வணக்கம் நட்பே...! * தங்கள் வருகை நல் வரவாகுக..!! * இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்..!!! சிறுகதைகள்: December 2009

Saturday, December 19, 2009

புரிஞ்சு வாழணும்


ராமநாதனுக்கு மகளின் போக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. செல்லமாய் வளர்ந்த மகள்தான் ‎இருந்தாலும் திருமணத்திற்குப்பின் அவள் செய்கைகளால் அவருக்கு நிம்மதி குறைந்தது.‎

சம்பந்தி வீட்டார் தன் அளவுக்கு வசதி இல்லாதவர்களாக இருந்தாலும் தரமான குடும்பம். ‎மாப்பிள்ளைப் பையன் பிரபலமான கம்பெனியில் விற்பனைப்பிரிவு மேலாளர். நல்ல ‎சம்பளம். எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. இந்த காலத்தில் இப்படி ஒரு பையன் ‎கிடைப்பது என்பது அரிது. ‎

தன் மேல் உள்ள மரியாதையில் மருமகளை சம்பந்தி வீட்டார் எதுவும் சொல்வதில்லை ‎என்பதால் அவருக்கு கொஞ்சம் நிம்மதி. இருந்தாலும் தேவையில்லாமல் கணவனுடன் ‎சண்டையிட்டு நிம்மதியை கெடுத்துக் கொள்ளும் மகளுக்கு புத்தி புகட்ட வேண்டும் என்று ‎மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போது அவரது அலைபேசி சிணுங்கியது.‎

‎"அலோ... ராமநாதன் ஹியர்..."‎

‎"அங்கிள் நான் ரவி..."‎

‎"என்ன மாப்ளே... நலமா... அப்பா அம்மா நலமா... திவ்யா எப்படி இருக்கா?"‎

‎"ம்... எல்லோரும் நலம் மாமா... நீங்களும் அத்தையும் நலமா?.. திவாகர் பேசினானா..?"‎

‎"நல்ல சுகம். திவா நேத்து பேசினான். சென்னையில அவனோட பிஸினஸ் நல்லா ‎போகுதாம். எங்களையும் சென்னைக்கே வரச்சொல்லி பாடாபடுத்துறான்."‎

‎"போக வேண்டியதுதானே மாமா..."‎

‎"அட போங்க மாப்ளே... நம்ம ஊரை விட்டுட்டு அங்க போயி... அதெல்லாம் நமக்கு சரியா ‎வராது. அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி மருமகளை சென்னைக்கு அனுப்பி ‎வைப்போம்."‎

‎"சரி மாமா... சீக்கிரம் நல்ல பொண்ணா பாருங்க."‎

‎"பார்ப்போம் மாப்ளே... வேற என்ன விசயம் மாப்பிள்ளை..."‎

‎"எப்பவும் உள்ளதுதான்..."‎

‎"என்ன திவ்யா... சண்டை போட்டுட்டு வந்துட்டாளா...?" ‎

‎"ம்..."‎

‎"சாரி மாப்ளே... நீங்க எதுவும் நினைக்காதீங்க... அவளுக்கு சரியான பாடம் கற்பித்தான் சரி ‎வருவா... "‎

‎"நீங்க எதுக்கு மாமா சாரி கேட்டுக்கிட்டு... இது என்ன புதுசா..?. கல்யாணமாகி இந்த ஒரு ‎வருசத்துல இது எழுவதாவது தடவைன்னு நினைக்கிறேன்...என்ன செய்யிறது. இன்னமும் ‎புரிஞ்சுக்க மாட்டேங்கிறாளேன்னுதான் வருத்தமா இருக்கு. மாமா நீங்க எதுவும் வேகமா பேச ‎வேணாம். கன்சீவா வேற இருக்கா... ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டும்."‎

‎"அவளுக்கு உங்க மனசுக்கு தகுந்த மாதிரி நடந்துக்க தெரியலையே... மாப்ளே"‎

‎"திருந்திடுவா மாமா... சரி மாமா, பார்த்துக்கங்க... ஈவினிங் போன் பண்ணுறேன்..."‎

‎"சரி மாப்ளே..."‎

போனை வைத்தவர் மனைவியிடம் "உம் பொண்ணு வாறாளாம். மாப்ள போன் பண்ணுனார்" ‎

‎"நீங்க கொடுத்த செல்லம்தான் இப்ப அவ பண்ணுற செயல்களுக்கு காரணம். அவளை என்ன ‎செய்யிறதுன்னே தெரியலை..."‎

