் ''எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு வேகமாக போங்க...'' என்றவன் கண்களை மூடியபடி அழுகையை அடக்கிக் கொண்டான்.

''என்ன ஆதி... மதி எங்க வர்றானாம்... நேரம் ஆயிக்கிட்டே இருக்கு... மேகம் வேற ஒரு மாதிரி இருட்டிக்கிட்டு வருது. மழை வந்துட்டா சிரமமாயிடும்பா... குழிக்குள்ளாற தண்ணி நின்னுக்கிச்சுன்னா... என்ன பண்றது. லைட் எதுவும் இல்ல... இருட்டுல காரியம் பண்ண முடியாதுப்பா... என்ன மாணிக்கம் ஆகவேண்டியதை பார்க்கலாமா...''

''இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்... அவங்க அம்மா முகத்தைப் பார்க்கிறதுக்காக அவன் துபாயில இருந்து வர்றான் சித்தப்பா...'' என்று மகனுக்காக கெஞ்சினார் மாணிக்கம்.

அப்போது ஒரு சில துளிகள் தூறல் விழுக, ''மாணிக்கம் தூறல் வேற வந்துடுச்சு... பெரிய மழையாயிட்டா சிக்கலப்பா...''

''சரி ஆகவேண்டியதை பார்க்கலாம்'' சம்மதித்தார் மாணிக்கம்.

சுடுகாட்டில் செய்ய வேண்டிய காரியங்கள் முடிந்து மனைவியை குழிக்குள் இறக்கும் போதாவது மதி வந்திடமாட்டானா என்று அவர் மனம் தவித்தது. அவர் கண்முன்னால் அவர் மனைவி குழிக்குள் இறக்கப்பட, அதை காண முடியாதவராய் கண்களை மூடியபடி, கதறியபடி மண் அள்ளிப்போட்டார்.

அவரைத் தொடர்ந்து பெரியவன் அழுதபடி மண் அள்ளிப்போட மற்றவர்களும் மண் அள்ளிப்போட்டு விட்டு வெட்டியானிடம் நல்லா மூடிடப்பா என்று சொன்னார் ஒருவர்.

காரை ரோட்டில் நிறுத்தச் சொல்லி, டிரைவரிடம் சற்று நேரம் காத்திருக்கும்படி கூறிவிட்டு இருட்டில் ஒற்றையடிப்பாதையில் ஒடியவன்...

எதிரே அனைவரும் திரும்பி வருவது கண்டு ''அம்மா...''  என்று அந்தப் பிரதேசமே அதிரும்படி கத்தினான்.


---- பரியன்வயல் சே.குமார்

(இந்த சிறுகதை நான் சென்னையில் பத்திரிகை துறையில் இருந்தபோது எழுதி தமிழ்சிகரம்.காம் என்ற இணையத்தில் வெளிவந்தது.)