வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: May 2010

Friday, May 7, 2010

காதலி மனசைக் காதலி

(போட்டோ உதவி : Google Search Engine)

கட்டுண்ட காதல் ஜோடிகள், குதூகலிக்கும் குடும்பங்கள், அலையோடு விளையாடும் இளசுகள் என அந்தி மயங்கும் வேளையில் களை கட்டியிருந்தது மெரினா கடற்கரை.

சுடிதாருக்குள் முகம் மறைத்து முத்த யுத்தம் நடத்தும் ஜோடிகளுக்கும் மணலில் மெத்தை அமைத்து விளையாடும் ஜோடிகளுக்கும் படகு மறைவில் மறைந்து தேடும் ஜோடிகளுக்கும் மத்தியில் கடல் அலையை ரசித்துக் கொண்டிருந்தனர் சாராவும் சங்கரும்.

ஒடி வரும் அலையையும் அதனை துரத்திவரும் அலையையும் ஒரு குழந்தையின் குதூகலத்துடன் ரசித்துக் கொண்டிருந்தாள் சாரா. கடல் காற்றில் அலையும் அவளின் காதோர கார்குழலை ரசித்துக் கொண்டிருந்தான் சங்கர்.

"ஏய அங்க பார்ரா... அந்த அலையை ஒண்ண ஒண்ணு விரட்டிக்கிட்டு வந்தாலும் பிடிபடாம கரைக்கு வருது பாரேன்"

"ம்..." என்ற ஒற்றை வரியில் பதில் அளித்தவனின் கை அவளது விரல்களை நலம் விசாரித்துக் கொண்டிருந்தது.

ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தவள் மீண்டும் அலையை ரசிக்க ஆரம்பித்தாள். அருகே ஒரு குழந்தை அலை வரும் போது ஓடிவருவதும் பின்னர் தண்ணீருக்குள் செல்வதுமாக இருந்தது.

"சங்கர்... அந்த வாண்டைப் பாரு... அலையோட விளையாடுறதுல அதுக்கு எவ்வளவு சந்தோஷம்... அது சிரிக்கிறப்போ அழகா இருக்குல்ல"

"ம்... உனக்கும் அதுபோல பாப்பா வேணுமா..? நான் ரெடியா இருக்கேன்" என்றபடி கைகளை அவளது இடுப்பில் வைத்தான்.

கையை தட்டிவிட்டபடி " என்ன சார் இன்னைக்கு ரொமாண்டிக் மூடுல இருக்காப்புல இருக்கு. சாமி... எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்... பேசாம அலைய வேடிக்கை பாருங்க... சீக்கிரம் ரெண்டு வீட்டுலயும் சம்மதம் வாங்கப் பார்ப்போம். அப்புறம் பெத்துகிறதைப் பத்தி யோசிப்போம்." என்றாள் அவனை சீண்டும் விதமாக.

"ம்... நாலு வருஷமா இதே தான்... என்ன செய்ய... நமக்குன்னு வந்த காதல் இப்படி.. அவனவன் எங்கயோ போறான்..." வாய்க்குள் முனங்கினான்.

"என்ன சொன்னே... சத்தமா சொல்லு..."

"ஒண்ணுமில்லே..."

"இல்ல எதோ முனங்கினாய்... சும்மா சொல்லு..."

"கோவப்படக்கூடாது சரியா... அப்பதான் சொல்லுவேன்..."

"சரி... சொல்லு"

"இல்ல அந்தப்பக்கம் இந்தப்பக்கம் பாரு... எத்தனை பேரு சுடிதாரை மூடிக்கிட்டு இதழ் பரிமாற்றம் செய்யிறாங்க... நீ ஒருதடவையாவது..."

"கொடுக்கலையா... உனக்கு முத்தம் கொடுக்கலையா அடப்பாவி நாக்கு அழுகிடாம..."

"ஆமா... கன்னத்துல கொடுக்கிறதெல்லாம் காதல் முத்தமா... பக்கத்து வீட்டுப் பாப்பா ஒரு நாளைக்கு எத்தனை முத்தம் கொடுக்கிறா தெரியுமா?"