சம்பந்தி வீடு அதிக தூரமில்லை பக்கம்தான். ஆட்டோவில் வந்தால் அரை மணி ‎நேரத்திற்குள் வந்துவிடலாம் என்று நினைத்தபடி "இந்த தடவைதான் அவ சண்டை ‎போட்டுகிட்டு வர்றது கடைசியா இருக்கணும்" என்றபடி சேரில் அமர்ந்து தினசரியை ‎கையில் எடுத்துக் கொண்டு செல்பேசியில் யாருடனோ பேசினார்.‎

வாசலில் ஆட்டோ வந்து நிற்கும் ஓசை கேட்டதும் பேப்பரை வைக்காமல் கண்களை மட்டும் ‎வாசலுக்கு கொண்டு சென்றார். மகள்தான்... வரட்டும்... என்று நினைத்தபடி மீண்டும் ‎பேப்பரில் கவனம் செலுத்தினார்.‎

‎"அப்பா..."‎

கண்களை மெல்ல உயர்த்தி " அடடே... வா... திவ்விக்குட்டி... ஆமா மாப்ளே எங்கே? ‎வரலையா..?" என்றவர் "சரிம்மா உள்ள போ" என்றபடி மீண்டும் பேப்பரில் கவனம் செலுத்த ‎ஆரம்பித்தார்.‎

திவ்யாவிற்கு அப்பாவின் செயல் வருத்தம் அளித்தது. எப்பவும் அருகில் இழுத்து உச்சி ‎முகர்ந்து கன்னத்தில் முத்தமிடும் அப்பா முதல் முறையாக வித்தியாசப்படுகிறார். அவரின் ‎செயல் வருத்தத்தை அளித்தது. உள்ளே நுழைந்தது "அம்மா, அப்பாவுக்கு என்னாச்சு?" ‎என்றாள்.‎

‎"என்னடி வந்ததும் வராததுமா... அவருக்கென்ன நல்லாத்தான் இருக்காரு... யாரும் அவருக்கு ‎முடியலையின்னு சொன்னாங்களா..?"‎

‎"ஐயோ... அம்மா... எப்பவும் எனக்கு முத்தம் கொடுப்பாரு... இன்னைக்கு வான்னு ‎சொல்லிட்டு பேப்பர படிக்கிறாரு..."‎

‎"ப்பூ... இவ்வளவுதானா... நான் என்னமோ ஏதோன்னு நினைச்சுட்டேன். உனக்கு ‎கல்யாணமாகி ஒரு வருசமாச்சு. இன்னும் நீ சின்னப்பிள்ளையில்ல... தெரிஞ்சுக்க..."‎

‎"வந்தது ஆரம்பிக்காதம்மா..." என்றாள் கோபமாக.‎

‎"இங்க பாரு..." எதோ சொல்ல வந்தவளை கணவனின் குரல் தடுத்தது. ‎

‎"என்னங்க"‎

‎"நான் கடைத்தெரு பக்கம் பொயிட்டு வாரேன். எதுவும் வாங்கணுமா..? வந்த புள்ளைக்கிட்ட ‎வழவழன்னு பேசாம அதுக்கு சாப்பிட எதாவது கொடு..."‎

‎"ம்க்கும்... மகளை யாரும் ஒண்ணு சொல்லக்கூடாது. சரி வரும்போது நெஞ்செலும்பு ‎இருந்தா வாங்கியாங்க. திவ்யாவுக்கு சூப் வச்சுக் கொடுப்போம்."‎

‎"சரி... நம்ம ராமசாமி வந்தான்னா இருக்கச் சொல்லு." என்றபடி கிளம்பினார்.‎

ராமநாதன் போய் சிறிது நேரத்திற்கெல்லாம் ராமசாமி வந்தார். "வாங்கண்ணே..."‎

‎"என்னம்மா நல்லாயிருக்கியா... அடடே திவ்வி வந்திருக்கா... ஏம்மா மாப்பிள்ளை வரலை..."‎

‎"இல்ல அங்கிள்... அவருக்கு லீவு இல்லை" அழகாய் பொய் சொன்னாள்.‎

‎"எங்க உங்க அப்பன்"‎

‎"கடை வீதிக்கு போயிருக்காங்க"‎

‎"மக வந்திருக்குல்ல... மட்டன் வாங்க போயிருக்காங்க. இப்ப வந்துருவாங்க. நீங்க வந்தா ‎இருக்கச் சொல்லச் சொன்னாங்க... இருங்க வந்துடுவாங்க"‎

திண்ணையில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து திவ்யா கொடுத்த தண்ணீரை அருந்தியபடி, ‎‎"சொக்கனூர் பொயிட்டு வாரேன்" என்றார்.‎

‎"என்ன விசயமுண்ணே... அவ்வளவு தூரம்?"‎

‎"அக்கா மக வீட்டுக்குத்தான்..."‎

‎"சும்மாதானே..."‎

‎"என்னத்தை சும்மா... இந்தா நம்ம புள்ளைங்களை கட்டிக் கொடுத்தோம். அதுக பாட்டுக்கு ‎இருக்குதுங்க. பிரச்சினையில்லாத சம்மந்தம். ராமு திவ்யாவை எப்படி வளர்த்தான்னு ‎ஊருக்கே தெரியும். நாங்கூட எம்மகளை அப்படி வளர்க்கலை. திவ்யா புகுந்த வீடு வசதியில ‎குறஞ்சவங்கன்னாலும் மனசால உயர்ந்தவங்கன்னு அவன் அடிக்கடி சொல்லுவான். அவ ‎இப்ப அவங்க கூட சந்தோஷமாக இருக்கிறது அவனுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு. ‎ஆனா அக்கா பொண்ணு வாழப்போன இடத்துல மாமியா, மாமனாரு, புருஷன் எல்லோரும் ‎கொடுமைக்காரங்க. தினமும் அடி உதைதான். பாவம் அந்த பச்சைப்புள்ள. அப்பாவும் இல்ல. ‎அம்மாகிட்ட சொல்லி அழுதுருக்கு. அக்கா எங்கிட்ட அழுதுச்சு. அதான் இன்னைக்கு போய் ‎வச்சுக்கிறதா இருந்தா அந்தப் புள்ளையை கண்கலங்காம வச்சுக்க. இல்ல அத்து ‎விட்டுடுன்னு சொல்லிட்டு வாரேன்."‎

‎"என்ன அங்கிள் இது அநியாயம்... யாருமே கேட்கலையா?"‎

‎"என்னம்மா பண்றது. நல்ல புருஷன் கிடைக்கணுமுன்னுதான் நாங்க ஆசைப்படுறோம். ‎ஆனா என்ன பண்றது ஒரு சில பேரோட தலையெழுத்து இப்படி. இது பரவாயில்லை ‎இன்னும் சில புள்ளைங்க நல்ல கணவன் அமைந்தும் தேவையில்லாம சண்டை போட்டு ‎வாழ்க்கையை கெடுத்துக்கிறாங்களே அத என்ன சொல்றது. வாழ்க்கையை புரிஞ்சு வாழ்ந்தா ‎சந்தோஷத்திற்கு குறை இருக்காது " என்றதும் திவ்யாவிற்கு சுளீர் என்றது.‎

‎"சரியாயிடுமா அண்ணே..."‎

‎"இனி எல்லாம் சரியாயிடும்முன்னு நினைக்கிறேன். இனியும் அவங்க திருந்தலையின்னா ‎அத்துக்கிட்டு வந்துட வேண்டியதுதான். அதோட தலை எழுத்து... என்ன பண்றது… மாத்தவா ‎முடியும்..." என்றவர், திவ்யாவிடம் "என்னம்மா திவ்வி, மாப்பிள்ளை ராத்திரிக்கு ‎வருவாரா?" என்று கேட்டார்.‎

‎"ஆ..ஆமா அங்கிள்..."‎

‎"இப்ப மாதிரி எப்பவும் சந்தோஷமாக இரும்மா... உங்கப்பன் என்ன கேட்டாலும் வாங்கிக் ‎கொடுப்பான். அவனுக்கு உன் சந்தோஷம்தான் முக்கியம்."‎