"எனக்கு அது புடிக்கலை."

"ம்... அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும்... அங்க பாரு அது ரெண்டையும் பார்த்த ஸ்கூல் பசங்க மாதிரி இருக்கு. நானும் அரைமணி நேரமா பார்க்கிறேன் ரெண்டும் வாய்க்குள்ள அப்படி என்ன தேடுதுகன்னு தெரியலை..."

"கருமம்..."

"சரி அதை விடு இந்தப்பக்கம் பாரு... மடியில் படுக்க வச்சு தொப்புள்ள எதையோ தேடுறான்... "

"அதுக்கென்ன இப்போ... படவா உதை படப்போறே... இதுக மாதிரி நடந்துக்கிட்டாதான் காதல்னா அது மாதிரி எவளையாவது பார்த்துக் காதலி எனக்கு அந்த மாதிரி எல்லாம் காதலிக்கப் பிடிக்காது..." என்றாள் கோபமாக.

"சரி... இப்ப எதுக்கு கோபம் சும்மாதானே சொன்னேன்."

"உள் மனசுல இருக்கிறதுதானே வெளியே வரும். உனக்கு இப்ப அந்த மூடு மட்டும்தான் இருக்கு..."

"ஐயோ கோபத்தைப் பாரு... எதுக்கெடுத்தாலும் கோபம்... கோபப்பட மாட்டேன்னு சொன்னதாலதான் சொன்னேன். இல்லன்னா சொல்லியிருக்க மாட்டேன்... ம்... நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டு அடிக்கடி கோபப்படப் போறே..."

"என்னைய கட்டிக்க வேண்டாம்... கோபப்படாதவளா பார்த்து எவளையாவது கட்டிக்க... "

"நான் சொன்னேன்னா வேறவளை கட்டிக்கிறேன்னு... நீயா எதாவது எடுத்துப் பேசாதே... எப்பவும் எனக்கு நீதான்..." என்றபடி அவளை இழுத்து அணைத்தான்.

"ஒண்ணும் வேண்டாம்..." என்றபடி அவனை தள்ளிவிட்டுவிட்டு கொஞ்ச தூரம் தள்ளிப் போய் அமர்ந்தாள். அவளது முகம் கோபத்தில் சிவந்திருந்தது. சங்கரும் எழுந்து சென்று அவளருகே அமர்ந்தான்.

அவளது தோளில் கை வைத்து "ஏய் சாரும்மா... இப்ப எதுக்குடா இந்த கோபம்... ப்ளீஸ் சிரியேன்..." என்றான் அப்பாவியாக.