‎"சரி அங்கிள்"‎

ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார். ‎

‎"ந்தா கறியும் நெஞ்செலும்பும் இருக்கு... உங்க அண்ணனுக்கும் சேர்த்து சமை... வாடா... ‎எப்ப வந்தே... " மனைவியிடம் கொடுத்தபடி நண்பனை வரவேற்றார் ராமநாதன்.‎

‎"இப்பதான் வந்தேன். சும்மா பேசிக்கிட்டிருந்தோம். மக வந்த உடனே கறி வாங்கப் ‎போயிட்டியா..."‎

‎"ஆமா... வாயிம் வயிறுமா இருக்க புள்ளை... மாப்பிள்ளை நல்லா பார்த்துக்கிட்டாலும் ‎எனக்கு அவ இன்னும் குழந்தைதாண்டா. அவளுக்கு நெஞ்செலும்பு சூப்புன்னா ரொம்ப ‎பிடிக்கும். அதான்... சரி அண்ணி பசங்க நலமா..?"‎

‎"எல்லோரும் நலம்."‎

‎"வாடா தோட்டத்துப் பக்கம் போயி பேசலாம்."‎

‎"என்னடா... வந்த காரியம் சக்ஸஸா..?"‎

‎"ம்ம்... அக்கா மக கதை ஒண்ண சொல்லி திவ்யாவுக்கு மறைமுகமா புரிய வச்சேன். இனி ‎பிரச்சினை இருக்காது. "‎

‎"உண்மையாவா சொல்லுறே..?"‎

‎"ம்... அவ திருந்தணுங்கிறதுக்காக அக்கா மாப்பிள்ளை மேல பழி போடும்படியாயிடுச்சு. ‎பரவாயில்லை. நம்ம புள்ளை நல்லாயிருக்கணும். நீ போன் பண்ணினதும் வய வேலைய ‎அப்படியே போட்டுட்டு வந்தேன். சாப்பிட்ட உடனே போகணும்."‎

‎"ரொம்ப நன்றிடா... எனக்கு எப்படி அவளுக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியலை... அதான் ‎உங்கிட்ட கேட்டேன்."‎

‎"ம்.. நமக்குள்ள என்ன நன்றி... அது இதுன்னு..."‎

பழைய கதைகளை பேசிவிட்டு வீடு திரும்பிய போது திவ்யா அலைபேசியில் கணவனுடன் ‎சிரித்து பேசிக்கொண்டிருந்தாள். ராமநாதனின் கைகள் ராமசாமியின் கைகளை ‎பற்றிக்கொண்டது.‎

(குறிப்பு: வணக்கம். எனது சிறுகதையான 'வெள்ளாமை' தினத்தந்தி - ஞாயிறு மலரில் (20/12/2009) வெளிவந்துள்ளது. )

‎-சே.குமார்




Friday, December 11, 2009

சமையல்

(எனது வலைத்தளங்களான கிறுக்கல்கள், நெடுங்கவிதைகள், சிறுகதைகள், மனசு ஆகிய நான்கிலுமாக இது எனது 100 வது படைப்பு. தொடர்ந்து கருத்துகளை அனுப்பி என்னைக் கூர்தீட்டும் நண்பர்கள் கமலேஷ், சரவணக்குமார், பா.ராஜாராம், பூங்குன்றன் உள்ளிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.)

அது ஒரு 'குக்'கிராமம். அந்த கிராமத்துல இருக்கிற எல்லா வீட்டுலயும் ஒரு சமையல்காரர் இருப்பாங்க. அது சமையல் மேஸ்திரியாகவோ, பந்தியில் நிற்பவராகவோ, எடுபிடியாகவோ இருக்கலாம். அதனால்தான் அது 'குக்'கிராமம்.

நமது கதையின் நாயகர் கருப்பையா மேஸ்திரி. சமையல்ல ராஜா,முகூர்த்த நாட்கள் வந்துட்டா பயங்கர பிசியாயிடுவாரு. அந்தளவுக்கு அவருக்கு தனி மரியாதை. ஒரு மகனும் மூணு பொண்ணுங்களும் அவரது வாரிசுகள். சமையல் வேலை செய்தே நல்லா படிக்க வைத்து, நல்ல இடங்களில் திருமணம் செய்து வைத்தார்.

பேரன் பேத்தி எடுத்தாச்சு இன்னும் சமைக்க போகணுமாப்பா என்று வாரிசுகள் தடுத்தும் இது என்னோட பிறந்தது. என் கட்டை மண்ணுல போறவரைக்கும் இதுதான் என் வாழ்க்கை. நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கு அதுவே போதும் என்று அவர்களின் அன்பு வேண்டுகோளை நிராகரித்து இந்த வயதிலும் சமையல் வேலைக்குப் போகிறார்.

'அம்மா, நீயாவது அவர்கிட்ட சொல்லேன். எங்களோட இருக்கலாமுல்ல.' என்று மகன் பலமுறை அம்மாவிடம் சொல்லியும், 'அவரு நான் சொல்லி எப்ப கேட்டிருக்காரு இப்ப கேட்க. அவரு போக்குலயே விடுங்க...' என்ற பதில்தான் கிடைத்தது.

அதனால் வேலை நிமித்தமாக வெளியிடங்களில் வசிக்கும் பிள்ளைகள் மாதம் ஒருமுறையவது வந்து பார்த்துச் செல்வார்கள். தினமும் போன் செய்வார்கள். பிள்ளைகளைப்பற்றி யாரிடமும் குறை சொல்லதில்லை. குறை சொல்லும் அளவுக்கு பிள்ளைகளும் வைத்துக் கொள்ளவில்லை.

கடந்த ஒரு வாரமாக ஒரு பெரிய இடத்துக் கல்யாணத்தில் சமைத்துவிட்டு காலையில் தான் வந்தார். ஒரு வாரமாக அடுப்பு அணலில் நின்றது அவரை ரொம்ப சோர்வாக காட்டியது.

மனைவி உமையாளுக்கு அவரை பார்த்ததும் பயமாகிவிட்டது. "என்னங்க உடம்புக்கு எதும் சரியில்லையா? என்ன பண்ணுது?" பதறினாள்.

"அட வேலை பார்த்தது அப்படி தெரியுது. வேற ஒண்ணும் இல்லை. குளிச்சுட்டு ஒரு ஒறக்கம் போட்டா சரியாப் போயிடும்."

"சுடு தண்ணி வக்கிறேன்..."

"எதுக்கு... அடி போடி பைத்தியகாரிச்சி... கம்மாயில போயி விழுந்து குளிச்சா உடம்பு வலி கிடம்பு வலி எல்லாம் பறந்துடும். கொஞ்சம் வரக்காப்பி போட்டுத்தாரியா..?

"ம்... இருங்க போட்டுக்கிட்டு வாரேன்." என்றபடி கையை ஊன்றி எழுந்த உமையாளை பார்த்து "கிழவிக்கு வயசாயிடுச்சு... காபி தூளை போடுறதுக்குப் பதில் மிளகுத்தூளை போட்டுறாதே" என்றார் கிண்டலாக.

"ஆமா... இவரு ரொம்ப இளவட்டம்... என்னயவிட ரெண்டு வயசு கூட நினைப்புல இருக்கட்டும்." என்று அவரது முகத்தில் குத்திவிட்டு அடுப்படி நோக்கி சென்றாள்.

காபியை குடித்துக் கொண்டிருந்தபோது போன் அடித்தது. "ஏய்... போன எடு. பிள்ளைகளா இருக்கும்" என்றார்.

"அலோ யாரு...?" என்ற உமையாள் "இருக்காக... இந்தா குடுக்கிறேன்." என்றபடி "இந்தாங்க உங்களுக்குத்தான்" என்று அழைத்தாள்.

"அலோ... கருப்பையா பெசுறேன்..."

"......."

"அடடே.... தம்பியா... அப்படியா.... இப்பதான் வந்தேன். ஆமா... அப்பாகிட்ட சொல்லுங்க... சாயந்திரம் வர்றேன்... கண்டிப்பா ஆறு மணிக்கெல்லாம் வந்துடுறேன். என்ன தம்பி... நீங்க வண்டியெல்லாம் அனுப்ப வேண்டாம்... நான் நடந்தே வந்துருவேன்... ஆகட்டும் தம்பி..." என்றபடி போனை வைத்தார்.

"யாருங்க போனுல?"