"உனக்கு என்னோட மனசு புரியலை... அதான் இப்படியெல்லாம் பேசுறே... மத்தவங்க மாதிரி பொது இடத்துல கட்டிப்பிடிக்கணும்... முத்தம் கொடுக்கணும்... கண்ட இடத்துல கை வைக்க விடணும்ன்னு நினைக்கிறே... கட்டிப்பிடிக்கிற காதலெல்லாம் எவ்வளவு நாளைக்கு சொல்லு பார்ப்போம்.இந்த மாதிரி கிடைக்கிற சுகம் நல்ல சுகம்ன்னு நினைக்கிறியா..? இன்னைக்கு அவளோட இதழ் நல்லாயிருக்கும்... நாளைக்கே வேற ஒருத்தியோட இதழை தேடச் சொல்லும்...இதெல்லாம் மனசுங்கிற ஒண்ணு இல்லாத காதல்டா... நீ சொன்னியே ஸ்கூல் பொண்ணு... அதைப்பாரு எல்லை மீறிப்போயாச்சு... எவ்வளவு பேர் பார்க்கிறாங்க அதைப்பத்தி கவலைப்படாம அவனோட கை அவ உடம்புல எல்லா இடத்துலயும் பட்டாச்சு... இது அவளுக்கு சுகம்தான் ஆனா அவன் நாளைக்கு வேற ஒருத்திய கூட்டிக்கிட்டு போய்க்கிட்டே இருப்பான். அப்ப இது என்ன பண்ணும் எதாவது பத்திரிக்கையில வர்ற ஆலோசனை பக்கத்துல கதையா எழுதி கண்ணீர் விடும். எம்மனசுல நீ இருக்கே... நான் சாகிற வரைக்கும் நீ இருப்பே...இந்த உடல் சுகம் கல்யாணத்துக்குப் பின்னே கிடைச்சா சந்தோஷம்...இல்ல இதுக மாதிரித்தான் வேணுமின்னா ஐந்தறிவு ஜீவனா பிறந்திருக்கலாமே... எதுக்கு நமக்கு ஆறாவது அறிவு. நம்ம மெரினா பீச்சுக்கு ஆசியாவிலே இரண்டாவது பீச்சுங்கிற சிறப்பு இருக்கு... நம்ம அதை எங்கே பெருமையா நினைக்கிறோம்... இப்படி மணல்ல கட்டுண்டு கிடக்கிறதை பார்க்கிறதுக்காக நிறைய விடலைப்பசங்க வாராங்க... இதுக்குப் பேரு காதலா... மனசும் மனசும் காதலிச்சா அந்த காதல் கண்டிப்பா உடல் சுகம் தேடாது. இதுக காதல் எல்லாம் வெறும் உடம்பு சுகம் தேடுற காதல்தான்... என்னோட இதயத் துடிப்பே நீதான்.... உனக்குள்ள இப்படி ஒரு நினைப்பு இருக்குமுன்னு நான் நினைக்கவேயில்லை."பொரிந்து தள்ளியவள் அவனிடமிருந்து விலகி வேறு இடத்தில் அமர்ந்து கடலை வெறிக்க ஆரம்பித்தாள்.

"ஏய் சாரா... சும்மா உன்னை சீண்டிப்பார்த்தேன் அவ்வளவுதான்...உன்னைய மாதிரியே என் மனசு பூராவும் நீதான் இருக்கே... நீ... நீ மட்டும் தான் இருக்கே... ப்ளீஸ்ம்மா இங்க வா... இல்ல நான் போயிடுவேன்"

"போ... எனக்கு எத்தனையோ பஸ் இருக்கு..."

"ஒகே நான் போறேன்... பை... பை..."

"இந்த பை எனக்கா... நம்ம காதலுக்கா..?"

பதில் கூறாமல் நடந்தான். அவளும் அவனைக் கண்டு கொள்ளாது அமர்ந்திருந்தாள்.

சிறிது நேரம் கழித்து கையில் கடலை பொட்டலத்துடன் வந்து அவளருகில் அமர்ந்தான்.

அவனை பார்த்தும் பார்க்காதது மாதிரி இருந்தாள் சாரா.

"ஏய்... சாரு... நீதான் எனக்கு உலகம்... நீ பேசலைன்னா எனக்கு எதுவும் ஓடாது... ப்ளீஸ்..."

"போறேன்னு போனே..?"

"கடலை வாங்கப் போனேன்..." என்றவனைப் பார்க்க பாவமாக இருந்தது. காதலின் முன் கோபம் பொய்த்துப் போக, "சாரிடா... ரொம்ப படுத்திட்டனோ..." என்ற சாராவின் கரங்களைப் பிடித்துக் கொண்டு "இல்லம்மா நான் அப்படி பேசியிருக்கக்கூடாது" என்றான் சங்கர்.

அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் செய்து கொள்ள அவன் எதிர்பாரா தருணத்தில் அவனது கன்னத்தில் இச் பதிக்க, அவர்களது கோபம் காற்றில் கரைந்தது.




Saturday, May 1, 2010

கொலை கொலையாம்...

(போட்டோ உபயம் :  Google Search Engine)

விடியும் முன்பே கிளம்பிய கண்ணாத்தாவின் அழுகை ஊரையே குலுக்கியது.

என்னாச்சு என்ற முனைப்பில் அவள் வீட்டிற்கு சென்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த முத்துவுக்கு முன்னாள் தலைவிரி கோலமாக அமர்ந்து 'சண்டாளன் என் செல்லத்தை கொன்னுபுட்டானே' என்று பெருங்குரல் எடுத்து கத்தினாள்.