"அட நம்ம சேவுகன் செட்டியாரு பையன். வீட்டுல ஏதோ ஒரு விஷேசமாம். அதுக்கு சமைக்கணுமுன்னு பேசுறதுக்காக வரச்சொன்னாராம்."

"பசங்க சொல்லுற மாதிரி சமைக்கப் போறதை விட்டுட்டு பேரப்பிள்ளைங்க கூட இருக்கலாமுல்ல."

"என்ன உனக்கு பேரப்பிள்ளைங்ககிட்ட போகணுமின்னா சொல்லு, இன்னக்கே பஸ் ஏத்திவிடுறேன். போயி இருந்துட்டு எப்ப வர பிரியப்படுறியோ அப்ப வா. அதை விட்டுட்டு என்னய இழுக்காதே."

"ம்க்கும்... கோபம் மட்டும் வந்துரும். என்னமோ செய்யுங்க சாமி.."

நம் பிடியில் காலம் இல்லை காலத்தின் பிடியில்தான் நாம். எனவே காலங்கள் நமக்காக நிற்பதில்லை. ஒருநாள் அவர் சமையலுக்கு சென்றிருந்த பொழுது உமையாள் இறந்து விட்டாள்.

அவரைப் போயி கூட்டி வந்தனர். ரொம்பவே உடைந்து விட்டார். அவர் அழுதது கல் நெஞ்சக்காரரையும் கலங்கச் செய்தது. ஒருபுறம் அடக்கம் செய்துவிட்டு வந்து சாப்பாடு போட அகத்திகீரை உள்பட சில காய்கள் வைத்து சமையல் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை. சமையல் செய்பவரிடம் சென்று "நான் சமைக்கிறேன்" என்றதும், "என்ன மாமா இது? நீங்க சமைக்கிறதா... அத்த செத்துக் கிடக்கிறப்ப... பக்கத்துல இருக்காம...என்ன மாமா இதெல்லாம்..?"

"தம்பி இருக்கான் அவன் பார்த்துப்பான். உங்க அத்தைக்கு என் சாப்பாடுன்னா ரொம்ப..." உடைந்து அழுதார்.

"மாமா..."

"அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவ போறன்னைக்கு நா சமைக்கிறேன். என்னைய சமைக்க விடுங்க"

"என்ன கருப்பையா இது... சின்ன பிள்ளையாட்டம். அவங்க சமைக்கட்டும். நீ வா"

"இல்ல ராமையா... அவளுக்கு எஞ்சமையலுன்னா ரொம்ப பிடிக்கும். கடைசிய நான் சமைக்கிறேனே.." கெஞ்சினார்.

"அவ இருக்கும் போது சமைக்க போனது போதும்ன்னு சொல்லுவாப்பா... ஆனா நான் நிப்பாட்டலை. இன்னையோட நிப்பாட்டுறேன். இதுதான் என்னோட கடைசி சமையல்... கடைசி சமையல்... கிறுக்கு சிறுக்கி நான் உனக்காக சமைக்கிறதுதான் கடைசி..." புலம்பினார்.

"சரிப்பா... அவன் சமைக்கட்டும்... பிரேதத்தை மதியம்தானே எடுக்கப் போறோம். என்ன வர்ற சாதி சனம் ஒரு மாதிரி பேசும். ம்... இவனோட மனசு அதுகளுக்கு எங்கே தெரியப்போகுது."

கண்களில் நீரோடு கரண்டியை வாங்கிக் கொண்டார். உள்ளம் அழுததால் அவரது சமையலில் உப்பு கூடிப்போனது.



Saturday, December 5, 2009

சிறுகதைப் போட்டிக் கதை: பார்வைகள்

செம்மொழிப் பைந்தமிழ் மன்றம் - சிறுகதைப் போட்டிக் கதை

குறிப்பு : ஒரு இளைஞன்... ஒரு இளம்பெண்... ஒரு ரயில்/பஸ் பயணம்... காதல்.
(படித்து பின்னூட்டம் இடுங்கள். மறவாமல் வாக்கும் அளியுங்கள்.)

சிறுகதைப் போட்டி நடத்தும் வலைத்தளம்: http://simpleblabla.blogspot.com



அரசு விரைவுப் பேருந்து திருச்சியிலிருந்து இராமேஸ்வரம் நோக்கி இருட்டைக் கிழித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இரவு நேர பயணமாதலால் அதிக கூட்டமில்லை. சன்னல் அடைத்திருந்த போதும் மார்கழி மாதக் குளிர் பேருந்துக்குள் இருக்கத்தான் செய்தது. சேலைத்தலைப்பை இழுத்து மூடிக் கொண்டு சன்னலோரமாக அமர்ந்திருந்தேன்.

பேருந்துக்குள் ஆடியோ, வீடியோ இரண்டும் வேலை செய்யாததால் இருந்த பத்துப் பேரும் நிம்மதியாக இருந்தோம்.

பேருந்து ஓட்டுநர் நிறுத்தம் இல்லாத ஒரு இடத்தில் திடீரென பேருந்தை நிறுத்தினார். எதற்கு இங்கு நிறுத்துகிறார் என்று யோசிக்கும் போதே ஒரு இளைஞனும் யுவதியும் அவசர அவசரமாக ஏறினர். பேருந்து விளக்கில் அவர்களது முகம் சரிவரத் தெரியாவிட்டாலும் வீட்டை விட்டு ஓடிவந்த காதல் ஜோடி என்பது எனக்குப் புரிந்தது. அவர்கள் எனக்கு முன் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.


நடத்துனரிடம் இராமநாதபுரத்துக்கு பயணச்சீட்டு வாங்கினர். அந்தப் பெண் அவனது தோளில் சாய்ந்து கொண்டாள். அவர்களை பின்னால் இருந்து பார்த்தபோது அவனுக்கு இருபது வயசுக்குள் இருக்கும். அவளுக்கு பதினெட்டு நிரம்பியிருக்க வாய்ப்பில்லை. 'இந்த வயதில் காதல். இதுகளாலே வாழ்க்கை போராட்டத்துல வெல்லமுடியுமா? .' அவர்களது பேச்சு எனது சிந்தனையை கலைத்தது.

"எனக்குப் பயமாயிருக்கு..." அந்த யுவதி தோளில் சாய்ந்தபடி விசும்பலினூடே பேசினாள்.

"அசடு நான் இருக்கேன். எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..." .

'ம்... இவனுக்கிட்ட என்ன இருக்கு... எப்படி பார்ததுப்பான்' எனக்கு கோபம் வந்தது.

"இல்ல.. சித்திக்கு தெரிஞ்சா..."

"தெரிஞ்சா என்ன பண்ணமுடியும்..? யார் வந்தாலும் நான் பார்த்துக்கிறேன்..."

'அடேங்கப்பா... இவரு தமிழ் சினிமா கதாநாயகன் எத்தனை பேரு வந்தாலும் பறந்து பறந்து அடிச்சு விரட்டப் போறாரு. மூதேவி... இழுத்துக்கிட்டுப் போற பொண்ணுக்கு ஒருவேளை கஞ்சி ஊத்துமான்னு தெரியலை... இவரு பார்த்துப்பாராம்.' எனக்குள் கோபம் எரிமலையாய் கனன்றது.

"இல்லை... என்ன நடக்குமோன்னு எனக்குப் பயமா இருக்கு..."

அவன் அந்த யுவதியோட நெத்தியில முத்தமிட்டு "எதையும் நினைக்காம அப்படியே தூங்கு. எதாயிருந்தாலும் நாளை பார்த்துக்கலாம்." என்றபடி அணைத்துக் கொண்டான்.

எனக்கு அதற்கு மேல் பொறுமையில்லை. தம்பி என்று அந்தப் பையனை அழைத்தேன். அவனும் என்ன என்பது போல் திரும்பினான்.

"உனக்கு வயசு என்ன?"

"என்னோட வயசு உங்களுக்கு எதுக்கு மேடம்...?"

"சொல்லுப்பா..."

"பத்தொன்பது... ஏன்?"

"இரு... அவசரப்படாதே...படிக்கிறியா..."

"இல்லை..."

"ம்ம்... இவ படிக்கிறாளா...?

"ஆமா..."

"இந்த வயசுல வாழ்க்கையின்னாலே என்னன்னே தெரியாது. அப்புறம் எப்படி?"

"நீங்க என்ன சொல்லுறீங்கன்னு புரியலை..."