'யார் செய்திருப்பார்கள் இந்த பாதகச் செயலை...?' என்று நினைத்தவர்களுக்கு பதில் சொல்லும்விதமாக 'இந்தப்பய நல்லாயிருப்பானா... சொத்துத் தகராறுல கொலை பண்ண துணிஞ்சிட்டானே.. அவன் குடும்பம் விளங்குமா...? ஐயோ.... என் செல்லமே..." என்று அரற்றினாள்.

எல்லாரும் கூடியிருக்கும்போது இந்த மாணிக்கம் பய வீட்டுல இருந்து யாரையும் காணோம். அவன் தான் பண்ணியிருக்கனும். அண்ணன் தம்பிக்குள்ள சொத்து தகராறு நடக்கிறது உண்மைதான். அதுக்காக ஒரு உயிரை எடுக்கிற தைரியம் அவனுக்கு எப்படி வந்திச்சு...

"யேய் தள்ளுங்கப்பா... ராசண்ணன் வர்றாரு." என்று ஒரு கைத்தடி கூட்டத்தை விலக்கிவிட, ராசண்ணன் என்று அழைக்கப்பட்ட அந்த ஐம்பது வயது மனிதர் காலையிலேயே குளித்து நெற்றியில் விபூதி, குங்குமம் வைத்து மங்களகரமாக இருந்தார். அவர்தான் அந்த ஊருக்கு அம்பலம் (அதான் நாட்டாமை), அதுபோக நாலஞ்சு கிராமத்துக்கு நாட்டம்பலம் வேற... அவரு பேச்சுக்கு அந்த ஏரியாவே மதிப்புக் கொடுக்கும்.

வந்தவர் தலைவிரி கோலமாக இருந்த கண்ணாத்தாவிடம், "ஆத்தா... இதை யாரு செய்திருப்பான்னு நினைக்கிறே...?"

"பெரியய்யா..." என்று அழுகையை கூட்டினாள்.

"யேய்... கிறுக்கி... அதான் ஐயா கேக்குறாகள்ல... நடந்ததை சொல்லுறத விட்டுப்புட்டு ஒப்பாரி வைக்கிறே..?" அம்பலத்துக்குப் பின்னால் நின்று ஒன்று அம்பலம் பண்ணியது.

"வேற யாரு... அவன் தான் பெரியய்யா... சொத்து தகராறுல இப்படி பண்ணிட்டான்"

"வேம்பா... அந்தப்பய வீட்டுல இருக்கானான்னு பாத்துட்டு வா"

"ஐயா... போலீசுக்கு போகணுமா...?" என்றார் ஒருவர்.

"முதல்ல அவன் இருக்கானான்னு பார்ப்போம்... அவன்தான்னு அந்தப்புள்ள சொல்றத நம்பிக்கிட்டு நாம முடிவெடுக்க முடியாதுல்ல... எதுக்காக இது நடந்துச்சுன்னு தெரியலையில்ல..."

"ஆமா..."

"என் கண்ணுமணி... பொண்ணுமணி... கண்ணு நிறைஞ்ச வைரமணி... உன்னை காவு கொடுக்கவா பாத்துப்பார்த்து வளர்த்தேன்... ம்..ஆஆஆஆஆ...."

"இருத்தா... கொஞ்சம் அழுகையை நிப்பாட்டு..."

"ஐயா அவன் பொண்டாட்டி மட்டும்தான் இருக்கு.." என்றபடி வந்தான் வேம்பன்.

"அவளை கூப்பிடு"

"ஐயா... அவளை இங்க கூப்பிட்டு பேசுறது நல்லாயில்லை... ஏன்னா இவ சாகக் குடுத்துட்டு நிக்கிறா... அவ வந்தா அடிக்கக்கூட தயங்கமாட்டா... அதனால நாம நாலுபேரு அங்க போயி பேசலாம்."

"அதுவும் சரிதான்..."

***

"ந்திரா... இந்திரா..."