"புரியலையா... அதான் இழுத்துக்கிட்டு ஓடுறியே... குடும்பச்சுமையின்னா என்னன்னு தெரியுமா..?"

"இழுத்துக்கிட்டு ஓடுறேனா... என்ன சொல்லுறீங்க..."

"என்னப்பா புரியாத மாதிரி நடிக்கிறே... உன்னோட ஆசை தீரும் வரைக்காவது அவளை... "

"மேடம்..." அவனது கத்தலில் பேருந்துக்குள் இருந்த அனைவரும் எங்கள் பக்கம் திரும்பினர்.

"உண்மைய சொன்னா கத்துறே..." நானும் பதிலுக்கு கத்தினேன். அந்தப் பெண் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தாள்.

"எதுங்க உண்மை... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தா காதலர்களாத்தான் இருக்கணுமா...?"

"காதலர்களா இல்லைன்னா நீங்க ஏன் இந்த நேரத்துல ஓடிவந்து ஏறணும்... அப்பா அம்மாவை மறந்து இவளுகளும் அரிப்பெடுத்து ஓடியாந்துடுறாளுங்க..." கோபத்தில் யோசிக்காமல் வார்த்தையை விட்டேன். அந்தப் பெண் அழ் ஆரம்பித்தாள்.

"இப்ப அழு... ஆத்தா அப்பன் மொகத்துல கரியை பூசிட்ட்டு..."

"பேச்சை நிறுத்துங்க மேடம். அப்புறம் மரியாதை கெட்டுடும். இவ யாரு தெரியுமா என் தங்கை... ஒரு பையனும் பொண்ணும் தனியா வந்தாளே காதலிக்கிறாங்கன்னு ஏன் நினைக்கிறீங்கன்னு தெரியலை. நீங்க மட்டும் இல்லை நாட்டுல முக்கால்வாசி பேர் அப்படித்தான் நினைக்கிறீங்க. அது ஏன்னே தெரியலை. தனியா வண்டியில போறது அண்ணன் தங்கையாக இருந்தாலும் உங்க பார்வைக்கு தப்பாத்தான் தெரியுது. அதனாலதான் இன்னைக்கு பெரும்பாலான அண்ணன் தங்கைகள் சேர்ந்து எங்கயும் போறதில்லை." சிறிது நிறுத்தியவன் மீண்டும் தொடர்ந்தான்.

"யாரையும் பர்ர்த்தவுடனே தப்பா எடை போடுறதை நிறுத்துங்க. எங்களுக்கு அம்மா இல்லை. அப்பா ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. சித்தி எங்களுக்கு நல்லவங்களா அமையலை. எவ்வளவு கொடுமை பண்ண முடியுமோ அவ்வளவும் பண்ணிட்டாங்க. அப்பா எதுவும் கேட்கிறதில்லை. நான் படிக்கலை. ஆனா இவ நல்லா படிப்பா. இப்ப இவ படிப்ப கெடுத்து சித்தியோட சொந்தத்துல ஒரு குடிகாரனுக்கு கட்ட ஏற்பாடு நடக்குது. இவளை நல்லா படிக்க வைக்கணும். எங்க அம்மா செத்தப்புறம் எங்க அப்பா வேற கல்யாணம் பண்ணியதால மாமா வீட்டு உறவு அத்துப்போச்சு. இருந்தாலும் மாமா உதவுவருங்கிற நம்பிக்கை இருக்கு. அதனால அப்பா, சித்தி எல்லாம் பக்கத்து ஊருக்கு ஒரு விஷேசத்துக்கு போயிருக்கிறதால யாருக்கும் தெரியாம மாமா ஊருக்கு கிளம்பிட்டோம். "
அவனுக்கு கண்ணீர் வந்தது. அந்தப் பெண் தனது தாவணியால் துடைத்தாள்.

எலலோரும் என்னை புழுவைப்போல பார்த்தனர். எனக்கு என்னவோ போல் ஆகிவிட்டது. அந்தப் பையனின் கைகளை பிடித்துக் கொண்டு ' ஏனோ தெரியலை இந்த பார்வை நல்ல நோக்கததுல பார்க்கிறதை விட கெட்ட நோக்கத்துலதான் அதிகம் பார்க்குது. என்னை மன்னிச்சுடுப்பா... ' என்றேன்.