"வாங்க பெரியய்யா..."

"என்ன புள்ள ஒங்கொலுந்தன் பொண்டாட்டி முத்த வெட்டிப்புட்டாங்கன்னு ஊரையே கூட்டுது... நீ இங்க இருக்கே"

"இல்ல பெரியய்யா... அதுக்கும் எங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லை... அப்புறம் எப்படி..."

"சரி மாணிக்கம் எங்கே..?"

"விடியுமுன்னே எங்கயோ பொயிட்டாரு..."

"முத்த வெட்டுனது அவன் தான்னு அந்தப்புள்ள சொல்லுது... இவனும் ஆளு இல்லை...ம்.."

"அவரு செஞ்சிருக்க மாட்டாருய்யா"

"என்ன புருஷனுக்கு வக்காலத்தா... வேற யாரு இந்த மாதிரி செய்யப் போறா... போன் பண்ணினான்னா உடனே வரச்சொல்லு... என்ன...?"

"சரிங்க... பெரியய்யா..."

***

"எங்குடும்பத்து கொலைய அறுத்துப்புட்டானே... அவன் நல்லாயிருப்பானா... நாசமத்துப் போவான்... அவன் குடும்பம் நடுத்தெருவுல நிக்கணும்..."

"இதபாரு புள்ள... அவன் வீட்டுல இல்லை... எப்படியும் திரும்பித்தான் வரணும். அவன் வரும்போது விசாரிச்சு என்ன பைசல் பண்ணனுமோ பண்ணிக்கலாம் அப்படின்னு நான் நினைக்கிறேன். இல்ல போலீசுக்கு போறதுண்ணா சொல்லு... இப்பவே நான் போன் பண்ணி வரச்சொல்லுறேன். அப்புறம் கோர்ட்டு கேசுன்னு அலையணும்... காசு செலவு பண்ணிக்கிட்டு திரியணும்... என்ன சொல்றே... சுமூகமா போறதுன்னா அடுத்து ஆகவேண்டியதை பார்ப்போம்... இல்ல கேசு குடுக்கிறதுன்னா அதுக்கான வேலையில இறங்குவோம்..."

"எங்ககிட்ட என்ன பெரியய்யா இருக்கு... கேசு போட்டு செலவழிக்க... நீங்களா பார்த்து எதாவது நல்ல முடிவா எடுங்க...வேற என்னத்தை நான் சொல்றது..."

"சரி... அவன் வரட்டும்... பேசிக்கலாம்..."

"ஏய் சுந்தரம் இங்க வாடா" என்று கண்ணாத்தா அழைத்ததும் இதுவரை ஓரமாக நின்றவன் "என்னம்மா" என்றபடி வந்தான்.

"இந்தா... அந்தப்பக்கம் பிடி வீட்டுக்குள்ள கொண்டு போயிடலாம்" என்றபடி தலையை அள்ளிக் கட்டிக்கொண்டு எழுந்தாள்.

அவளும் அவனுமாக தலை தனியாக கிடந்த கிடாயை வீட்டுக்குள் தூக்கிச் செல்ல,

'இனி ரெண்டுமாசத்துக்கு கண்ணாத்தா வீட்டுல உப்புக்கண்டம் மணக்கும்... நல்லா வெட்டியிருந்தாலாவது நமக்கு கொஞ்சம் தருவா... களவாணிப்பய கோபத்துல ஆட்டை வெட்டியிருக்கான் பாரு... ம்ம்ம்ம்ம்..." என்றபடி ஊர் கலைந்தது.

(திருமதி. மேனகாஸாதியா அவர்கள் க்ரைம் கதை எழுதச்சொன்னார்கள். அதனால் இந்த முயற்சி. நமக்கு இது மாதிரிதான் கதை எழுத வரும்.... ஹி... ஹி... ஹி..... தட்டிக்குடுக்கிறவங்க இங்க பின்னூட்டமிடுங்க... திட்ட நினைக்கிறவங்க திருமதி. மேனகாஸாதியா வலைப்பூவை தேடிப் போங்க - நன்றி.)